Saturday, May 11, 2019

சனிபகவான்


சனிபகவான்

மந்தனாம், ஆனால் ஆளை
                வதைப்பதில் சூரன் தானாம்
பந்தமும், பரிவும், பாசம்
                பக்குவம் அனைத்தும் சேரும்
சிந்தையில் சனியன் வந்தால்
                சிறகினைப் பெற்றுப் போகும்
முந்தியோர் நளனின் வாழ்வில்
                மூண்டதை மறக்கப் போமா?

எட்டிலே சனியன் என்றும்
                எழரை ஆட்டை என்றும்
கிட்டிய ஜன்மம் தன்னில்
                கேடுறச் சேர்வ தென்றும்
கெட்டதே செய்வான் என்றும்
கேடுறப் பேசுகின்றோம்
                மட்டிலா வாழ்வுப் போக்கை
                                வகுப்பவன் சனியன் தானே!

தீயதன் வெம்மைக் குள்ளே
                சேர்ந்திடும் ஒளியைப் போலே
தாயவள் தரும ருந்தில்
                சார்ந்திடும் குணத்தைப் போல
காயிலே கரந்தி ருக்கும்
                கனிச்சுவை அதனைப் போல
தீயதைக் காட்டி, நன்மை
                சேர்த்திடும் சனியன் வாழ்க!

நிழலதன் அருமை வெய்யில்
                நீர்மையில் தெரியும், வாழ்க்கைச்
சுழலிலே இன்பம் துய்க்கத்
                துன்பமும் தெரிய வேண்டும்
பழகுமிவ் வனுப வத்தில்
                பயன்பெறத் தகுமோர் தெய்வம்
அழகுறச் சனியன் என்னும்
                ஆதித்தன் மைந்தன் வாழ்க!



சனிக்கிழமை

சருகென இலைகள் வாடிச்
சரிவதால் தானே மண்ணில்
பெருகிடும் தளிர்கள் தோன்றிப்
பிறப்பதன் சரிதம் கூறும்
வருகிற காலந் தன்னில்,
                வாரத்தின் கடைசி நாளில்
உருள்கிற சனியே ஓடி
                ஒளிதரு ஞாயி  றாகும்.


நகைச்சுவை

இரஞ்சனி, மீன லோசனி என்றிரு
வஞ்சியர் தம்முள் வாய்த்த ஒருத்தியை
மனைவியாய் ஏற்று வாழ்க்கை நடத்தென
எனையிரு நண்பர்கள் இனிதே அழைத்தனர்
பஜ்ஜி சொஜ்ஜி பாங்குடன் தந்தபின்
இச்சைக் கிளிகளை என்முன் கொணர்ந்தனர்
இரஞ்சனி கண்கள் இராக்ஷஸக் கண்கள்
மீன லோசனி விந்தி நடந்தாள்
சனிகளில் ஒன்றைத் தலையில் கட்ட
எத்தனை முயற்சிகள் எத்தனை முயற்சிகள்!
என்ன செய்வதென் றேங்கும் காலை
ஆதவன் சந்திரன் அடுத்தெனை அழைத்தனர்
இரண்டு கோள்கள் இணைப்பென் பதனால்
ஒற்றைக் கோளின் ஊறெனக்கில்லை
என்றே அவளை ஏற்றுக் கொண்டேன்
பானுவும் மதியும் பாங்குற வந்ததால்
சனியன் என்னைச் சாடுவ தில்லையே!

சனிபகவான் அருளாலே சங்கடங்கள் தீரும்
  சத்துருக்கள் பயம் ஒடுங்கும் சந்தோஷம் பொங்கும்
இனியெமக்குக் குறையேதும் இல்லாமல் காப்பான்
   எல்லோர்க்கும் சமநீதி வழங்குகிற தேவன்
கனிவுடனே மனமிரங்கிக் காத்தருள வேண்டும்
    கஷ்டங்கள் போக்கியொளி பூத்தருளா வேண்டும்
இனியவனே சனிதேவா எமைக்காக்க வாவாவா
    இன்பங்கள் பொங்கிடவே நின்னருளைத் தாதாதா!



No comments:

Post a Comment