Sunday, May 12, 2019

வாராகி திருநட்சத்திர மாலை


வாராகி திருநட்சத்திர மாலை
திருநட்சத்திரமாலை என்பது தமிழ்ச் சிறுபிரபந்தங்களில் ஒரு வகை. பல திருநட்சத்திர மாலைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. அவை பெரும்பாலும் அந்தாதியாக அமைவதில்லை. ஒவ்வொரு பாடலிலும் ஒருநட்சத்திரத்தின் பெயர் வரிசைக் கிரமமாக வரும். அந்தாதியாக அமைந்தால் சிறப்பு. 2010ம் ஆண்டில் எனக்கு கோலன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு “என் தந்தைக்கு சிக்கல் இல்லாமல் எல்லாம் நலமாக முடிந்தால் என் தந்தையை வாராஹி அந்தாதி எழுதச் சொல்கிறேன்” என்று வேண்டிக்கொண்டான் என் மகன். . முதல் கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அறுவை சிகிச்சை நலமாக முடிந்து நான் பூரண நலம்பெற்றேன். அதைத்தொடர்ந்து வாராஹி அந்தாதி எழுதத்தொடங்கினேன். 14 பாடல்கள் எழுதிமுடித்த நிலையில் அமெரிக்கா வந்துவிட்டேன். அந்தாதி எழுதி வைத்த ஏடு தொலைந்துவிட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. 27பாடல்கள் தாரக அந்தாதியாக எழுதுங்கள் போதும் என்று குரு சொன்னார்.. அப்பொழுது திருநட்சத்திரமாலை வடிவில் அந்தாதியாக எழுத வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. சற்றுக்கடினமான பணி.
இந்த நூலில்
வாராஹியைப் பற்றிய விவரங்கள் முடிந்த அளவு வரவேண்டும்
ஒவ்வொரு பாடலிலும் வரிசைக்கிரமமாக ஒரு நட்சத்திரத்தின் பெயர் வரவேண்டும். அது பாடுபொருளுக்கு ஏற்ப அமையவேண்டும்.
அந்தாதியாக அமைய வேண்டும்.
மாறுபட்ட கருத்துக்கள் இல்லாமல் உபாசகர்கள் ஏற்றுக் கொள்கிற வகையில் அமைய வேண்டும்.
எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளைக் கலித்துறையில் அமைய வேண்டும்.
அதிகக் கட்டுப்பாட்டுகள் என்பதெல்லாம் அன்னை வாராஹியின் அருள் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? எந்தத் தடங்கலும் இன்றிப் பாடல்களை மளமளவென்று எழுத முடிந்தது.  வாராஹி உபாசனையைப் பற்றி ஸ்ரீதுர்க்கைச் சித்தர் எழுதியுள்ள புத்தகமும் ஸ்ரீ சீனிவாசராகவன் என்பவர் எழுதிய புத்தகமும் அமரர் நாராயண பாரதி எழுதியுள்ள வில்லும் அம்பும் என்னும் புத்தகமும் விவரங்களைத் திரட்ட உதவின. வாராகி உபாசனை செய்யும் எனது மகன் சீநிவாசராகவன் பல அரிய விவரங்களைக் கூறினான்.
வாராகிமாலை, துர்க்கைச் சித்தர் எழுதியுள்ள வாராகி ஸ்தோத்திரம், கவிஞர் நாராயண பாரதி எழுதியுள்ள வாராகி ஆற்றுப்படை, சாதுராம் சுவாமிகள் இயற்றிய வாராகியைப் பற்றிய பாடல் ஆகியவை தவிரத் தமிழில் வாராகியைப் பற்றிக் கவிதை நூல்கள் வேறு அதிகம் இல்லை எனத் தெரிகிறது.
மதுரகவி என்னும் பெருங்கவிஞர் திருமாலின் மேல் திருநட்சத்திரமாலை எழுதியிருக்கிறார். இந்தத் திருநட்சத்திரமாலை எழுதுவதில் அது எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. அவர்கூட அந்தாதியாக அதை எழுதவில்லை. சில நட்சத்திரங்களுக்கு அவர்கையாண்ட உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
இத் திருநட்சத்திர மாலை எழுத ஊக்கமளித்ததோடு மட்டுமல்லாமல் கையெழுத்துப் பிரதியைப் படித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கி ஆசீர்வதித்த குரு (ஸ்ரீஆனந்தாநந்தநாதர்) ஸ்ரீ ஆனந்தாம்பா) அவர்களுக்கு எனது நன்றி.
வாராகி
சப்த மாதாக்களில் ஐந்தாவதாக அமைந்து அருள் புரிபவள்.
கனிவு ஒருபுறம் கடுமை ஒருபுறம் காட்டுபவள். பக்தர்களைப் பொறுத்தமட்டில் அவள் அருளரசி. ஆனால் பக்தனிடம் தவறு கண்ட இடத்துக்  கடிதோச்சி மெல்ல எறிபவள். ஆம். தண்டிப்பவள். அதனால் தண்ட நாதா என்று பெயர் பெற்றவள். ஆனால் தண்டனையையே சாதகமாக்கி அருள் செய்பவள். அவள் லலிதா மஹா திரிபுர சுந்தரியின் படைத்தளபதி. ஆனாலும் லலிதையின் ஓர் அங்கமாகவே திகழ்பவள். தேவி மஹாத்மியத்தில் இதற்கான ஆதார மிருக்கிறது. என்னை எதிர்க்க இத்தனை பேரா என வினவிய சும்பன் முன்னே வாராஹி முதலிய தேவிகளை தன்னுள்ளே ஈர்த்துக்கொண்டு தனியளாக அரக்கனை எதிர்த்தாள் தேவி.
ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமான சிந்தாமணிக் கிரஹ நுழைவாயிலில் வாசம் செய்யும் நாயகி வாராகி. மஹாபத்ம அடவியில் வடகிழக்கு மூலை அவளது இருப்பிடம் என்றும் சொல்லப்படுகிறது. தாம் செய்யும் செயல்களுக்கேற்ப பல பெயர்கள் , பல வண்ணங்கள், கரங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் கொண்டு விளங்குகிறாள்..
அவள் பவனிவரும் ரதத்திற்கு கிரிசக்ரம் என்று பெயர். "கிரிசக்ர ரதாரூடா தண்டநாதா புரஸ்கிருதா" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். திருவானைக் காவில் அருள்தரும் நாயகி அன்னை அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ வாராகியின் அம்சம் கொண்டவள் என்றும் அவளது உக்கிரத்தைத் தாடங்கம் அணிவித்து ஆதிசங்கரர் தணித்தார் என்றும் கூறப்படுகிறது.
கடலுக்குள் ஆழ்ந்திருந்த பூமியை திருமாலின் வராஹ வடிவில் தமது கொம்புகளுக்கிடையில் மீட்டவள் அவளே என்று சொல்லப்படுவதுண்டு.
ஆஷாட நவராத்ரி நாயகி வாராகி.
வராஹம் எப்படிப் பூமியைப் பிளந்து கிழங்கைக் கெல்லி எடுக்குமோ அவ்வண்ணமே நமது அகந்தைக் கிழங்கைத் தோண்டி எடுப்பவள் வாராகி. அதுமட்டுமல்ல. தன் பக்தர்களின், பாபங்கள், முற்பிறப்பின் தீவினைகள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து அழிக்கிறாள்.
ஆக்ஞா சக்கரத்தில் நின்று ஆட்சி புரியும் வாராகி மனம் ஒன்றி ஞானம் பெற வழிவகுக்கிறாள். வாக்கருளுவதில் வாராகிக்கு நிகர் அவளே!. வாதப்போரில் தன்னுடைய பக்தன் தடுமாறாமல் எதிரியின் மனத்தை மயக்கி பக்தனுக்கு வாக்கருளுகிறாள். "வாராகிக் காரனோடு வாதாடாதே" என்று இதனால்தான் சொல்லப்படுகிறது. ஐயப்படாது அகத்திருத்துவோருக்கு எய்தும் நலங்கள் ஏராளம்
பஞ்சமி, அஷ்டமி நவமி அவளைத் தொழ ஏற்ற திதிகள். அப்படியென்றால் மற்ற தினங்களில் தொழக்கூடாது என்பதல்ல. அம்மூன்றும் விசேஷ தினங்கள்."குருவின்றிக் கொடுக்காது.  குருவிருந்தால் கெடுக்காது" என்பது எல்லா உபாசனைகளுக்கு ஏற்ற முதுமொழி. இது வாராகி உபாசனைக்கு இன்னும் கொஞ்சம் தூக்கலாகவே பொருந்தும்.
உபாசனை இன்றியும் தொழக்கூடாதா?
ஏன் கூடாது? அவள் காதுகள் இரண்டும் நமது வேண்டுதலுக்காகத் திறந்தே இருக்கின்றன. 
பயந்தீர, வாதில் வெல்ல, இழந்தவை மீட்க,பகை வெல்ல, துணிவு கொள்ளவேண்டுமென்றால் தோத்திரம் செய்து தொழுது வேண்டலாம்.
அதற்கு ஒரு படிக்கட்டுத்தான் இந்த வாராஹி திருநட்சத்திர மாலை.


            திருநக்ஷத்திர மாலை
காப்பு
சிந்தா மணிக்கிருகத் தேர்வாசல் வாசம்செய்
நந்தா மணிவிளக்கு நாயகியாள்- முந்துபடை
"வாராஹி  தாரக அந்தாதி " நான்பாடக்
காரானை பொற்பாதம் காப்பு
நூல்
உலகம் நிலையாய் உருளப் புரிந்தே உதவியவள்
கலகம் எதுவும் கழல்பணி பக்தன் கதவிருந்து
விலகும் படிக்கு விதிக்கும் அசுவதி வித்தகியாள்
இலகும் நலத்தாள் இதம்புரி வாராஹி ஏத்துவமே!                1       
(அசுவதி- அஸ்வாரூடா     

ஏத்துப் புரக்கும் இனிய தளபதி, ஏற்புடனே
காத்துக் கருப்பால் கலங்கா திருக்கும் கதிதருவாள்
யாத்த கவிதை அனைய ஒழுங்கினில் அன்பரணி
பூத்துச் சிரிப்பாள் பொருந்திடும் வாராஹி பூரணியே                 2

அணியாய் இருகரம் அங்குச பாசம் அமைந்திருக்கப்
பணியார் தமையே பயப்படச் செய்யும் படைகளுடன்
திணியார் வலிமை திருக்கார்த் திகையொளித் தேசுடனே
துணையாய்த் தொழுவோர் சுகம்பெற வாராஹி தோற்றுவளே!     3

தோற்றும் சிரசில் உரோகிணி காந்தன் சுடர்விடவும்
ஊற்றும் பசுமை உடல்நிற மாக ஒளிவிடவும்
ஏற்றும் விழிகள் எரியும் கனிவும் இழைத்திடவும்
ஆற்றும் அழகில் அமர்கிறாள் வாராஹி ஆனந்தமே!              4
ஆனந்தம் நல்கும் அருளுடை அம்பிகை , அற்புதமாய்த்
தானந்த மான மிருக சிரத்தாள் சதுர்புஜத்தாள்
ஏனிந்த வண்ணம் எதிர்த்தோம் எனவே எதிரிகளும்
வானந்தம் காணவைப் பாளெங்கள் வாராஹி மாணிக்கமே!        5

மாணிக்கக் கண்கள் மரகத மேனி, வராஹமுகம்
ஆணிப்பொன் மேனியன் ஆதிரை யானும் அதிசயிக்கப்
பேணிக்கொண் டுள்ள பெருநெடுந் தோள்கள்,, பிறைநகங்கள்
காணக்கண் கோடியும் வேண்டும்நம் வாராஹி காண்பதற்கே!    6

காண்பதற் கிங்கே  கடுமை  எனவே கருதுபவர்
மாண்புப் புனர்வசு மன்னவன் வில்லம்பில் வந்திடினும்
தீண்டும் கடுமைகொள் தேவனென் றேமனம் சிந்திப்பரோ
பூண்பலா போன்றநற் பொற்பினள் வாராஹி போர்மகளே!         7

போர்மகள், ஞானப் புகழ்மகள், வேதப் புனிதமெலாம்
தேர்மகள் செம்மஞ்சள் பூசம்பந் தத்தினள் சேர்சினத்தில்
வேர்வரை சென்றே எதிரியை வீழ்த்தும் வினைகளிலே
நேர்மகள் வீரம் திகழ்மகள் வாராஹி நேசத்தளே!                8
      
நேசத்தள் ஆயிலி யம்திரு நெஞ்சத்தள், நேருமுப
தேசத்தில் பாசத்தள், சேர்மணி தீபத் திருநகரில்
வாசத்தள், அன்பு வடிவத்தள், மாறி மறித்துநிற்கும்
நீசத்தை வீழ்த்தும் நியாயத்தள் வாராஹி  நிர்மலையே!          9
(ஆயிலி -  தாய்வழிப் பிறவாதவள்)


மலைகளும்  தோற்கும் மதர்த்த வடிவாள் மறித்திடும்போர்க்
கலைகளும் தாமகம் கண்டே சுருதிக் கழல்பணியும்
அலைகடல் பொங்கி அலைப்ப தெனவரும் ஆழ்துயர
வலைகளைப் பிய்த்தே எறிவள்நம் வாராஹி வாழ்வளித்தே               10

அளித்திடும் வெற்றி அவள்பதம் என்றே அறிந்துகொண்டு
களித்திடும் அன்பர் கனிவுடன் கற்பூரம் காட்டிடுவார்
வளைத்திருள் வந்திடும் மாலை கழிந்த வளரிரவில்
திளைத்து வணங்குதல் செய்கநம் வாராஹி தெய்வத்தையே1     11
  
தெய்வத் திருபஞ்ச பாணத்தில் தோன்றிச் சிறப்புடனே
செய்ய கிரிசக்ரத் தேர்ரதம் ஊரும் திரிநயனி
எய்தும் விவாதத் தெதிரி ஜெயக்கொடி ஏற்றிடுமுன்
உய்வளிப் பாளன்பர்க் கூட்டுவள் வாராஹி உத்தரமே                           12


உத்தரம் போலே உறுதியிற் காத்திடும் உத்தமியாள்
பத்திர மாகப் பயங்களைப் போக்கிப் பரிசளிப்பாள்
அத்தமும் ஆதியும் ஆகியே தம்மரும்  அத்தங்களில்
அத்திரம் ஏந்தி அருளுவள்  வாராஹி ஆதரித்தே!                        13

ஆதரித்(து) ஆக்கம் அளித்தே புரப்பவள் ஆயசக்தி
மாதரில் ஐந்தாம் வரிசை பெறுபவள், வாஞ்சையுடன்
ஓதரும் ஞானம் உதவும் வி சித்திரை, ஒப்பரிய
சாதகம் நல்கிடும் தந்திரம் வாராஹி சாதிப்பளே!                 14

சாதிக்க வேண்டும்சொல் தர்க்கத்தில் என்கிற தாகமுளோர்
வாதிக்கும் துர்நச்சு வாதி பயந்து மயங்கிடவே
ஆதிக்கம் நல்கிடும் வார்த்தாளி  போற்றி அடிபணிந்தால்
சோதிக்கும் போது  துயரற வாராஹி தோன்றுவளே        15
தோன்றும் வடிவும் சொலமுடி யாத தொகைவகையாய்
ஊன்றும் பயிரவி சாகம் பரியென உண்டுபல
ஆன்ற திருப்பெயர் அன்பர்கள் பாடி அடிபரவ
மூன்று திருவிழி யாள்நிறை வாராஹி முன்னிற்பளே!            16

முன்னிடும்  அந்தினி ரும்பினி ஜம்பினி மோஹினியாள்
மின்னலாய்ப் பாய்ந்து விசுக்கிரன் தன்னையே வீழ்த்தியவள்
மன்னிடும் காம னுடம்பெரி செய்த மலைச்சிவனும்
நன்னய மாய்ப்புகழ் நல்கிடும்  வாராஹி நாயகியே!        17
அனுடம்
நாயகி, பஞ்சமி  நற்தண்ட நாதா நலமருளும்
தாயகி வார்த்தாளி பஞ்சமி தாக்கிடும் , சண்டையிலே
போயெதிர் நின்று பொருது நம் கேட்டைப் பொசுக்கிடுவாள்
ஆயநற் செல்வம் அளித்திடும் வாராஹி ஆரமுதே!               18

ஆரமு தேயென அன்பர் தொழுதே அகமகிழ,
சேரமு தாகத் திகழ்கிற ஆக்ஞா திகிரியிலே
ஓரமு தாக மனத்தை அடக்க உதவிடுவாள்
பேரருள் மூலப் பிழம்பவள் வாராஹி பேசுவளே!                      19

பேசுவள் சொப்பனப் போதில் மிகுந்த பொலிவுடனே,
வீசுவள் பூராடம் பத்தில் கருவம் மிகுந்தவரை
பூசுவள் வெற்றிப் பொடியள்ளி, உண்மைப் புனிதமிலா
மாசுகள் நீங்கிய நெஞ்சினில்  வாராஹி வாழுவளே!              20
(குறிப்பு- பூரா டம்பத்தில் )


வாழும் பொழுதினில் வந்தடி வீழும் மனிதருக்குச்
சூழும் நலங்கள் தொகுத்துக் கொடுப்பாள், துணையிருப்பாள்
ஊழில் அலுத்திருத் ராஷாடத் தம்மையை உள்தொழுவீர்
ஆழ நினைப்பீர் அரியநம் வாராஹி அன்னையையே!!             21
(உத்திராஷாடம்– உத்திராடம் – ஆஷாடம் –ஆடிமாதம்)     

அன்னை, வராஹன் அருந்திரு வோணன் அரியவனாய்
முன்னைப் புவியைக் கடலடி மூழ்கி முகந்தெடுத்தாள்
தன்னை வணங்கிடும் பக்தர்கள் சங்கடம்  தானழித்தே
அன்னது மீளா தருளுவள் வாராஹி ஆட்படவே                  22                                                                                                            படவிட்ட வட்ட பலவிட்ட சக்கரப் பாதையிலே
விடவிட்டு விட்ட விதியட்டுத் தீய வினைதடுப்பாள்
படைமுட்டு தீமை பலப்பட்ட போது படையெடுத்தே
உடைபட்டுப் போக ஒழித்தவள் வாராஹி உத்தமியே!             23   

உத்தமி, எல்லா உலகும் பயந்தே உதறும்படி
சத்தமிட் டேவந்த ரக்தபீ ஜன்தனைத் தண்டித்தவள்
புத்திகெட் டேநஞ் சதையம் மதுவாய்ப் புகலுகிற
பித்தினை வீழ்த்திப் புரந்திடும் வாராஹி பேரருளே                                 24

பேரரு ளாட்டி, பதின்மூன்றும் நூறும்  பிழையறவே
யாருரைப் பாரவர்  முன்னே மகிழ்வாய்  அவள்நடப்பாள்
சீரற வெற்பூரட் டாதி தருமம் செழிக்கவைத்த
காரணி, பாதம் கருதுக வாராஹி காப்பதற்கே!     
குறிப்பு: வெற்பூர் அட்டு ஆதி தருமம் செழிக்க)     `                               25

காசுக் கெனவே கழிகிற வாழ்வில் கதித்துவரும்

மாசுத் திரட்டாதி மாயப் புரிந்து மறுகுடலில்
வாசம் தவிர்த்திடும் மாமணிப் பாதம் மனம் நினைந்து
பூசை புரிக, புகழ்நிறை வாராஹி போற்றிடவே!                  26        
 (குறிப்பு: மாசுத் திரட்டு ஆதி மாய)

போற்றுவ ரேவதி  யும்படி நெஞ்சில்  புகலுவரே
ஏற்றுவரே மனம் எண்ணுவ ரே உள் இழிவுகளை
மாற்றுவ ரே யவள் மாணருள் நெஞ்சிடை மாந்திடுவர்
ஆற்றும் அருளால் அடைவர்பின் வாராஹி ஆளுலகே           !27

நூற்பயன்
வாராஹி தாரக மாலையை நெஞ்சிலே
ஆரா தனைசெயும் அன்பர்க்கே- நேரான
உச்சப் பரிசாம் உயர்முக்தி தானளிப்பாள்
இச்சக்திக் கில்லை இணை!






No comments:

Post a Comment