Friday, May 10, 2019

எப்படிச் சொல்வேன்?

எப்படிச் சொல்வேன்?
எண்சீர் விருத்தம்

கால்மடக்கி, குத்துக்கால் அழகாய் வைத்துக்
        கால்விரலில் கைவிரலில் செம்பஞ் சிட்டு
சேல்விழிகள் விரிந்தபடி கனிவு தேக்கச்
        செம்மையிதழ் புன்னகையை எழிலாய்ச் சிந்த
மேல்முகத்தை ஒருபக்கம் சற்றே சாய்த்து
        வெண்வயிரக் குழையணிகள் காதில் தொங்க
நூல்பிடித்த இடையொட்டி யாணம் மின்ன
        நூபுரங்கள் விளங்குகிற எழில்தான் என்னே1
கருங்குழலில் வைரயிழை மின்ன, மூக்கில்
       
கணக்காக மூக்குத்தி அழகு கூட்ட
அருங்கழுத்தில் மாணிக்கம் ஒளியைச் சிந்த
       
அழகுகரம் வண்ணமய வளையல் கூட 
விரல்களிலே மோதிரங்கள் கூட்டம் சேர
       
விரிசடையில் எழில்வில்லை அழகு காட்டத்
திருமுடியில் மலர்க்ரீடம் திகழ , உன்றன் 
       
தெரிசனத்தைச் சொலச்சொற்கள் தேடு கின்றேன்.
நேரிசை வெண்பா
கண்ணழகைச் சொல்வதுவா, கால்மடித்து வீற்றிருக்கும்
பெண்ணழகைச் சொல்லிப் பிதற்றுவதா-- வண்ணமிகு
புன்னகையைச் சொல்லுவதா, பூத்திருக்கும் பேரழகே
என்னவெனச் சொல்வேன் இதை?
 

No comments:

Post a Comment