Saturday, May 11, 2019

வேங்கடவன்


வேங்கடவன்

கலிவிருத்தம்- அதிகரிணி

பாடும் உளம் தன்னில் வளர் பண்ணாய் நிறைபவனே
நாடித் தினம் கூடித்தொழும் நல்லோர்க் கருள் புகலே
ஓடும் முகில் தேடித்துயில் ஓங்கும் மலை இறையே
வாடும் மனம் ஆனந்தமே   மாந்தும்  வரம் அருளே!

கலிவெண்பா

கலிவந்தால் மக்கள் கலங்கிடுவார் , மிக்க
நலிவெய்தி வாழ்வில் நலம்துறப்பார் என்றே
கலியின் பிடிமாய்த்துக் காத்திடவே என்றும்
நிலையான அன்பினால் நீ இவந்தாய், என்றென்றும்
தன்னையே போற்றித் தவித்திடும் மக்களுக்கு
உன்னையே போற்றும் உறுதியினை நீ தந்தாய்
ஏழுமலை ஏறி எனைக்காண நான்விரும்பி
வாழும் மலைக்கு நீ வாவென்றழைக்கின்றாய்
தன்கடன் தீர்க்குமுன் சார்ந்தோர் கடனெல்லாம்
உன்கடன் ஆக ஒருவா நீ தீர்க்கின்றாய்
சோம்பலை ஓம்பிச் சுகங்கண்டு தன்மனத்தே
கூம்பிக் கிடக்கும் குருட்டு மனத்தவர்க்குக்
காட்டிடடவோ குன்றேறிக் காட்சி கொடுக்கின்றாய்
வாட்டங்கள் போக்கிப்பின் வாழ்த்துகிறாய். குன்றின்
படியேறத் துன்பம் படியிறங்கும், உன்றன்
நீடுமலை யேறி நினைக்காண மேவுகையில்

அடிபரவ உள்ளம் அமைதியுறும்ஓங்குமெழில்
போடும் எழிற்கோலம் போற்றற் கெளிதாமோ?
நீல நெடுவான் நிறமாய் நிறைகின்றாய்
கோல மதியில் குளுமையாய் ஆகின்றாய்
சுட்டுப் பொசுக்கும் சுடர்வெய்யில் வெம்மையிலே
வட்டத் திகிரியின் வாகினைச் சேர்க்கின்றாய்
ஓங்கும் மலைக்கோடு உயர்ந்து விழுகின்ற
பாங்கில் அதன்வண்ணப் பாழதனில் நீசிரிக்கும்
கன்னக் குழிவின் கனிவினைக் காட்டுகிறாய்
முன்னே மழையிரவில் மூண்ட பனிச்சல்லா
மார்பிலே போர்த்து மயிலுறக்கம் கொள்ளுகிறாய்
ஆர்வமாய்க் காலை அரும்பிடுமுன் காவிலுறைப்
புள்ளினம் கூட்டுகின்ற பள்ளி யெழுச்சீயிலே
உள்ளம் மகிழ்வுற்று உடனே நீ கண்விழிப்பாய்
உன்றன் விழியின் ஒளிப்புனலில் முக்குளித்து
முன்னேறிச் செல்லுகையில், முன்னேயிப் பாதையில் நீ
ஆவின்தீம் பாலுக் கலைந்ததுவும், காட்டுப்பூங்
காவினிலே காதலிளம் கற்பனைகள் கூட்டியதும்
யானையின் பின்னே அதிர நடந்ததுவும்
கானக் குறத்தியாய் காதல் உரைத்ததுவும்
அத்தனையும் நெஞ்சத்தில் ஆழத் திரையாடும்
சித்தம் களிக்கும், செல்லும் வழியதனில்
என்றோ ஒருநாளில் ஏகினாய்நீ என்பதனால்
சென்னி தரைதாழும், தெய்வம் நினைவாகும்
கோவிந்தா என்றே வாய் கூப்பிடும் போதினிலே
பாவம் தொலையும் , பயம்விலகும், நெஞ்சில்
பெருமாள் எனவுன்னைப் பேசுபவர் எல்லாம்
பெரும் ஆளாய் ஆகிடுவார். பீடுறுவார் என்றைக்கும்
செல்வத் திருமகளால் சீனிவா சன் நற்பேர்
நல்ல முறைபெற்ற நாயகனே , வேங்கடவா
எங்கும் பரவும் உன் இன்பத் திருநிழலில்
தங்கி இருக்கத் தமியேற் கருள்புரிவாய்
வெற்று விளக்காய் விளங்குமென் நெஞ்சத்தில்
கற்றை ஒளியாய்க் கலந்துறை கின்றனைநீ
பட்டம் விடுக்கின்றேன், நீபறக்க வைக்கின்றாய்
திட்டம் யான் தீட்டச் செயலை நீ செய்கின்றாய்
கொட்டும் பனியின் குளிரில் நடுங்குகிறேன்
கொட்டும் பனியின் கொடுக்கைத் தறிக்கின்றாய்
ஓங்கும் மலைமேலே ஓடி வருகின்றேன்
ஓங்கும் மலையின் உயரம் மறைக்கின்றாய்
வீங்குமோ காலென வேதனை கொள்கிறேன்
தேங்கும் மனத்தில் திறமெலாம் சேர்க்கின்றாய்
கோவிந்தா என்றுன்னைக் கும்பிட்டு நான் வந்தால்
வாவென்றே என்ன வரவேற்க வாராயோ?
அன்புப் பெருங்கருணைக் கஞ்சலிகள் சொல்கின்றேன்
என்னெஞ்சத் தென்றும் இரு.


No comments:

Post a Comment