Saturday, May 11, 2019

ஆதிபராசக்தி


ஆதிபராசக்தி

அறுசீர் விருத்தம்

சொல்லெலாம் கடந்து நிற்கும்
                                ஜோதியை, எங்கள் நெஞ்சக்
                        கல்லெலாம் கனியச் செய்யும்
                                கனலியைக் கற்ப கத்தை
                        எல்லையும் இன்றி , ஆனால்
                                எல்லையுள் மகிழ்ந்து நிற்கும்
                        வல்லியை , தாயை, சக்தி
                                மகிமையைப் பாடுகின்றேன்!
கண்ணிகள்

ஆதி பரா சக்தி  அம்மா ஆதி பராசக்தி
ஆடி ஆடி ஆடி வருவாய் ஆதிபராசக்தி

ஏதும் போதும் மோதாப் போதே ஆதி பராசக்தி
என்றோ ஒன்றாய் நின்றாய் அன்றாஒ ஆதி பராசக்தி

காலம் கோலம் ஞாலம் ஓலம் ஆதி பராசக்தி
கற்பனைக்குள் நீ செய் பாடல் ஆதி பராசக்தி

கந்தில் பொந்தில் காலம் நீளும் ஆதி பராசக்தி
காட்சி மாறிக் கருணை ஆகும் ஆதி பராசக்தி

பந்தெழுந் தெழுந்து வீழும் ஆதி பராசக்தி
பாய்ந்து பாய்ந்து பாதம் வாழும் ஆதி பராசக்தி

ஆக்கக் காக்க நீக்க என்றே ஆதி பராசக்தி
அங்கங்கங்கே ஆளை வைத்தாய் ஆதி பராசக்தி

பூக்கும் பூவும் வாக்கும் யாவும் ஆதி பராசக்தி
போற்றி போற்றித் தேற்றிக் கொள்ளும் ஆதி பராசக்தி

அன்னை அன்னை அன்னை அன்னை ஆதி பராசக்தி
அம்மையப்பன் அப்பனம்மை ஆதி பராசக்தி

என்ன வண்ணம் என்ன கோலம் ஆதி பராசக்தி
எண்ணும் எண்ணில் என்னப் போமோ ஆதி பராசக்தி

காற்று வான்தீ நீர்மண் பூதம் ஆதி பராசக்தி
கண்மெய் நாக்கு மூக்கு காது ஆதி பராசக்தி

நேற்று மின்றும் நாளைப் போதும் ஆதி பராசக்தி
நெஞ்சில் பூக்கும் நினைவு யாவும் ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி அம்மா ஆதி பராசக்தி
ஆடி ஆடி ஆடி வருவாய் ஆதி பராசக்தி!

அன்னை ஆடும் அரங்கு

அறுசீர் விருத்தம்

தன்னுளே நிலைத்து நிற்கும்
        சத்திய ஜோதி என்னும்
மின்னலை, இறையை, வைய
        விடிவினை, ஞானம் என்னும்
கன்னலை, சக்தி தன்னைக்
        கருத்துடன் போற்று கின்ற
அன்பர்தம் உள்ளம் அன்னை
        ஆடிடும் அரங்கம் ஆகும்!

அலைமகள், அரும்பெரும் அணிமணி பொருள்களை அருளுடன் அளித்திடும்
 நிலைமகள், நிறைமகள், நினைவிலும் மனமகிழ் விழைத்திடும் நெறிமகள்
தலைமகள், துணிவினைத் தருமகள், அறுசுவை கொழித்திடும் தனிமகள்
கலைமகள் மலைமகள் கனிவுடன் பரவிடும் கனிமகள் அருள்கவே


No comments:

Post a Comment