என்ன கொடுப்பதவளறிவாள்
அறுசீர் விருத்தம்
சரணம் அம்மா நீயென்றே
சக்தி பாதம்பணிந்திடுவோம்
மரண அச்சம் ஓடிவிடும்
வாழ்வில் என்றும் உன்னதமே
தருணம் நோக்கிக் காலத்தைத்
தள்ளா தின்னே சரண்புகுவோம்
கருணை கொண்டு நமையெல்லாம்
காளிகாம்பாள் காத்திடுவாள்
*
கும்மி
என்ன கொடுப்பதவளறிவாள்- அதை
என்று கொடுப்பதவளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக்
கொடுப்பதென்று
அத்தனையும் அவள் தானறிவாள்
*
இந்த விதியைப் புரிந்துகொண்
டாலென்றும்
இன்னல்கள் ஏதும் கிடையாது
வந்துநிற் கும்யாவும் அன்னை
அருளெனில்
வாழ்ந்துநாம் பார்க்கத் தடையேது?
நீலக் கடலும் ஓம் ஓமென்றே
நித்தமும்
நீட்டி முழக்கிக் கவிபாடும்
நாலு மறைப்பொருள் ஆனநம்
தாயவள்
நல்லரு ளாலே புவியோடும்
காலம் கணிப்பவள் காளிகாம்பாளவள்
காலம் கடந்தவள்,பூரணியாம்
மூலம் அவளென மூவுலகும் அருள்
முந்தும் அவள்பதத் தோரொளியாம்.
No comments:
Post a Comment