Sunday, May 12, 2019

வாராகி அந்தாதி


வாராகி அந்தாதி
                            முன்னுரை
2010ஆம்  ஆண்டு எனக்குக் கோலனில் புற்றுநோய் வந்தது, புற்று நோய் அறுவை சிகிச்சை நன்கு முடிந்து என் அப்பாவுகுக் பிரச்சனைகள் ஏதுமில்லாமல் இருந்தால், " அப்பாவை வாராகி அந்தாதி எழுதச் சொல்கிறேன்: என்று என் மகன் இராகவன் வேண்டிக்கொண்டான். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. பிரச்சனைகள் ஏதுமில்லை. எனவே நான் வாராகி அந்தாதி எழுதத் தொடங்கினேன். 14 பாடல்கள் எழுதினேன் பிறகு அமெரிக்காவுக்குச் செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் அந்தாதி எழுதிவைத்த குறிப்பேடு காணாமல் போய்விட்டது குருவிடம் சொன்னபோது. பரவாயில்லை "27 பாடல்கள் வரும் தாரக அந்தாதி திருநட்சத்திர மாலை எழுதுங்கள்" என்றார். அதன்படி வாராகி திருநட்சத்திர மாலையும் வாராகி பஞ்சகமும் எழுதினேன்

ஜுன் 2017ல் தொலைந்து போன குறிப்பேடு தற்செயலாகக் கைக்குக் கிடைத்தது 14 பாடல்களும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன தொடர்ந்து எழுதுவதா அல்லது அப்படியே அரைகுறையாக விட்டுவிடுவதா என்று சஞ்சலப்பட்டேன் அன்று மாலை வீட்டின் அருகிலிருக்கும் தடாகக் கரையிலிருந்த இருக்கையில் அமர்த்து இதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். ஏதாவது குறிப்புக் கிடைக்காதா என எண்ணினேன். அப்பொழுது வானத்தை நிமிர்ந்து பார்த்தால் மிக அழகான வாராகி உருவத்தில் ஒரு வராகம் வாலில் ஒரு முடிபோட்டுச் சுற்றிய நிலையில் காட்சி கொடுத்தது. சரி, சூசகமாக உத்திரவு கிடைத்துவிட்டது என எழுதத் தொடங்கினேன். ஆஷாட நவராத்திரிக்குள் எழுதி முடித்துவிடு என்றான் மகன்.
 முதலில் நான் எழுதிய போது எனக்கு வாராகி மந்திர உபதேசம் இல்லை ஆனால் தற்போது உபதேசம் பெற்றிருந்தேன் எனவே மூல மந்திரத்தின் அத்தனை அட்சரங்களும் அந்தாதியில் வரவிழைந்தேன். அது தவிர கேசாதி பாத வர்ணனை ஆயுதங்கள், மாற்றுப் பெயர்கள் அனைத்தையும் கொண்டுவர விரும்பினேன் சிரமமில்லாமல் அமைந்துவிட்டன ஓரிடத்தில் ஒருபாடலை எண்ணம் என்று தொடங்கியிருந்தேன் வண்ணம், கிண்ணம் என்று இரண்டு எதுகைகளைப் பயன்படுத்தினேன் மூன்றாவதாகத் திண்ணம் என்ற எதுகையைச் சரியாக அந்த இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்த இயலவில்லை

அப்பொழுது என் எதிரே எங்கள் பரமகுரு பூர்ணானந்தநாதர் எழுதியுள்ள மந்த்ரார்த்தங்கள் புத்தகம் இருந்தது அதை எடுத்துப்பிரித்தேன். பிரித்த பக்கத்தில் உண்ணம் என்ற சொல் என் கண்ணில் பட்டது. உண்ணம் என்றால் உஷ்ணம் என்று பொருள் அதைப்பற்றி இணையத்தில் ஆய்வு செய்தேன். தேவாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே பரமகுருவின் அருளும் கிடைத்துவிட்டது என எண்ணி அதே சொல்லை அந்தாதியில் பயன்படுத்தினேன் மிகப்பொருத்தமாக அமைந்துவிட்டது.

இந்த அந்தாதியை எழுதிச் சந்தவசந்தம் கூகுள் குழுமத்திலும் முக நூல் குழுமத்திலும் இட்டேன். கூகுள் குழுமத்தில் கவிஞர்கள் சிவ சிவா., கோபால், அனந்த், சரண்யா ஆகியோர் சில திருத்தங்கள் தெரிவித்தனர். கொள்ளத்தக்கவை கொண்டு அந்தாதியை ஆஷாட நவராத்திரி முடிவு தினத்தில் எழுதி முடித்தேன் அன்னை அருளால் விக்கினமின்றி மிக அழகான அமைந்துவிட்டது.

சூசகம் காட்டித் தொடரப் புரிந்தநற் சூக்குமத்தின்
வாசகம் தானிதில் வந்தது, வேறு வழியிலதாய்
யாசகம் கேட்டேன் அவள்தந்தாள், தந்ததை யான்தொடுத்தேன்!
மாசகம் காக்கின்ற வாராகி பாதங்கள் வாழ்த்துகவே

உபாசனை அளித்த குருவுக்கும் குருபத்னிக்கும் நன்றி
அன்புடன்
இலந்தை சு இராமசாமி
4-7-2017

                                              வாராகி அந்தாதி
காப்பு
சூசகமாய் என்னைத் தொடரவைத்தாள் வாராகி
வாசகமாய் இங்கே வனைகின்றேன் - யாசகமாய்
வார்த்தைகளை வேண்டுகிறேன்
, வள்ளல் கணபதியே
நேர்த்திகளை நீயே நிகழ்த்து.
 குரு துதி
எந்திர மாக இங்கே இயங்கிடும் வாழ்க்கை தன்னைத்
தந்திர மாக ஏதோ  தள்ளியே செலுத்து கின்றோம்
மந்திரம் உபதே சித்தே வாழ்க்கையை மாற்றி வைத்த
சிந்தையில் குடியி ருக்கும் தேசிகர் குருதாள் போற்றி
  நூல்
உலகங்கள் கோடி ஒரு நிலை யோடே உருளுகையில்
விலகுங்கள் என்றந்த வீதியில் ஓலம் விளைவதில்லை
கலகங்கள் தீரக் கருத்துடன் என்றும் கனிந்த வெற்றித்
திலகங்கள் இட்டுச் சிரிப்பவள் வாராகி தெய்வதமே        1

வதமே புரிவாள், வழிவழி தீமை வனைபவரும்
பதமே பணியும் பரிசினை நெஞ்சில் பதித்திடுவாள்
இதமே புரிவாள்
, எமக்குப் பிழைசெய் எதிரிகளை
அதமே புரிவாள் அடியருக் கென்றென்றும் ஆனந்தமே!    2

ஆனந்த மார்க்கம் அவளது மார்க்கம், அடைந்துவிடின்
தானெந்த மார்க்கமும் சார்ந்திட வேண்டாம் தரியலர்தம்
ஊனந்த மாக உலர்த்திடும் தேவியை உற்றவர்க்கு
வானந்த வீதி வசப்படும் வாராகி வாழ்த்துவளே!           3
      
வாழ்த்திட வாயும் வணங்கிடக் கைகளும் வந்து முன்பு
தாழ்த்திடச் சென்னியும் தந்தநம் தாய்பதம் சார்ந்துமனம்

ஆழ்த்திட வேறே அதனினும் மேனிலை யாதுளதோ?
ஊழ்த்தடை யில்லை உறுதி உறுதி உறுதியிதே!          
4

உறுதி தளரா உளமும் உணர்ந்தே உரைத்திடுநா
மறதி அடையா வகையும் பெறவே வரந்தருவாள்
அறுதியிட் டன்னை அபயம் எனவே அடைந்துவிடின்
இறுதி வருநாள் எமபயம் போக்கி எதிர்நிற்பளே!           5
    
நின்றெதிர் தீமை நிகழ்ந்திடும் முன்னே நிறுத்துபவள்
கன்றெதிர் கண்டு கசியும் பசுவெனக் காக்கின்றவள்
மன்றெதிர் வாதம் வருமுனர் மாற்றம் வழங்குபவள்
வென்றெதிர் நிற்பவள்
,  வித்தகி, வாராகி வீரியளே!        6

வீரி, எதிலும் விரைந்து செயல்படும் வீறுடையாள்
சூரி
, பயங்கரி, சூலி, புடைத்தெழு சூக்குமத்தாள்.
நாரி
, நலந்தரு நாயகி, மங்கலை நானிலத்தே
மூரி அரிமிசை முந்திடு வாள்சினம் மூண்டெழவே!       7

எழவைப்பாள், என்றும் எமக்கு நலம்புரிந் தேதிலரை
விழவைப்பாள்
, வீழ்த்தி விழுந்தோர் மனத்தில் விழிப்புணர்த்தித்
தொழவைப்பாள்
, பக்தி சுடர மனத்தைத் துளைந்ததனை
உழவைப்பாள்
, பைரவி, உன்னதம் தந்தே உயர்த்துவளே!               
8

உயர்த்துவள் வாசவி உத்தண்டி, வாராகி உத்தமியாள்
வியர்த்தம் எதுவும் விளையும் முனமதை வேரறுப்பாள்
அயர்த்திடும் போதஸ்வ ரூடா உடனே அருள்புரிவாள்
முயற்சிகள் நன்றாய் முடிப்பாள் வராக முகத்தினளே!     9

முகத்தில் வளைபற்கள் மோந்திடும் மூக்குடன் மூவிழியும்
தகத்தகச் சோதி இரத்ன மகுடத் தனிச்சிறப்பும்
தகர்க்கும் உலக்கையும் சங்குடன் சக்ரம் தனிமழுவும்
அகத்தில் சுரந்திடும் அன்பும் துலங்கும் அருளவளே!      10

அவளே தளபதி ஆவாள் அவளே அணித்தலைவி
அவளே அமர்க்களத் தேறிப் பகையை அதிரவைப்பாள்
அவளே பிரத்யக்ஷ வாராகி
, தேவிக் கணுக்கமவள்
அவளே லலிதை அணிநகர் வாயில் அமர்பவளே!         11
அமர்க்களம் உற்றிடில் ஆயிரம் ஆயிரம் ஆகநிற்பாள்
தமர்க்கு நலஞ்செயும் தன்மையி னாளருட் சாதனையாள்
எமனவன் முன்வரின் எம்தமர் என்றே எதிர்நிற்பவள்
எமக்கினி வேறெது வேண்டும் நம் அன்னை இருக்கையிலே!12

இருக்கும் பொழுதும் இனிய பொழுதாய் இயங்கிடவே
உருக்க முடனே உளத்தினில் வாராகி ஓங்கவிடு
தருக்கங்கள் இல்லை சலனங்கள் இல்லை சரிவருநல்
பெருக்கம் நிறையும் பிணியிலை என்றைக்கும் பீடுகளே!  13

பீடு பெருக்கும், பிணிக்குமிவ் வாழ்வின் பிடியகன்றே
கூடு விழுந்திடக் கூட்டினில் மீண்டும் குறுகிவிடா
வீடு கிடைக்கும்
, விழைவுடன் வாராகி மெல்லியலின்
ஈடுவே றில்லா இணையடி போற்ற எழுமின்களே         14

மின்னலை ஏவி விளையாடு கின்றவள் வித்தையிலே
முன்னிலை சேர்க்கும் முதல்வி அடுபொறி மோதல்களின்
புன்னிலை தாழ்த்திப் பொருள்நிலை காட்டிப் புனிதநெறிக்
கன்னலை ஊட்டிக் கருத்தினில் நிற்பாள் கனிவுடனே!    
15

கனிவுடன் ஐம்கிலௌம் ஐம்மெனும் மந்திரக் காப்பினையே
தனியிருந் தேசரி யான சமயம் தனில் நினைந்தே
இனிதே நமோவென ஏத்திப் பகவதி என்றுரைத்து
மனத்தில் இருத்த வழங்குவள் வார்த்தாளி வார்த்தைகளே!! 16

வார்த்தாளி என்று வழங்கும் பெயரின் வகைப்படியே
வார்த்தைகள் ஆள வகுப்பாள் எதிரியை வாதத்திலே
வார்த்தை தடுமாற வைப்பாள்
, அடியர் மயக்கிருளைத்
தூர்த்தருள் செய்வாள்
, தொழுதென்றும் சொல்லுக தோத்திரமே!17                                            

தோத்திரம் செய்து தொழுது பணியத் துணைநிற்பவள்
யாத்திரைப் போதினில் ”வாராகி வாராகி அச்சமின்றிக்
காத்தருள்” என்றிடக் காக்கும் வழித்துணைக் காரியவள்
ஏத்திப் புகழ மகிழ்வள் எழிலார் வராகியளே!!             18

“வராக முகியே, வராக முகியே மகிழ்ந்திசைக்கும்
இராகம் அறியேன்
, எனினும் உருகி இலகுமனம்
பராவி நெகிழ்ந்து பரவசத் தாழ்ந்து பணியுமிந்தச்
சராசரி என்னையும் தாங்குக” என்பேன் தயைபுரியே!      19
      
புரியும் செயல்கள் புனிதப் படவே புரிகுவையேல்
அரியள்அந் தேயந் தினியாள் அருள்வாள்
, அகம் நெகிழ்ந்தே
உருக
, “ வருந்தேல் இருந்தினிக் காப்பேன் உறுதி” யென்பாள்
பெருமைகள் யாவும் பெரிதும் கடந்த பெரியவளே!        20

பெரிய செயல்கள் பெருமை கொடுத்திடப் பீடுதரும்
அரிய செயல்கள் எளிதாய் அடைந்திட ஐம்நமஹ
உரிய முறையில் உதவிடும்
, தீமை ஒழிந்திடவே
தரியலர் கண்டஞ்சம் பேகரம் பற்றுவள் ஜம்பினியே!      21

இனிமை, கடுமை இரண்டும் கலந்த எரிகணையே
மனமோ கவலை விழுஹே துவினை மறித் தருள்வாய்
முனிவை மறத்தில் முகிழ்க்கும் பெருந்திறல் மோஹினியே
இனியிவ் வுலகில் அமைதி நிலவ இனிதருளே!           22

அருள்தரும் ஹஸ்தம் அளிகுணம் காட்டும் அறமலவோ
அரும்பெரும் பேறுகள் அள்ளிக் கொடுக்கும் அகமலவோ
கிரிசக்கரத்தில் கிடுகிடுவென்றே கெலிப்பவளே
திரிமனஸ் தம்பினி சர்வ உலகும் திரிபவளே!            23

பவளக் கொடியே, பராபட்ட ரீகா படைத்தலைவி
துவள விடாமல் தொழுபவர் வாழத் தொடுப்பவளே
குவளை நிறத்தாய் கொடுமனத் துஷ்டர் கொடுக்கறுத்தே
புவனம் புரக்கும் புனிதப் பெரும்புகழ்ப் பூரணியே!         24

அணிசேர் அரக்கர் அலறி நடுங்கி அவதியுறப்
பணிசெய் படைகளைப் பார்வையொன் றாலே பகடையெனத்
துணிவாய் இயக்கிச் சுடர்ப்பிர காசம் தொடுப்பவளே
பிணிசேர் விசுக்ரன் பெரும்படை மாய்த்த பெருந்திறலே!   25
திறலே, திறல்களின் சேர்தொகுப் பேபெருஞ் சீற்றமுளாய்
மறம்சேர் விசுக்ரன் வலிமிகு துஷ்டன் மடமடென
அறப்போர் விடுத்தே அமர்புரி போதில் அவனையுடன்
இறக்கப் புரிந்தாய்
, இமையவர் போற்றி இசைத்தனரே!     26

இசைத்தனர் தேவர், “எமைக்காத் தவளே, எதிரிலியே
திசைத்தளம் எங்கும் திரிதரு பஞ்சமித் தெய்வதமே
தசைத்திரள் கொள்தண்ட நாதா
, அரிக்னீ, தயவுடையோய்
புசித்திடும் பேய்க்கும் விடாத பசிப்பிணி போக்கினையே!”  27

போக்கியம் நல்கும் புரந்தரி, போத்ரிணி, போற்றுகிறோம்
பாக்கியம் பெற்றனம் நாமெனப் பாரில் பரவுகிறார்
ஆக்கினை செய்வாய் அதட்டிப் பரிவுடன் ஆதரிப்பாய்
காக்கிறாய்
, சர்வமும், வேறெமக் கேதும் கதியிலையே!    28

கதியெனத் தேவர் கழல்பணிந் தாரம்மை காட்சிதந்தாள்
துதிசெய ஏற்புள ஆஷாட மாதம் துலங்குகிற
விதிநவ ராத்திரி வேண்டிப் பரவி விழவெடுக்கச்
சதிவரு சர்வ சழக்குகள் நீக்குவள் சத்தியமே!            29

சத்திய வாக்குத் தருவாள் அதற்குத் தகுந்தபடி
சித்தம் உறுதி வயப்பட வேண்டும் திடமுடனே
நித்தியம் நோக்கி நிகழ்த்திட வேண்டும்
,  நினைவவளைப்
பத்திர மாகப் பதித்திடல் வேண்டும் பலித்திடவே!          30

பலித்திடும் சித்தி படைத்திடும் மந்திரம் பல்முறையே
ஒலித்திட வேண்டும் உபாசனைப் பேறதன் உன்னதமே!
சலித்து முமுக்ஷு தகைமை பெறுமருள் தந்தருள்வாள்
சிலிர்க்கும் விசுத்திக்கு மேலுயர் ஆக்ஞையின் தேவதையே!31

தேவதை உன்றன் திருமுகம் ஞானத் தெளிவளிக்கும்
ஆவ தனைத்தும் அறமே நினைக்கதி யாயடைந்தால்
காவல் மலிநின் இராஜ்ஜியம் எஃகின் கனவுறுதி
மேவிடும்
, எல்லாம் விசித்திரம், வாராகி வித்தகியே!       32

வித்தக மாய்ப்பல அஸ்த்திரம் கைகளில் வீற்றிருக்க
எத்தனை லாகவ மாக அவற்றை இயக்குகிறாய்
மெத்தவே தம்பனம் செய்தே எதிரிகள் வீழ்த்துகிறாய்
அத்தகு வீரம் அலற அடிக்கும் அவர்களையே!            33

களையைக் களைந்து கதிரை வளர்க்கும் கதிப்பொருளே
களைப்பே பெருகும் களத்தே பொருதும் களைப்பிலியே!
விளைத்த செயலில் விதிர்த்த படைகள் வியப்படைந்தே
வளைய வருவர் மயங்கி விழுவர் வணங்குவரே!          34

வணங்குவர் தேவர் சகல உயிர்கள் மனமுணர்ந்தே,
இணங்குவர் சீக்கிரம் பாதம்  தொழுதிட ஏதிலர்கள்
,
பிணங்குவர் தம்மையும் வஸ்யம் புரிந்திடும் பெற்றியினைச்
சுணங்குதல் இன்றி எனக்களிப் பாயருட் தூயவளே!       35

தூய மனத்துடன் ஐம்கிலௌம் இட்டகம் தூண்டிவிடின்
மாயம் விலகும்
, மனமருள் பெட்டக மாய் நெருக்கத்
தாயம் கிடைக்கும் டகடக வென்றே சடுதியிலே
நேயம் கொடுக்கும்
, நிறைந்திடும் வாழ்க்கையில் நிம்மதியே!36

மதியைத் துலக்கி மனத்தினில் ஹூம்காரம் வந்தொலிக்க
விதியை மயக்கி அதுவிடும் அஸ்த்திரம் வீழ்ச்சியுற
அதிசயம் கூட்டி அருள்தரும் வாராகி அம்மையடி
துதிசெயப் பட்டெனச் சூழ்ந்திடும் ஞானம் சுடர்விடுமே!    37

சுடரே, திருவே, துகளறு கட்டிளஞ் சுந்தரியே
தொடராய் உனதருள் சூக்கும மந்திரம் சொல்பவர்க்கே
இடரெதும் வாரா தெதிர்நின்று காக்கின்ற எம்மரசி
குடரில் பிறவாப் பெருநெறி கூட்டிடக் கோரிக்கையே!    
38

கோரிக்கை வைத்தேன், குறிப்பெதிர் பார்த்துக் குறையிரந்தேன்
யாரிக்கை பற்றி அழைத்துன் அருகில் அமரவைப்பார்
சேரிக்கை கூப்பித் தெரிந்தவை சொல்லிச் செபித்திடினும்
பாரிக்கை என்றனின் பக்தன்கை என்றே பரிந்துரையே!    39

உரைக்க உரைக்க உருப்பெறும் மந்திரம், உழைத்துமிக
அரைக்க அரைக்க அருமணம் சந்தனத் தாவது போல்
கரைக்கக் கரைக்கக் கரம்வரும் சித்தி
, கடந்துபினும்
சுரக்கச் சுரக்கத் துரிய நிலைக்கவள் தூக்குவளே!         40

தூக்கிடும் அந்நிலை சொப்பனத் தூடே தொடங்கிடினும்
போக்கிடும் போது புனிதப் புலத்திடம் போட்டு வைப்பாள்
வாக்கிடும் யாவும் வசப்படும்
, அன்னை மனமுவந்தே
ஆக்கிடும் யாவும் அவள்பரம்
, அன்னையின் ஆக்கினையே!41

ஆக்கினை என்றே அறிந்தனை, பின்னும் அதுமறந்து
போக்கினை யாயின் பொறுத்திட மாட்டாள் புகலுமருள்
வாக்கினைத் தந்தாள்
, வரத்தினைத் தந்தாள் வழிமொழியும்
நாக்கினைத் தந்தாள் நமக்கினி வேறெது நானிலத்தே!     42

நிலத்தை அகழ்ந்து நெகிழ்த்திக் கிழங்கெடு நேர்த்தியுள
பலத்தைப் பொருந்திய பற்கள் படைத்தவள்
, பாழ்படுமும்
மலத்தை உடைத்து மமதை அகழ்ந்து மணிபுரச்செம்
புலத்தில் இருக்கப் புரிவாள் கவிதை புனைந்திடவே!       43

புனைவுகள் உன்திருப் பொன்னடி போற்றிப் புகழ்ந்திடவும்
நினைவுகள் என்றும் நினது புகழை நிகழ்த்திடவும்
கனவுகள் உள்ளும் கனிந்தருள் செய்யும் கருப்பொருளே
உனைமகிழ் வூட்டிடும் உத்தியும் சற்றே உதவுகவே!      44

உதவிடும் எண்ணம் உளபொழு தேபோய் உதவிடவும்
எதுவரி னும் நின திச்சை எனமுனம் ஏற்றிடவும்

சதமென நின்பதம் சார்ந்து பணிந்து தழைத்திடவும்
விதவித மாக விருதுகள் கூடவும் வேண்டினனே!         45

வேண்டுவ தெல்லாம் மிகத்திடம் கொண்டுள மேனிநலம்
பாண்ட மிதிங்கே அதன் பணி தானே பரிந்துசெயல்
ஆண்டிடும் நெஞ்சத் தமைதி இனிய அகமகிழ்ச்சி
ஈண்டென் செயலால் இறைநிலை எய்தல்
, இவையருளே!  46

இவையவை என்றிவண் ஏதெது கேட்பினும் என்னிறையே
அவையவை தம்மை அளிப்பது பற்றி அறிந்தவள்  நீ
எவை எவை நன்மை எனக்கென நீ மனம் எண்ணுவையோ
அவை அவை நன்றே அளித்திடு கேட்க அறிந்திலனே!    
47

அறிந்திலேன் அம்மா அறிவெனும் ஒன்றை, அறிந்தவரை
அறிந்தேன் எனவே அகந்தைப் பிடியில் அகமகிழ்ந்தேன்
மறைந்தவை பாதி மறதியில் மீதி வழிந்துவிட
உறைந்தவை தம்மை உளவென எப்படி ஓதுவனே!       
48

ஓதும்படிக்கே ஒருமொழி இன்றே உளதெதுவும்
மீதம் இலைதான்
, அதில்பெருங் காயம் விழுந்திருந்த
போதம் உளது
, பொருந்து மணமும் பொலிகிறதே
ஆதர வாயதைப் பற்றி எழவுன் அருளுளதே!             
49

தேடித் திரியாச் சிறப்புள என்னையும் தேடவைத்தாய்
வாடி அலைந்தே வனத்தில் புகுந்து வருந்தவிலை
மூடித் திறந்துயிர் மூச்சை அடக்க முயலவில்லை
பாடித் தொழுதேன்
, பணிந்தேன் அடைந்தாய் பரவசமே!    50
பரவச மாய்க்கரு மேகம் நிறத்தைப் பகிர்ந்தளிக்க
ஒருவச மான கருங்குழல் மேலே ஒயிலசைய
உருவச மான கரண்டகத் தோற்ற ஒளிமகுடம்
திருவச மாகத் திருமுடி மேலெழில் சேர்க்கிறதே!        
51

சேரும் அழகுத் திருப்பிறை மேலொளி சிந்திநிற்கச்
சீரும் சிறப்பும் திகழும் பவளம் திகழ்வரிசை
சாரும் விளிம்பில் தனியழ கேற்றத் தழைவயிரம்
ஆரும் ஒளிதரும் அன்னை சிரசில் அணிமுடியே!         52

முடிந்த வரையில் முகவெழில் சொல்ல முயலுகிறேன்
படிந்த நுதலினில் கஸ்தூரிப் பொட்டு
, பகைவர்களைத்
தடிந்த வயிரப் படையெனும் பற்கள் தகைமுகிலைக்
கடைந்த நிறமுகம் கம்பீ ரவெழில் கச்சிதமே!             53
கச்சித மாகக் கதவடை யாவிரு காதுகளும்
எச்சரிக் கையாய் எதிரி அசைவை எடுத்துரை
க்கும்
நிச்சயமாய் மூவிழிகளில் ரௌத்திரம், நேசம்வரும்
வச்சிர மூக்கு வருவன மோந்து வழங்கிடுமே!            54

வழங்கும் அளவில் வனப்பெழில் காட்டும் மணிக்கழுத்து
முழங்கும் குரலில் முனிவைக் கலக்கும்
, மொழியதிரும்
விழுங்கும் திருவாய் விரும்பிக் கனிவும் மிகவிளம்பும்
ஒழுங்கில் அமைதோள் இயங்கும் மலைக்கும் உயரத்திலே!
55

உயர்ந்து விளங்கும் உரங்கொள் கரங்களில் உற்றிருந்தே
இயங்கும் படைகள் இயக்கிடும் தேவி இலாகவத்தில்
தியங்கும் பகைவர் திரிரதம் கண்டு சிலும்பிடுவர்
மயங்கும் உலகம் வலதிடப் பாக வலிமையிலே!          56

வலிவுடை வாளம்பு சக்கரம் சாட்டை வளர் கதையும்
வலப்புறக் கைகளில் வாகாய் இயங்க
, வருமிடத்தே
கிலிதரும் சங்கொடு தாமரை சூலம்வில் கேடயமும்
பொலிவுற ஓர் புலி வாகனம் ஏறுவள் போயமர்ந்தே!!      57

தேவைகருதி உலக்கை கலப்பை திருக்கரங்கள்
மேவிட அங்குசம் பாசம் எடுப்பள் மிளிர்கரங்கள்
ஏவிடும் ஆயுதம் என்னவெப் போதென் றெவரறிவார்
பூவும் ஒருபடை ஆகிடும் அன்னையின் போர்க்களத்தே!  
58

போர்க்களத் தில்லாத போதில் அபயம் பொருந்துகரம்
வார்த்தாளி காட்டி வரம்தரு வாளவள் வள்ளலெனச்
சாத்திரம் கற்றவர் சாற்றுவர் உண்டிங்குச் சான்றுபல
காத்திடு வாளவள் கைராசி நெஞ்சில் கருதிடவே!          59

திடமும், பரப்பும் திரட்சிச் செழுமையும் சேர்ந்துயர்ந்த
இடமும் உடைய எழில் கொங்கை மீதில் இரத்தினங்கள்
வடமும்
, ஒளிரும் மணிபொதி மாலை வரிசைகளும்
அடர்கச்சை பூண்ட அழகும் உரைக்க அரியனவே!         60

அரிதின் அரியள் அரியின் வராஹ அமரினிலே
பெரிய அளவில் பொருதே உதவிய பெற்றியினாள்

உரிய திருமலர் நாபியும் வீர ஒளிவயிறும்
விரியும்கம் பீரமும் வீரமும் எங்ஙன் விளம்புவதே!        61

விளம்ப இயலா விரைவும் பொலிவும் மிகவலிவும்
வளமும் வடிவும் வதிதிருக் கால்கள் வனப்பதையும்
வளியின் விரைவும் வயிரமும் கொள்பத மாண்பினையும்
உளத்தில் பதித்தே ஒருமுக மாய்த்தினம் உன்னுகவே!    62

உன்னை அறிய உணர்த்திடு பாதம், உயர் மறைச்சொல்
தன்னைக் கடந்து தழைத்திடு பாதம்
, தகதகென
மின்னைக் கரைத்து விளங்கிடு பாதம்
, மிகநலஞ்செய்
அன்னையின் பாதம் அகம்பதி
, ஞான அருள்பெறவே!      63

பெறவே றுளதோ, பிறங்கிடு நூபுரம் பேறுபெற்றே
நெறிசேர் பதத்தில் நிறையணி யாக நிறைந்திருக்கும்
பொறிசேர் அழகைப் புகழ்ந்து வணங்கிடப் போய்ப்பெறவோர்
அறமும் உளதோ
? அவள்பதம் நல்கும் அனைத்தையுமே!  64

அனைத்தும் அவளின் அருளென எண்ணி அனுதினமும்
நினைத்து மனத்தில் நிறைத்து
, ஜபங்கள் நெறிமுறையே
தினைத்துணை யாகச் செயினும் உறுதித் திறமுணர்ந்தே
பனைத்துணை யாகப் பலன்கள் கொடுப்பாள் பரிவுடனே!   65

பரிமேல் அரிமேல் கரிமேல் புலிமேல் பருந்ததன்மேல்
எருமை
 மிசைமகிழ்ந் தேறி வருகின்ற ஏந்திழையாள்
உரிமை யுடனே உளம்நினை வோருக் குதவிடுவாள்
உரிய முறையில் உயர்வு பெறுவர் உபாசகரே!            66

உபாசனை தந்த உயர் குரு போற்ற, உவந்தவள்நல்
உபாயம் கனவில் உரைப்பாள் வழிகள் உணர்த்திடுவாள்
கபாலம் பிரம்பு கரத்தினில் ஏந்திக் கடுகிவந்தே
அபாயம் விலக்கி அருள்வாள் அடியருக் காதரவே!        67


தரவென ஓர்கை அபயம் அளித்திடும் தண்ணளியை,
புரவெனச் சொல்லிப் புனிதத் திருப்பதம் போற்றிசெய்தே’
இரவினில் பூசை புரிபவர் மூலத் திருக்குமந்த     
அரவை எழுப்புவள் ஆக்ஞைக்கு மேலே அனுப்புவளே     68
      
புவனம் கொணர்ந்து புதுப்பொலி வூட்டிய பூரணியை
மவுனம் இருந்து மனத்துள் ஜபம்செய்து மந்திரத்தைக்
கவனத் துடனே கருத்தில் இருத்திக் கசிந்துருகித்
தவனமும் மஞ்சள் சிவப்பு மலர்களும் சாத்துகவே        69

சாகச மோயிலை தந்திர மோயிலை சாதனையாய்த்
தேகசம் பந்தத் துடன் புரி செய்கைச் சிறப்புகளோ
ஆகுமென் றெண்ணி அதன்வழி சித்தி அடைவதினும்
ஏகம் அவள்பெயர் எண்ணி ஜபம்செய எய்திடுமே!         70

எய்த நினைப்பவை எல்லாம், முயற்சி எதுவுமின்றி
எய்தும் எனமனம் எண்ணிட வேண்டாம்
, எடுத்தசெயல்
செய்யும் பொழுதினில் சிக்கல் இலாதவள் செய்திடுவாள்
பொய்யும் புரட்டும் புரிய நினைத்தால் பொசுக்குவளே!     71

பொசுக்கென எல்லாம் புலப்படும் என்றால் புலப்படுமா?
நசுக்கிடும் ஐம்பொறி நாட்டியம் தன்னை நனியடக்கி
வசப்படு வென்றே மனத்தைப் பிடிக்குள் வரவழைக்க
விசுக்கிரன் தன்னை விழவைத்த அன்னையை வேண்டுகவே!72

வேறிலை அன்னை வியன்லலி தாபர மேஸ்வரியாள்
மாறிலை என்பதை மாதா செருக்களம் மீதுரைத்தாள்
கூறுகள் இல்லை குழுக்களும் இல்லை குறித்துடலில்
வீறுகொண் டொன்றாய் விளங்கிடும் சக்தி விகற்பங்களே! 73

கற்ப நெடுநாள் கணக்கிட ஒண்ணாக் ககனவெளி
அற்புதத் திற்கே அசைவும் இயக்கமும் யாரளித்தார்
?
முற்பட முற்பட முற்படு கின்ற முதற்தலைவி
சிற்பரை ஞானத் திரிபுரை பக்கம் திகழ்பவளே!            74

திகழ்கின்ற ஸ்ரீபுரப் பூபுரம் வாழும் திருவுடையாய்
புகழ்கின்ற சொல்லில் பொருளாய் இருக்கும் புனிதவதி
நிகழ்கின்ற யாவும் நெறிமா றிடாமல் நிகழ்த்திடுவாய்
அகழ்கின்ற தன்மை அறிவாய் உனக்கே அடைக்கலமே!   75

அடைக்கலம் என்றிட அன்னை அளிக்கும் அபயநெறி
படைக்கல மாகப் பரிந்து புரக்கும் பலன்கொடுக்கும்
தடைப்படும் எல்லாம் தகர்த்திடும்
, பக்தி தனையறியாக்
கடைப்படு வோருக்கும் காரிய சித்திகள் கைவருமே!      76

வரும்படி கூடும், மனத்தில் வெறுத்த மனிதர்களும்
வரும்படி வேண்டி மகிழ்ந்தே அழைப்பர்
, மறைந்திருந்த
அரும்படிப் பெல்லாம் அகம்படும், அன்னை அருளிருந்தால்
கரும்படி பற்றிக் கடித்துச் சுவைக்கும் கணக்கதுவே!             77

கணக்கின் தொடக்கம் கணக்கின் முடிப்பு கணக்கிடையில்
இணக்கம் சுணக்கம்
, பிணக்கம், எனுமிவ் வியக்கமெலாம்
“வணக்கம் எனவே மமதை அடக்கி வணங்குதிரேல்
மணக்க மணக்க வதிந்திட வாராகி மாற்றுவளே!          78

மாற்றுப் பெயர்கள் பலவுள
, பாரில் வழங்குவன
போற்றும் சமய ஸங்கேதா சிவை யருள் போத்ரினியாள்
ஏற்றுசங் கேதா மகாசேனை ஆக்ஞாசக் ரேஸ்வரியாள்
சாற்றப் பெயர்கள்பல் லாயிரத்
 தின்மேல் தகவுடனே!      79

தகவுடன் உன்மத்த பைரவி யாகத் தயைபுரிவாள்
பகர்ந்திடும் சொப்பனந் தன்னில் தகவல் பரிந்தளிப்பாள்
திகைத்திடும் வண்ணம் மறைத்தருள் செய்வாள் திரஸ்கரிணி
வகைவகை அங்க உபாங்கப் பிரத்யங்க மாகவந்தே!       80

வந்தே குழப்பி மயக்கும் வினாக்கள் மனத்திலெழச்
சந்தே கமெலாம் சரிவரத் தீர்த்தே தயைபுரிவாள்
அந்தே அந்தினி யாள்நமை என்றைக்கும் ஆதரிப்பாள்
சிந்தா மணியில்லம் சேர்ந்து வதிதலும் சித்திக்குமே!      81

சித்தில் மயங்கிச் செயலினை வேறு திசைதிருப்பப்
புத்தி மயங்கும் பொருளும் மயங்கும் புனிதவருள்
முத்தியை நோக்கி முதலடி என்றே முனைந்ததனைப்
பத்திர மாகவுள் பக்கம் திருப்பப் பகல்வருமே!            82

வருமே பதிந்த வழித்தடம், முன்பவ்வழி நடந்தோர்
தருபோத னையில் சரியாய் நடக்கும் தகுதிவரும்
பெருமோ கமெனும் பிணியும் அழியும் பிறப்பிறப்பு
வருமோ இனியும்
?, வரவேற் புளதவள் வாசலிலே!        83

வாசல் வரையிலும் வந்து படியில் வழுக்கிவிழும்
ஊசல் மனத்தவர் ஓங்கிப் புரியும் உபாசனையில்
பூசல் இருக்கும்
, புனிதம் இராது, பொசுங்குகிற
வாசம் வருகையில் யார்தான் போடுவர் வாயினிலே!      84

வாய்மணக் கும்படி மந்திரம் சொல்லி மனத்திலிறை
போய்மணக் கும்படி புத்தி செலுத்திப் புனிதமுள
பூமணக் கும்படி பூசைகள் செய்தால் புகழுடனே
நீமணக் கும்படி நின்னை உயர்த்துவள் நிச்சயமே!         85

நிச்சயமாக நியதிப் படிதான் நிகழுமென
எச்சம யத்தும் இசைத்திட வேண்டாம்
, எமக்கிறைவி
நிச்சய மான நியதியைக் கூட நெறிப்படுத்தி
அச்சம யத்தினில் ஆற்றல் கொடுப்பாள் அமைவுறவே!    86

அமைதி கெடுக்கிற அச்சம் தொலைய அருமருந்தாய்
சமவள வில்செங் கயிற்றில் முடிபல தாமமைத்து
நமதிறை மந்திரம் நாமுச் சரித்து நலம்விழைந்தே
அமைவுறக் கட்டிட அச்சம் தொலைந்திடும் அச்சமுற்றே! 
87

அச்சம் தொலையும் அமைதி பெருகும் அகந்தையதும்
மிச்சமி லாது விலகும்
, எதிர்க்கும் வினைகளையே
துச்சம் எனவே ஒதுக்கித் தொடரும் துணிவுவரும்
உச்ச நலமே தருவாள் உளமும் உவந்திடவே!!            88

உவந்து மகிழ்ந்தே உரைத்திடும் மந்திர உச்சரிப்பும்
சிவந்த மலர் கொடு செய்திடும் பூசைச் சிரத்தைகளும்
குவிந்த ஒருமுகக் கொள்கையும்
,  தீமை கொளு முணர்வு
தவிர்ந்த நிலையும் தழைத்திட நல்ல தனம்வருமே!       89

தனந்தரும் ஞானம் தரும்பெரும் சாந்தம் தவழுகிற
மனந்தரும் தேக வலிமை தரும்நெஞ்சம்  மாறுபடா
இனந்தரும்
, வெற்றிகள் ஏதும் தடையே இலாதபடி
தினந்தரும் கார்குழல் வாராகி தேவி திருக்கண்களே!      90

கண்ணுக் கினியது காட்சிகள் காணுதல், கானமிசை
பண்ணுக் கினியது பாடல்கள் பாடுதல்
, பாங்குடைய
மண்ணுக் கினியது மாசறு வாசனை
, வாழ்வுயர்த்தும்
எண்ணுக் கினியது வாராகி மந்திரம் எண்ணுவதே!         91

எண்ணம் சிறப்ப தெழில்சுவை சிந்தையில்
, ஏற்றயிசை
வண்ணம் சிறப்பது சந்தக் குழிப்பினில்
, வாட்டுகிற
உண்ணம் சிறப்பது கொல்குளிர் தன்னில்
, உயர்ந்தமனக்
கிண்ணம் சிறப்பது வாராகி நல்லருட் கேணியிலே!        92

கேணி அமுதத்தைக் கிண்ணம் நிரப்பிடக் கேண்மையுடன்
ஆணி அடித்த அசையா உறுதி அவசியமே
தோணி எனவே கடலைக் கடக்கத் துணையிருப்பாள்
பேணி வணங்கப் பெரிதும் மகிழ்வள் பெரியவளே!        93

பெரியவள், அன்னை, பெரிய இடம்வசி பேறுடையாள்
அரியவள்
, அன்பின் அரசி , கொடுமை அடக்கிடவே
உரியவள். கோபம் உடையவள்
, உண்மை உணர்ந்துநலம்
புரிபவள்
, அன்பர் புனித மனங்கண்டு பூரிப்பளே!           94      

பூபுரம் வாழ்பவள், பூரணி, பச்சை புனைகிறவள்
ஸ்ரீபுரம் எங்கும் திரிதருதேவி திருவடிசேர்
நூபுரம் கூடப் படையாய்ப் புடைத்து நொறுக்கிடுமே
கோபுரம் ஏறிக் குரல்கொடுப் போமவள் கொற்றங்களே!    95

கொற்ற மலாதொரு கோலம் அறியாக் கொலுவரசி
சுற்றங்க ளாகச் சுடரும் அறுவர் துணையிருக்கச்
சற்றும் தளராத தைரியம் நல்கும் தயவுடையாள்
அற்றங்கள் மூன்றும் அழித்தருள் செய்வாள் அரவணைத்தே!96

(அற்றங்கள் மூன்று - 1 தன்னால் அதாவது காய்ச்சல்,
தலைவலி போன்ற நோவுகள், பிறரால் அதாவது பாம்புக்கடி,  
போன்றவை, 3 இறையால் அதாவது புயல், தீ,
போன்றவற்றால் வரும் இன்னல்கள்)                    

அணைபோட ஒண்ணாத ஆசைகள் பற்றி அலைக்கழிக்க
மணைபோட் டமர்ந்து வழிகாண லின்றி வருந்துகையில்
புணையாக வந்து பொழுதேறும் முன்னே புரந்திடுவாள்
இண வேறி லாத எமையாளும் தெய்வம் எதிரிருந்தே!     97

எதிராய் இருப்பாள் இனிய வருக்கும் இழிந்தவர்க்கும்
புதிராய் இருப்பாள் புகல அரியள்:
, புகலடைந்தால்
கதியாய் இருப்பாள் கரத்தைப் பிடித்தே கனிவுசெய்வாள்
மதியாய் இருப்பாள் வழக்கில் வலிவுடன் வாதிடவே!      98
(எதிராய்- இனியவர்க்கு எதிரே இருந்து காப்பாள்
இழிந்தவர்கட்கு எதிராக இருந்து அழிப்பாள்)
வாது புரிந்து வதைபடல் ஏனெமன் வாசல்வரும்
போது
, வணங்கிப் புகழ்ந்தருள் வாராகி போற்றிசொலித்
தீது புரியா தினிய வகையில் தெளிவுதந்தே
ஏதம் இலதாய் விடுவன் நம்தேவி இடம்கொணர்ந்தே!      99

இடம்பிடித் தாளே எழில்கரிக் காவில் இதமுடனே
தடம்பதித் தாளகி லாண்டேஸ் வரியாய்த் தயவுடையாள்
,
திடம்பதித் தேயவள் சேர்பதி சென்று ஜெபிக்கையிலே
உடம்பெடுப் பென்ப தொருபோ துமிலை உலகினிலே!     100
(திருவானைக்காஅகிலண்டேஸ்வரிவாராகியின்அம்சம்என்றுசொல்லப்படுகிறது.)  
      
நூற்பயன்

வாராகி அந்தாதி வாழ்த்தி மனத் திருத்திப்
பாரா யணம்செய்து பாடினால்- சீராக
எல்லாம் நடக்கும் இனிமையெலாம் சேரும்
வல்லாங்கு வாழும் வகை.






No comments:

Post a Comment