Monday, May 13, 2019

கலைமகள் காவடிச் சிந்து


உள்ளமெனும் அன்னமதன் மீது - கலை
    
ஊர்தியென நீயமரும் போது -மனம்
     
உலவும் திசை பலவும் நிலவும் உனதருளை
     
உள்ளும் தமிழ் விள்ளும்
வெள்ளமென நீபொழிந்தாய் அன்று - பெரும்  
     
வேந்தனென நான் திரிந்தேன் வென்று - கணம்
     
விரையும் வரையிலுமுன்  விரியும் அருள்தினமும்
     
மீண்டும் வர வேண்டும்


காதலுடன் ஆழிமறை பாடும் - புலர்
      
காலையில் அலைகளெலாம் ஆடும் - இருள்
      
கரையும் மறையும் தினம் பறவை உனையழைத்துக்
      
கரையும்  கதிர் விரையும்
ஆதியுலகம் முழுதும் பள்ளி - கல்வி
      
யார்தருவார் உன்னையன்றி அள்ளி - உன்
      
அருளில் தெருளுமுயிர் பெருகும் அறிவுபெறல்
      
ஆகும் மடம் போகும்
உன்விரலில் நாதலயம் வாழும் - அதன்
    
ஊடுறையும் மேவுசுரம் ஏழும் -எழும்
    
ஒலியின் தலைவியென உலகின் மொழிபலவும்
     
உன்னால் வரும் முன்னால்
மின்னலென வேண்டும் அருள் வாக்கு- அந்த
    
வித்தகத்தை என்னில் உருவாக்கு -கொடும்
    
விதிக்கும் விதிக்கும் மதி பதிக்கும் உனதுவரம்
    
விருப்பம் தரும் திருப்பம்
ஆயகலை அத்தனைக்கும் தேவி - உனை
    
அண்டுகிறோம் உன்பெயரைக் கூவி - உன்
    
அடியின் பிடியை இனி விடுவதிலை தருவாய்
    
ஆக்கம் மிக ஊக்கம்
மாயவலை சிக்கியுள ஈனம் - தனை
    
வாட்டி ஒளி நல்கிடுவாய் ஞானம் -இனி
     
வருதல், தருதல் வளம் பெறுதல் அனைத்துமுன்றன்
    
வரமே உன் பரமே!
இலந்தை
8- 10-2016

No comments:

Post a Comment