Monday, May 20, 2019

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பதிகம்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பதிகம்

அரவமென ஒருபுற்றில் அம்மையே நீயிருந்(து)
    அகிலமே காக்க வந்தாய்
    ஐந்துதலை கொண்டதால் ஆணவம் தான்கொண்ட
    அயனைநீ ஆட்டி வைத்தாய்
சரஸ்வதி சாபத்தால் தன்னுரு மாறிநீ
    தரணியில் இறங்கிவந்தாய்
    தழல்மலை அருணைசேர் தடாகம் முழுகினாய்
    சாபமும் தீர்ந்ததம்மா!
அரியநின் தமையனின் ஆலோசனை  கேட்டே
    அரன்கர மண்டை யோட்டை
    அம்மையே தந்திரம் செய்துநீ வீழ்த்தினாய்
    அதைமிதித் தாழ விட்டாய்
அரியமேல் மலையனூர் அமர்ந்தருள் புரிகின்ற
    அங்காள பரமேஸ்வரி
    அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
    ஆதியே தேவி உமையே!                                1

என்னென்ன சாபங்கள் ஏற்றிங்கு வந்தனம்
     என்பதனை நாங்களறியோம்
     இறைசாபம் நீக்கிடும் அருள்ஞானம் கொண்டநீ
     எம்சாபம் நீக்க வேண்டும்
உன்னன்புக் கீடில்லை, உலகத்தைக் காத்திடும்
     உத்தமத் தேவி நீயே!
     உள்ளத்தில் ஒன்றியே உன்றனைத் தொழுதிடில்
     ஊறெலாம் போக்குகின்றாய்
முன்னென்று சொல்வதும், பின்னென்று சொல்வதும்
     முன்னரே நீகடந்தாய்
     மூலமே, இன்னருட் சீலமே, ஞாலமே
     முன்வந்து நீநடந்தாய்                                  2
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கு மாட்கொளும்
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!

சாபத்தைப் போக்குவாய் பாபத்தை நீக்குவாய்
     சந்தோஷம் நீ நல்குவாய்
     சக்தியே புற்றினுள் தங்கிடும் தேவியே
     சத்தியக் காளி அம்மா
கோபத்தைக் கொண்டநீ குழந்தைகள் எம்மீது
     கொஞ்சமும் காட்ட மாட்டாய்
     கொக்கரித் திடுந்தீய சக்திகள் தம்மையே
     குத்திக் குடல்பிளப்பாய்
நீபந்து சொந்தமென நிச்சயம் சொல்லுவோம்
      நெஞ்சிலே தாங்கி நிற்போம்
      நேரான பாதையைச் சீராகக் காட்டிநீ
      நிச்சயம் காக்க வேண்டும்
ஆபத்து நேராமல் அடியரைக் காத்திடும்
      அங்காள பரமேஸ்வரி
      அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
      ஆதியே தேவி உமையே!                              3

புற்றிலே நாகமாய்ப் போந்தனை அம்மையே
     புவியினைக் காக்க வந்தாய்
     பொல்லாத மன்னனின் புத்தியை மாற்றியே
     பூமியில் கோவில் கொண்டாய்
நற்றவம் செய்துநீ நாயகன் தன்னையிஞ்
     ஞாலத்தின் மீது கண்டாய்
     நாயகன் பசிபோக்க அன்னபூ ரணியாகி
           நல்லறம் தோற்றுவித்தாய்
பற்றியே மீனவர்  பக்தியாய் நிற்கவே
     பரிவுடன் அருள்புரிந்தாய்
    பரம்பரை யாயவர் பூசைகள் புரிகின்ற
     பாத்யதை நீ கொடுத்தாய்
அற்றதலை மேலடி வைத்தருள் செய்தனை
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!                               4

தீங்குசெய் ராக்கதன் வல்லாள கண்டனைத்
     தீர்த்திட வேண்டிவந்தாய்
     தேவிநீ முதியவள் வடிவிலே அவனது
     தேவிமுன் சென்று நின்றாய்
பாங்குடன் கர்ப்பம் தரிப்பாய்நீ ஆயினும்
     பர்த்தாவை நீயிழப்பாய்
     பத்திரம் என்றனை, ஒப்பினள் கர்ப்பமாய்ப்
     பையனை உட்சுமந்தாள்
வீங்கிருள் போதிலே இருளநீ வாவென
     வெடித்தவன் வந்து நின்றான்
     வீம்புகொள் வல்லாள் கண்டனைக் கொன்றனை
     விண்ணவர் போற்றி செய்தார்
ஆங்காரி, ரீங்காரி, ஓங்காரி அம்மையே
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!                               5
உளமார உன்னையே ஒன்றியே எண்ணிடும்
      உயர்வான உள்ளம் வேண்டும்
      ஒருபோதும் மறவாத நினைவோடு வாழ்ந்திடும்

      உன்னதம் வேண்டும் வேண்டும்
களவான எதனையும் கருதாத நெஞ்சமும்
      கல்வியும் நல்க வேண்டும்
      கண்ணியத் தோடெவர் நெஞ்சமும் புண்படா
      கனிவான சொற்கள் வேண்டும்
தெளிவான சிந்தையும் திறமான செய்கையும்
      திடமான உளமும் வேண்டும்
      சிக்கென்று நின்னையே சிந்தையில் வைத்தனம்
      தேவியே காக்க வேண்டும்
அளவோடு நல்கினும் ஆனந்தம் கொண்டிடும்
       அங்காள பரமேஸ் வரி
       அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             6

கலைமகள் சாபத்தி லுருமாறி இங்கொரு
       காரணத் தால்வந்தனை
       கைலைமலை வாசிநீ காசினிக் கேவந்து
       காப்பதே உன்சிந்தனை
வலையிடைப் பட்டிங்கு வாழ்கிறோம் சிக்கலில்,
       மாதாநீ காக்க வேண்டும்
       வாராத வன்ணமே வந்தமா தேவியே
       வணங்குவோம் மீண்டு மீண்டும்.
உலவுதற் கிட்டனை உலகினில் எம்மையே
       உன்னையே நோக்குகின்றோம்
       உன்றனரு ளாலிந்த வாழ்வினில் நாள்களை
       ஓடியே போக்குகின்றோம்
அலைகின்ற மனத்தினை அடக்கியே வரமருள்
       அங்காள பரமேஸ்வரி
       அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             7

பாதையில் தெளிவில்லை, பயணமும் எங்ஙனம்
     பத்திர மாய்நடக்கும்
     படைத்தனை, தெளிவினைக் கொடுத்திடு பயணத்தைப்
     பத்திர மாய்ந டத்து.
நீதிநீ நீதியை நித்தம்ந டத்திடும்
     நேர்மைநீ நீதி பதிநீ
     நேர்வழி காட்டுநீ நீசமே பூட்டுநீ
      நித்தியம் நாட்டு நீயே!
சோதியே சூக்குமக் காரியே மாரியே
      சூரியே மாதேவியே
       சூலியே, நீலியே, காளியே, தோற்றமே
       சொல்லொணா மாசக்தியே
ஆதிநீ அநாதிநீ, யாதுமாய் நின்றிடும்
       அங்காள பரமேஸ்வரி
       அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             8

மாசிசிவ ராத்திரிம யானக்கொள் ளைக்குநீ
       வருகின்ற போதி லுன்றன்
       வரவினைப் பார்த்தருள் பெற்றிடக் கூடுவார்
       மருள்வந்து பலராடுவார்
வீசியெறி காய்கனி விதைகளைப் பொறுக்குவார்
        வேண்டுதல் நிறைவேற்றுவார்
        வேதனை போக்கியும் சோதனை நீக்கியும்
        வேண்டும் வரம் நல்குவாய்
காசுபணம் கல்விநலம் கண்ணிய வாழ்வுநெறி
        கலங்காத் திடகாத்திரம்
        கட்டான பேறுபதி னாறுமளித் திடுகின்ற
        காளியே தாள்பணிகிறோம்
ஆசிகளைத் தந்தெமை ஆதரிக் கின்றதாய் 
        அங்காள பரமேஸ்வரி
        அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
        ஆதியே தேவி உமையே!                                 9

கரம்நான்கு கண்மூன்று காலிரண் டோர்முகம்
        கதிரொளித் திருமகுடமும்
        கரமொன்றில் சூலமும் மறுகரம் உடுக்கையும்
        கச்சிதக் கூர்வாளொடு
விரிவான பாசமும் கொண்டுநீ தோன்றுவாய்
        வெற்றியை  நீநல்குவாய்
        மீனவர் பூசையில் தானகம் மகிழ்கின்ற
        வீரியே மாகாளியே
வரவிலும் செலவிலும் வலம்வரு வாழ்விலே
        மகிழ்ச்சியை  நல்க வேண்டும்
        மாதாநீ ஆங்காரி, ஆனாலும் மக்கள்மேல்
        மாறிடாப் பாசத்தினள்
அருள்வேண்டி அம்மையே அடிபணி கின்றனம்
        அங்காள பரமேஸ்வரி
        அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
        ஆதியே தேவி உமையே!                                 10

No comments:

Post a Comment