ஆண்டவன் பெருமை பெரிதா அடியார்கள் பெருமை பெரிதா என்ற கவிதைப் பட்டிமண்டபத்தில் நான் ஆண்டவன் பெருமை பற்றி வாதிட்டேன் அப்பொழுது
படைத்த பாடல்களில் சில:
ஆண்டவன் பெருமை
அவனன்றி ஓரணுவும் அசையாது மெய்யே
அண்டமெலாம் ஆக்கியவை ஓட்டுமவன் கையே!
புவனமுள உயிர்களவன் புன்னகையில் வாழும்
புருவமதன் சிறுநெரிசல் போதுமெலாம் வீழும்
நவநவமாய் நிதம் நடக்கும் அந்திவண்ண வீச்சு
நாதனவன் கையிலுள்ள தூரிகையின் பூச்சு
அவனியெல்லாம் அவன் இயலாம் ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கே ஈடுண்டோ இங்கே? 1
ஓடென்றால் ஓடிவரும் உள்வாங்கும் மூச்சு
ஒடுங்கென்றால் ஒடுங்கிவிழும் வேறில்லை பேச்சு
பாடென்று சொல்லுகிறான் பாடிடும்நம் நாக்கு
பாடலிலே வருவதெல்லாம் அவன்தந்த வாக்கு
கோடொன்று போட்டுவிட்டான், சுற்றுகிறோம் மண்ணில்
கூவியழத் தெரிந்துவிட்டால் வீடுண்டு விண்ணில்
ஆடென்றால் ஆடுகிறோம், ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கே ஈடுண்டோ இங்கே? 2
குறைபலவும் நமக்குண்டு , குழப்பங்கள் உண்டு
கூறுபுகழ் அடியவர்க்கும் அவைகொஞ்சம் உண்டு
நிறைவுகளின் நிறைவெவனோ அவன்தெய்வம், தேவை
நிழல்கூட விழாதவனின் அடிபணிதல் சேவை
மறைகளெல்லாம் அவன்புகழைத் தானன்றோ பாடும்
வயிற்றுக்குச் சோறவன்தன் கையன்றோ போடும்!
அறிவுகளின் அருவியவன் , ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கே ஈடுண்ட்டோ இங்கே? 3
அண்டங்கள் தாளாக, அலைகடல் மை யாக
அடர்கானின் மரமெல்லாம் எழுதிடும் கோலாகக்
கொண்டிங்கே இறைவன்புகழ் நாமெழுதும் போது
கோடியிலே ஒருபங்கு சொல்லி முடியாது
பண்டிங்கே ஓர்பாடல் சொல்லிவைத்த சேதி
பகர்ந்துவிட்டேன், இறைவன்தான் ஒளிகூட்டும் ஜோதி
அண்டுங்கள், குறையில்லை, ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமக்கே ஈடுண்டோ இங்கே? 4
அடியவரின் பெருமையெலாம் அவன்தந்த பெருமை
அவனன்றி உலகத்தில் யாவையுமே வெறுமை
பொடியினிலே ஓர்பொடியில் அண்டம் உடைப்பான்
புன்னகையின் சிறுநெளிவில் யாவும் படைப்பான்
கொடிமலரின் இதழ்விரிக்கக் கொடியதவம் இருப்பான்
குன்றுகளைப் பொடித்திடவே ஓர்கணத்தில் சிரிப்பான்
அடிமலரைப் பற்றிடவே ஊதேடா சங்கே!
ஆண்டவனின் பெருமைக்கே ஈடுண்டோ இங்கே! 5
கவிபெரிதா, உரைபெரிதா, வார்த்தைகளைக் கூட்டிக்
கணக்கிட்டே உரைபெரிதாய்க் காட்டுவதா போட்டி?
கவிதையென ஆண்டவனே கானம்பி டிப்பார்
கறங்கிடவே நமையெல்லாம் ஆட்டிப்படைப்பார்
இவையென்றும் அவையென்றும் எல்லாமாய் நின்றே
இயக்குபவன் தனைப்புகழ்வோம் அவன்கடவுள் என்றே
அவைசிறப்ப தவனாலே ஊதேடா சங்கே!
ஆண்டவனின் பெருமைக்கீடு ஏதேடா இங்கே! 6
புதிராகத் தானிருப்பான் கேள்விகளைத் தொடுப்பான்
புதிருக்கும் கேள்விக்கும் விடையவனே கொடுப்பான்
அதிகாரி வீட்டுக்குச் சேவகர்கள் வருவார்
அவர்களுக்கு நீர்பருக அதிகாரி தருவார்
அதிகாரி சேவகர்க்குத் தொண்டுசெய்தார் அன்றோ
அதனாலே சேவர்க்கே பெருமையெனல் நன்றோ
அதிகாரம் அவன்தானே ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கீடு ஏதேடா இங்கே! 7
சேயதன்முன் யானையெனத் தான்குனிவான் தந்தை
சேய்பெருமை தந்தையினும் சிறந்ததெனல் விந்தை
தாயெனவே பிறவியெலாம் தாங்கிடுவார் யாரே
சத்தியமாய் நிலைக்கின்ற இறைவன் அவன் பேரே!
வாயிருப்பதே அவனை வாழ்த்திடவே அன்றோ
மனமிருக்க அவன்பெருமை மறந்திடுதல் நன்றோ?
யகலை அவனென்றே ஊதேடா சங்கம்
ஆண்டவனின் பெருமைக்கீடு ஏதேடா இங்கே! 8
பூவிதழின் மென்மையவன், புல்லிதழின் பச்சை
பூசுகிற வண்ணமெலாம் அவன்கரத்தில் விச்சை
நாவிதழின் நளினத்தில் எரிமலையைக் காட்டி
நடனமிடும் அவன்தானே நாதபரமேட்டி!
ஏவுகிறான், ஏறுகிறான், அதிகாரம் உண்டு
எடுபிடியாய்ப் பணிசெய்வான் அவன்செய்வான் தொண்டு
வதெல்லாம் அவனருளே, ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கீடு ஏதேடா இங்கே! 9
எப்பொழுதும் எவ்விடத்தும் எல்லாமும் கி
இருக்கின்ற ஆண்டவனே மிகப் பெரிய யோகி
செப்புகளாய் நமையெடுத்தே ஆடுகிறான் ட்டம்
தெய்வமவன் ஆணையில்தான் நம்நரம்பில் ஓட்டம்
இப்படித்தான், இத்தனைதான், இன்னபடி கும்
என்றவனின் விதிப்படிதான் எல்லாமும் போகும்
அப்பனவன், அம்மையவன், ஊதேடா சங்கே
ஆண்டவனின் பெருமைக்கீடு ஏதேடா இங்கே! 10
No comments:
Post a Comment