Sunday, May 12, 2019

ம\யிலை வாராகி சவ்வாது விடு தூது


மயிலை வாராகி சவ்வாது விடு
               தூது
உலகம் அனைத்தும் உருண்டோட வைத்தே
இலகும் இயக்கம் இயற்றி – நலமாய்
அடியாரைக் காத்திடும் அம்மைவா ராகி
படியாரை வேரறுத்துப் பக்தர் – இடர்தீர்க்கும்
தேவி திருப்பாதம் சென்று தரிசிக்கும்
ஆவலில் இவ்விடத்தே ஆர்க்குமனக் – கூவலையும்
இன்னும் ஒருபிறவி இன்றி அவள்பாதம்
தன்னில் கிடந்து தரிசிக்கும் – உன்னதமாம்
முக்தி நிலைவேண்டும் மொய்ம்பினையும்
அக்கறையாய்ச் சென்றே  அறிவிப்பார் பக்கத்தே   10
யாருள்ளார் என்றே அலசினேன்  நேரெதிரே
கூருள்ள கத்தி
, குடுவைகள் – யாரெதனைச்
சொன்னாலும் கேட்பதனைச் சொல்லும் கிளிப்பிள்ளை
மின்னும் ஒளிப்புறா  வேல்கம்பு  முன்னீடாய்
என்னவுண் டென்றே  இயம்புபுகழ்ச் சவ்வாது
இன்னும் பலவும் இருந்தனவால் – என்னபொருள்
என்றனுக் கேற்றதென எண்ணியே நான்பார்த்தேன்
சின்னஞ் சிறுகத்தி சீற்றத்தில் – என்னென்ன
செய்யும் எனவே தெரியாது.  வேறிடம்
எய்தக் குடுவைகளுக் கேலாது – மொய்கிளியோ    20
வேறெவரின் பேச்சை விரும்பி அதைப்பிடித்தே
கூறிவிட்ட செய்தியினைக் கூறாது – மீறுமெழில்
மாடப் புறாவுக்குச் சீட்டெழுதிக் கால்கட்டி
தேடிச் செலும்போது சிக்கிவிட்டால்--- நாடுகிற
செய்திபோய் வேறிடத்தே சேர்ந்துவிடும்-வேல்கம்போ
கொய்து தலையெடுக்கும்
, கூடாது – மெய்யாகச்
சவ்வாதுக் கேலுமோ
, சற்றேநாம் சிந்திப்போம்
எவ்வா சனையினிலும் ஏற்றதென – இவ்வொன்றே
நல்வா சனையாக ஞாலம் கருதுவதும்
பொல்லாத போரினிலே போராடி- அல்லாத         30    
வாசம் உடலிடைத் தோன்றுவதால் வாராகி
பூசும் மணங்களிலும் சவ்வாதே- வீசுவதைப்
போக்குமென எண்ணியே பூசுமொரு நல்லதொரு
நோக்கமும் உள்ளதால், நுட்பமாய்- வாய்க்கின்ற
தூதாகச் செல்லுதற்குச் சொல்லலாம் ஈதொன்றே
தோதாய் அமையுமெனத் தோத்திரங்கள்- மீதூர
வேண்டி  விழைந்து  மிகநெருங்கி யான் சொன்னேன்
ஆண்டவனும் வேட்கைகொளும் அற்புதமே- வேண்டுகிறேன்
என்றனோர் தூதாய் எனக்குதவக் கோருகிறேன்
உன்றன் பெருமை உலகறியும்
,- மன்னர்களும்            40
உன்றனைப் பூசி உவகை மிகக் கொள்வர்
சென்ற விடமெல்லாம் சிறப்புத்தான்  - உன்றனுக்கு
போற்றும் புகழ்சேர் புனுகுப்பூ னைவாலில்
வீற்றிருந்து பின்னர் வெளிப்போந்து – வேற்று
மணத்தையெலாம் வீழ்த்திவிட்ட மாண்புடையோய் உன்னை
வணங்கிநான் வேண்டுகிறேன் வாழ்த்தி
, - இணங்கிநீ
என்றனுக் காக இணையில்வா ராகியின்பால்
சென்றென்றன் செய்தி தெரிவித்தால் – நன்றென்றே
எண்ணுகிறேன்
, வேறெவையும் ஏற்றமுற உன்னைப்போல்
கொண்டுசெலும் ஆற்றலினைக் கொள்ளவில்லை – விண்பறக்கும்
50                                      
மாடப் புறாவுக்கு வக்கணை போதாது
கூடக் கிளியதுவோர் கோமாளி – வாடுகிற
சந்தனத் துக்குன்போல் சாமர்த்தி யம்மில்லை
முந்தியங்கு செல்லுமுன் முற்றும் உலர்ந்துவிடும்
என்பதனால் சவ்வாதே ஏற்றம் உளபொருளே
அன்புடன் தூதாய் அனுப்புகிறேன் – என்னாலே
உன்பெருமை கூறுதற் கொண்ணாது  நானுமிங்கே
என்சொல்லால் ஏதோ இயம்புகிறேன் – முன்பொருநாள்

பூனையின் வாலில் புனுகு மெழுகானாய்
பூனை மலமென்றே பொல்லாதார்- ஆனதொரு           60
கற்பனையை ஏற்றிக் கதைக்கின்றார். வாசனை
முற்படச் சந்தன மும்புனுகில்-  பொற்புடனே
சேர்த்துன்னைச் சவ்வாதாய்ச் செப்புகிறார் நல்மணத்தின்

வார்ப்பே, மணவரசி, மாண்பொருளே- பேர்பெற்றோய்
எங்கேநீ உள்ளாயோ அங்கெல்லாம் வாசனைதான்
பொங்கும் நறுமணந்தான், பூவாசம் – மங்கப்
புதுவாசம் உன்வாசம்
, போகுமிட மெல்லாம்
இதுவாசம் என்றே இயம்பி- மதித்திடுவார்
என்பதனால் என்தூதாய் இன்றேநீ சென்றிடுக
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்- அன்னதைச்  70     
சொல்வதென்றும் செப்புகிறேன்.
, தூக்கும் மணமுடையோய்
வெல்மணமே
, சவ்வாது வித்தகமே – நல்லுறவே  
வாராகி அம்மை வலிமை மிகவுடையாள்
சூராதி சூரர்களும் தோல்வியுறத்- தேரேறி  
ஆர்ப்பரித்துக் கொல்லும் அதிகச் சினமுடையாள்
தேர்த்தட்டில் நின்று சிலுப்பியவள் – போர்க்களத்தில்
ஆயிரம் காதம் அதிரடிக்கும் – கையிலுள்ள
பாயுலக்கை கொண்டு பகைவர்களின் ஆயத்தம்
தாக்கி அவர்கூட்டம் வேரறுத்து மீளாத
வாக்கில் வினைமுடிக்கும் வித்தகியாள் – நீக்கமற        80
எவ்விடத்தும் கண்ணில் எதிர்ப்பட்டுச் சக்திகளை
அவ்வவ் விடத்தினிலே ஆட்டுவிப்பாள்- இவ்விதமாய்

உள்ளவள்பால் கோபம் உடையவள்பால் எப்படிநாம்
தள்ளாடி நிற்காமல் சாந்தமாய்க்- கொள்ளும்வகை
செய்தியினைச் சொல்வதெனத் திண்டாட்டம் தேவையில்லை
உய்வளிக்கும் தெய்வமவள்
, உள்ளத்தில் – பொய்யாத
பக்தி யுடையவர்பால் பாசம் மிகவுடையாள்
சக்தி கொடுப்பாள்
, தயவாக – எக்கணத்தும்
காக்கும் அருளுடைய காருண்ய நாயகியாள்
வாக்குக் கொடுப்பாள்
, வரம்கொடுப்பாள்- தாக்கவரும்      90
பூதம் பிசாசுகளைப் போட்டுக் கசக்கிடுவாள்
போதம் அளிப்பாள் புகழ் கொடுப்பாள்
, -வாதியினைப்
பேதலிக்க வைத்துப் பெருவெற்றி தான் கொடுப்பாள்
நீதிப் படிநடப்பாள்
, நேயமுள்ளாள் – சாதனைகள்
செய்யென்று சொல்லித் திறம் கொடுப்பாள்
, அச்சத்தைக்
கொய்தழிக்க வைப்பாள்
, குலையாத – தைரியத்தை
உள்ளுக்குள் எப்போதும் உட்கார வைத்திடுவாள்
தெள்ளத் தெளிவான தீர்வுகளைக் – கொள்ளென்றே
சிந்தை தெளிவாக்கித் தேகம் திடமாக்கி
எந்தப் பொழுதும் எதிரிருப்பாள்- வந்தித்தே            100
அம்மா எனவே அடியிணையைப் பற்றிவிட்டால்
நம்பாரம் தானேற்கும் நாயகியாள்
,- செம்மாந்தே   
வாராகி தொண்டனென வாய்நிறையச் சொல்லிடலாம்.
சீராக வாழ்வு செழிக்கவைப்பாள் – நேரான
எண்ணம் கொடுத்தே இனிமை பலகொடுத்தே
விண்ணவன் போலே விளையாட- மண்ணகத்தே
நல்லருளைத் தந்திடுவாள்
, நாடகமாம் இவ்வாழ்வில்
சொல்வதை யெல்லாம் துலக்கிடுவாள்- வல்லமைகள்
வாரி வழங்கிடுவாள்
, வாராகி என்றேநாம்
தீரமாய்ச் சொல்லிச் சிலிர்த்திடலாம்- நேரினிலே        110
பன்றி முகமுடையாள்
, பல்லிரண் டும் வளைவாய்
முன்னே விளங்குமெழில் மூக்குடையாள் – தன்முகத்தில் 

நீண்டயிரு கண்கள் இருபக்கத் தேயிருக்க
கூண்டு கவிழ்த்த கிரீடத்தாள் – காண்டற்குச்
சற்றே சினமுள்ள தன்மை தெரிந்தாலும்
முற்றிலும் அன்பிலே மூழ்கியவள் – பற்றுடையாள்
குன்றாய் நிமிர்தோள்கள் கோலத்தைக் கண்டுவிட்டால்
ஒன்றா மனமுமதில் ஒன்றிவிடும் – குன்றுகளாய்க்
கொங்கை இருபுறமும் கொண்டு நிமிர்ந்திருக்கச்
சங்குக் கழுத்துடையாள்
, சக்கரம் – அங்கையில்        120
பற்றி யிருக்கிறவள்
, பாங்காக ஆயுதங்கள்
வெற்றி கொடுக்கவென வீற்றிருக்கும் – கொற்றமுள
வில்லம்பு
, கேடயம், மேவும் திருவுலக்கை
வல்ல கலப்பையொடு வாள்கதையும்- வெல்லரிய
சூலமும் தாமரையும் தோதாய்க் கரங்களிலே
கோலங்கொள் கின்ற கொலுவரசி – சால
வரத கரமும் அபய கரமும்
அருளுதற் கென்றே அமைய- உரங்கொள்
வயிறுடையாள்
, வாகாய் மலர்க்கொப்பூழ்  மேலே
உயர்மே கலைபூண்ட ஒண்மை – உயிரிடையாள்       130
வைரத் தொடையழகி வஜ்ஜிரக் காலழகி

வைரிகளைத் தாக்கியே வாகாய் உயிரெடுக்கும்   
மோதுமுழங் காலழகி
, மொய்ம்புத் திறம்கொண்ட
பாதங்கள் பற்றிப் பகர்ந்திடவா – ஏதங்கள்
தீர்க்கும் திருப்பாதம் தீரம் மிகுபாதம்
சேர்க்கும் அருட்பாதம்
, திண்ணென்றே – ஆர்க்கும்
ஒருசமயம்
, ஆகாயம் தாண்டி அளக்கும்
ஒருசமயம்
, அண்டினோர் வாழ- அருளும்
ஒருசமயம்
, மென்மை ஒருசமயம் வன்மை
ஒருசமயம்
, வேகத்தில் வேகம் – ஒருசமயம்           140
வீரத்தோ டேயூன்ற விண்ணதிரும் மண்ணதிரும்
நேரத்தே செய்கை நிகழ்த்திவிடும்
, - பாரத்தை            
ஏற்றுப் புரக்க இயம்பிவிடில் தாமரையாய்
மாற்றம் எடுத்து வளமருளும்- போற்றுபுகழ்

பாதங்கள் கொண்டிலங்கும் பரிவுத் திருத்தெய்வம்
மாதங்கம் கொண்டிலங்கும் வாராகி – போதமருள்
மாதா லலிதாவின் மாண்புப் படைத்தலைவி
பாதார விந்தம் பணிந்துநாம்- வாதாடும்
போதில் வழிகாட்டும் பொற்புடையாள்
, வார்த்தாளி
நீதி வழங்கும் நெறியுடையாள்
, சோதியினால்        150
வட்ட த் திகிரியினால்
, வார்க்கும் பளபளப்பால்
எட்டியே தேரில் இயங்குவதால் – சுட்டெரிக்கும்          

வெம்மையினால் சூரியனாய்த் தோன்றுகிற
அம்மை பிறையைச் சிரமணிந்து – நம்மையெலாம்
வாழ்த்திக் குளிர்விக்கும் மாட்சியினை என்சொல்ல
?
ஊழ்வினைத் தீமைகளை ஓர்பக்கம் தாழ்த்திவிட்டு
நன்மை புரிகின்ற நாயகி
, பாரதத்தில்
இன்பத் தமிழ்நாட்டில் ஏற்றமிகு – சென்னையில்
காற்றுக் கவிதை கடலுக்குப் பாடுகிற

ஆற்றல்மிகு வேலைக் கருகினிலே – போற்றும்      160
மயிலை நகரில் அபிரா மபுரம்
அயலே கிழக்கில் அமைந்த – நயங்கொள்               
முதல் தெருவில் பச்சையம்மன் ஆலயத் துள்ளே

இதமுடைய வாராகி அம்மன் – பதம்பணிந்தே
வேண்டியே செய்தி விளம்பிடுக- இன்னொன்று
ஆண்டு இளங்காலை சென்றிட வேண்டாம்.
அதிகாலைப் போதினில் அவ்வா லயத்தில்    
பதிவாக அன்னதா னத்தை- நிதமும்
வழங்குவதால் கூட்டமங்கு வந்திருக்கும்
,நீயும்
வழிபார்த்துப் பத்து மணிக்குக் குழைவாக            170
”நான்வந்தேன் சவ்வாதென் றேசொல்லித் தாள்பணிக     
வான்புகழ் உன்மணத்தில் வாராகி -தான்மகிழ்ந்தே
உன்னை வரவேற்பாள் உற்சாக மாய்த்தடவி
என்சொல்ல வந்தாய் எனக்கேட்பாள்- முன்னிருந்தே
”அம்மையே வாராகி
, அன்புமிகக்  கொண்டவளே
உம்மிடம் செய்தி உரைக்கின்றேன் - எம்பால்
இலந்தைக் கவிஞன் இயம்பிவிட்ட செய்தி
நலமாக உம்பால் நவில்வேன் – நிலவுலகில்
எல்லோரும் நன்றாய் இருக்க வரம்கொடுப்பாய்
பல்லோரும் போற்றிடப் பாரதம் – வல்லரசாய்         180
ஓங்கித் திகழ உனதருளைத் தந்திடுவாய்
பாங்காய்த் தமிழ்நாடு பல்வளமும் – நீங்காதே           
பெற்றுப் பரிமளிக்கப் பேரருளை வேண்டுகிறேன்
ஒற்றைத் தலைவலியாம் ஊழலெனும் – குற்றத்தைச்
செய்தேயெம் தாய்நாட்டைச் சீரழிப்பார் யாரெனினும்
கொய்தவரை மாய்த்துநீ கூத்திடுக – உய்யும்வகை
காட்டி எமையென்றும் காத்திடுக
, வெற்றிகளைக்
கூட்டி விருதுகளைக் கொண்டுவந்து நீட்டிடுக
நல்லதொரு முக்தியினை நல்கிடுக – என்றுரைத்தே
வல்லமைசேர் குங்குமம் வாங்கிவா – எல்லோரும்     190
குங்குமம் பெற்றுக் குறையின்றி வாழட்டும்
இங்குநீ செய்கின்ற இத்தொண்டால் பொங்குமணம்       
இன்னும் பெருகி இணையில்லை என்றேநீ
என்றைக்கும் வாழ்க இனிது.                         194

No comments:

Post a Comment