Saturday, May 11, 2019

ஈதென்ன நியாயமய்யா?


ஈதென்ன நியாயமய்யா!

ஈதென்ன நியாயமய்யா- ஆஞ்சநேயா
ஈதென்ன நியாயமய்யா

ஆதரவு தாவென்றே நான்கேட்க வேண்டுமென
ஐயாநீ உன்மனத்தில் எண்ணுவதாய்த் தெரிகிறது?

யாருண்டு நினைப்போலே குறிப்பறிந்து நடப்பதற்கு
யாருண்டு நினைப்போலே பெரிதாகச் செய்வதற்கு
யாருண்டு நினைப்போலே அன்புமனம் கொண்டவர்கள்
ஆனாலும் தாமதமேன் அருளள்ளித் தருவதற்கு?

கேட்காமல் இராகவனும் உனக்கருளைச் செய்தானே
கேட்காமல் ஜானகியுன் வால்குளிர வைத்தாளே
கேட்காமல் உனக்கெல்லாம் தானாய் நடக்கையிலே
கேட்கட்டும் என்றென்னைக் கேளாமல் தள்ளுவதோ?

நான்கேட்க  நினைப்பதெல்லாம் நல்லதுவோ நானறியேன்
நாதன் உனையன்றி நலம் தீது யாரறிவார்?
ஏன்கேட்டேன் என்றுபின் இரங்கி வருந்தாமல்
இருப்பதை விட்டுவிட்டு ஏதேதோ சொல்வதுவோ?

கேட்டாலும் எதுசரியோ அதையள்ளித் தரவேண்டும்
கேளாத போதும் எது நலம் அதனைத் தரவேண்டும்
மாட்டிவிட்டாய் என்னிடத்தில், வந்துவிட்டேன் உன்னிடத்தில்
வாசலைத் தாண்டிவிட்டேன் வரச்சொல்ல மாட்டாயா?


No comments:

Post a Comment