Sunday, May 12, 2019

வாராகி பஞ்சகம்


வாராகி பஞ்சகம்

யாரா கிலும்தம் அவதிகள் நீங்க , அகம்கனிந்தே
வாராகி பாதம் வணங்கிட அன்னார் மனவிழைவைத்
தாராதி ராள்அன்பில் தாங்கா திராள்தன் தயவுவிழி
பாராதி ராள்உள் பரிவாய் இருக்கின்ற பஞ்சமியே!        1

பஞ்சமி, பைரவி , பாசாங் குசைஉள் பரிந்தளிக்கக்
கஞ்சமி  லாதாள் கருடனில் ஏறிக் ககனமெலாம்
விஞ்சை யுலாவரு வித்தகி, வாராஹி, வேண்டியடி
தஞ்ச மெனவரு வோர்தமைத் தாங்கும் தயாபரியே! 2

பரியேறு வாள்,சினம் பாய்ந்து வருகிற பாரிசத்தில்
அரியேறு வாள் எரு மையேறு வாள், முன் அதிரவரும்
கரியேறு வாள்,வன் புலியேறு வாள்எதிர் காய்பவரை
எரியேறச் செய்தே எழுவாள் நடிப்பாள் எதிர்நிற்பளே!      3

நின்றால் நிலமதி ரும் வெறி கொண்டே நிகழ்பொருவில்
சென்றால் மலையதி ரும்தனைத் தாக்கும் செறுநர்களைக்
கொன்றா லலாது கொதிப்படங் காதாள் குறித்ததனை
வென்றா லலாது விடாள், பகை வீழ்த்துவள் வேரறுத்தே!  4                   

வேரறத் தோண்டிடும் ஏன முகத்தாள் மிகவிரும்பிச்
சேரரறம் காத்திடும் தேவதை, மிக்கத் தெளிவளித்தே
சோர விடாதொரு சொற்போ ரிடைநமைத் தூக்கிவைக்கும்
ஆரருள் வாராஹி அம்மையின் பாதம் அடைக்கலமே     5

No comments:

Post a Comment