Saturday, May 11, 2019

எனக்கு வேண்டும் வரம்


எனக்கு வேண்டும் வரம்
கும்மி

நட்ட நடுநிசிப் போதினிலே- முதல்
நாளும் விழித்தே எழுதியதால்
பட்டப்பகலினில் கண்ணயர்ந்தேன்- ஒரு
பட்டுக் குழந்தை கனவில் கண்டேன்

எட்டி வந்தாள் கரம் தட்டி வந்தாள் இசை
எத்தனை எத்தனை கொட்டி வந்தாள்
பட்டுச் சிறுகன்ன மொட்டுக் குழிவிலே
பாயும் ஒளி மின்னல் வெட்டி வந்தாள்.

பாட்டொன்று பாடுநீ ஆடுகிறேன் என
பாகைக்கு ழைத்தே தமிழுரைத்தாள்
பாட்டெடுத்தேன் அந்த நாட்டியத்தில் வந்த
பாப்பா மறைந்தாடத் தாயெழுத்தாள்

உன்றனின் பாட்டில் மனமகிழ்ந்தேன் - உன்றன்
உள்ளத்து மென்மையில் நான் நெகிழ்ந்தேன்
என்ன வரம் வேண்டும் கேளெனச் சொல்லியே
என்னெதிர் நின்றனள் காமாட்சி

அம்மா பராசக்தி ஆதிப் பரம்பொருள்
ஆனவளே எங்கள் காமாட்சி
இம்மா நிலத்திலே எல்லோர் செயலுக்கும்
என்னருள் அம்மையே நீசாட்சி

பாடம் படிக்கிறேன் பாதி மறக்கிறேன்
பட்டதும் நெஞ்சில் படிவதில்லை
மேடு பள்ளம் என்ற வாழ்வு நெறிக்குள்ளே
வேடம் போடாமல் முடிவதில்லை.

காதுக்குச் சல்லடை இல்லையே அம்மையே
காச்சுமூச்சுக்களும் கேட்கிறதே
வாதுக்கும் வம்புக்கம் வாய்க்கத்தி வீச்சுக்கும்
மாறிமாறி மனம் வேட்கிறதே *

தன்முதுகைக் தொடும் முன் வயிற்றுப்பள்ளம்
சாலை நெளிவில் கிடக்கிறதே
முன்விழுந் தொந்தியின் தன்சுமை ஊர்வலம்
முந்தி அருகில் நடக்கிறதே *

நாயும் மனிதனும் போட்டி போடும்ஒரு
நாடகம் எங்கும் நடக்கிறதே,
காயும் கனிகளும் பாதிபாதி தின்று
கல்யாண வீட்டில் கிடக்கிறதே *

என்னவன் மாற்றான் மனிதன் விலங்கென
எந்தஓர் பேதமும் தோன்றhமல்
இன்ன செய்தால் எனக்கின்ன வரும் எனும்
எண்ணமே நெஞ்சினில் ஊன்றாமல்.

நெஞ்சம் இளக்கிடு காமாட்சி, அருள்
நேசம் வளர்த்திடு காமாட்சி,
செஞ்சொல் கவிதையில் நின்கருணைத்திறம்
சேர்த்துக் கொடுத்திடு காமாட்சி *

அங்கொரு மூலையில் சின்னக் கசிவினை
யானுமறிந்தேன் அதிசயமோ
இங்கேயுன் நாமம் இசைத்தனால் வந்த
ஏற்றமோ பக்தி அனுபவமோ ?

என்கைச் சிறுவிரல் துன்பப் படுவோரின்
இன்னல் தவிர்த்திடக் கூடுமெனில்
மென்மலர் அன்னமே காமாட்சி மண்ணில்
மீண்டும் பிறந்திடச் சம்மதிப்பேன்.

காட்டிலே ஓர்செடி கண்விழிக்கச் செயக்
காற்றை அனுப்பிடும் காமாட்சி
நாட்டில் துயரற உன்னருள் தூதுவன்
நானாக வேண்டுமே காமாட்சி

பொங்கும் கருணைக் கடலே அமுதமே
புத்தம் புதுமலர்ப் பூரணமே
இங்கென் இதயத்தில் உன்கருணைத்திறம்
ஏறணுமே துயர் தீரணுமே *


No comments:

Post a Comment