Saturday, May 11, 2019

தசாவதாரம்


தசாவதாரம்

கலி வெண்பா

மண்ணில் அறங்கள் மடிகையிலே நல்லவர்க்கு
எண்ணில் இடர்ப்பா டெகிறி வருகையிலே
தானே அவதாரம் சாதித்துத் தீமைகளை
வேரோ டழிக்கின்ற விந்தை நிகழ்கிறது
அந்த வகையில் ஆதாரம் ஒன்பது
இந்த நாள்வரையில் இங்கே நிகழ்ந்துளதால்
பத்தாம் அவதாரம் பாலிக்கச் சீக்கிரமே
கூடுமோ எனும் வண்ணம் குழப்பம் மிகுந்துளது
தர்மத்தின் சீர்குலைவு, தாராளமாய் நடக்க
வன்மம் எடுத்து வதைப்பு நடக்கிறது
யார்வருவார் இன்னல் அழித்தே அமைதிதர?
என்கின்ற வேட்கை எழுகிறது, அந்நேரம்
இப்படிச் சீரழிவு எய்திய நாட்களிலே
மால்வந்து தோன்றி மயக்கங்கள் தீர்த்ததையும்
நாமெண்ணிப் பார்த்துமிக நம்பிக்கை கொண்டிடுவோம்
நம்பிக்கை தானே நலம்

மச்சாவதாரம்

அறுசீர் விருத்தம்

அயனின் முகத்தி லிருந்தன்று
  அரிய வேதம் தனைக் கவர்ந்து
அயக்ரீ வன்தான் சென்றுவிட
  அதனை மீட்க மீனாகத்
தயவாய் வந்த திருமாலின்
  சரிதை ஆகா மிகவினிது
நயந்த சின்ன மீனாகி
  நடுங்கும் வண்ணம் வளர்ந்தது காண்

பென்னம் பெரிய மீனாகிப்
 பிரளயத்தைத் தான் காட்டிப்
பின்னும் பூமி படகாகிப்
 பெரிதாய் ஆட்த் திருமாலும்
இன்னும் பெரிய மீனாகி
 எதிர்த்துவந்த ஹயக்ரீவன்
தன்னைக் கொன்று வேதத்தைத்
  தகவாய்  மீட்ட அவதாரம்
கூர்மாவதாரம்

அமுதம் கடைந்த போதினிலே
   ஆமை வடிவில் மலையினையே
தமது முதுகில் தாங்கிப்பின்
        சர்ப்பம் தன்னைக் கரம்பற்றி
திமுதக் கடலில் சுழலுகையில்
        திரண்டு வந்த அமுதத்தை
குமுத வல்லி மோகினியாய்க்
        கொடுத்த வேடம் பெருவேடம்
நரசிம்மாவதாரம்

கோணல் புத்தி கொண்டவனாம்
        கொடியன் இரண்ய கசிபன்று
தூணில் அடிக்க நரசிம்மம்
        தோன்றிக் கர்ஜித் தெல்லோரும்
காண படியில், அந்தியிலே
      கணக்காய் மடியில் தான்போட்டு
ஆணிக் கூர்மை நகத்தாலே
      அவனின் குடலைக் கிழித்ததுவே!

அந்தக் குடலை மாலையென
        அணிந்து கொண்டு செங்குருதி
சிந்தக் குதித்துக் கூத்தாடி
        சீறிப் பாய்ந்த சிங்கத்தை
முந்தி நின்றே பிரஹ்லாதன்
        முனிவு மாற்ற, தணிவாகி
வந்திப் போரை வாழ்த்தியதை
        வாயால் சொல்ல முடிந்திடுமோ?

வாமனாவதாரம்

அதிதி பெற்ற சிறுபிள்ளை
        அன்று பலியின் யாகத்தில்
விதியை மாற்றத் தானெண்ணி
        மிகவும் சிறிய வாமனனாய்
எதிரில் வந்து நிற்கையிலே
        எழுந்து வந்த மகாபலியைச்
சதியைக் கண்டு கொள்ளென்றே
        தடுத்தார் அவனின் குருசுக்ரர்.

யாசித் தவர்க்குக் கொடுப்பதுதான்
        அரச தர்மம் என்றுரைத்துப்
பூசை செய்தே என்வேண்டும்
        புகலும் என்ன , வாமனரும்
யாசிக்  கின்றேன் மூவடிமண்
        அதனைக் கொடுத்தால் போதுமென
யோசிக் காமல் மகாபலியும்
        உடனே தானம் தான்செய்தான்

உற்ற உருவம் பெரிதாகி
        உயர்ந்து யர்ந்தே பெரிதாகி
ஒற்றை அடியில் விண்ணும்மற்
        றொன்றால் மண்ணும் அளந்துவிட்டு
மற்றோர் அடிக்கு வழியென்ன
      மன்னா சொல்நீ எனக்கேட்டார்

என்றன் தலையில் உன்னடியை
        எடுத்து வைத்தால் ஓரடியாம்
என்றும் நிலைப்பேன் வைக்கவென
        இறைஞ்சிச் சென்னி தான்தாழ்த்த
மன்னன் தலையில் வைத்தவடி
        மகிமை யாலே, மஹாபலியும்
உன்ன தங்கொள் பாதாளம்
        உற்றான் பீடு பெற்றானே!

பரசுராமாவதாரம்

இருபத் தோரு தலைமுறையாய்
        எண்ணி றந்த அரசர்களை
உருவத் தொலைத்து, காகுத்தன்
        ஒருவில் வளைக்கத் தான் தோற்று
விரிந்த பூமி கஷ்யபர்பால்
        விட்டு விட்டுத் தனக்காகப்
பரசு ராம பூமியினைப்
        படைத்துக் கொண்டார் பதம்போற்றி!

இராமாவதாரம்

ஓர்சொல் ஓர்வில் ஓரில்லில்
       உறுதி கொண்ட உத்தமனாம்
யார்சொல் கேட்டும் தன்னுறுதி
       அகற்றிக் கொள்ளா நேர்மையுளான்
பேர்சொல் அரக்கன் இராவணனைப்
          பெரிய போரில் தான்மாய்த்துச்
சீர்கொள் தேவி தனை மீட்டான்
        தேர்ந்தான் இராம ராஜ்ஜியமே!

பலராமாவதாரம்

முந்தைய அவதா ரத்தில்
        முனைப்புடன் வந்த தம்பி
பிந்திய அவதா ரத்தில்
        பெரியவன் ஆனான்,  கண்ணன்
சிந்தையில் உறைந்து வீரச்
        செறிவுகள் நிறைந்த மேலோன்
விந்தையாய்த் துரிய னின்பால்
      விருப்புகள் கொண்ட வீரன்.

கிருஷ்ணாவதாரம்

ஒருத்தி வீட்டில் பிறந்தவனாம்
        ஒருத்தி வீட்டில் வளர்ந்தவனாம்
ஒருத்தி மானம் காத்தவனாம்
      ஒருவ னாகத் தனைமட்டும்
இருத்திப் பாண்டு புத்திரர்கள்
        இழந்த உரிமை மீட்டவனாம்
திருத்தித் தர்மம் காத்தவனாம்
      தேவ தேவன் கண்ணபிரான்.
     
கல்கி

அறமெலாம் அழியும் காலை
        அவதரிக் கின்றேன் என்ற
முறையினுக் கேற்ப, இங்கே
        மூண்டுள கலியின் பின்னாள்
நிறைபெறு கல்கி யாக
      நிகழ்ந்திடும் அவதா ரத்தால்
அறமெலாம் தழைக்கும் ஞாலம்
      அவமெலாம் நீங்கி வாழும்.!

No comments:

Post a Comment