Friday, May 10, 2019

முருகன் என் காதலன்


முருகன் என் காதலன்

இந்தக்கவிதை வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் தைப்பூசத்தன்று பாடப்பட்டது. எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு இது. இந்தக் கவிதையைக் கேட்ட வள்ளலார் பக்தர்கள் சிலர்வள்ளலார் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அருட்பெரும் ஜோதிக்குப் போய்விட்டார். நீங்கள் ஏன் முருகனைப் பாடினீர்கள். ?” என்று கேட்டார்கள்.   அப்படியென்றால் வள்ளலார் பாடியுள்ள முதல் ஐந்து திருமுறைகளை இல்லாமல் செய்துவிடுவீர்களா?”  என்று கேட்டேன். வாயை மூடிக்கொண்டார்கள்.
இந்தக் கவியரங்கம் நடந்துகொண்டு இருந்த போது அறைக்குள் ஒரு பாம்பு வந்துவிட்டது. வள்ளலார் அன்பர்கள் சிறிதும் பதட்டப்படாமல் பாம்பு எந்தப் பயமும் இன்றிச் செல்ல இடம்கொடுத்து ஒதுங்கி நின்றார்கள். பாம்பு சென்ற பின்பு கவியரங்கம் தொடர்ந்தது. வள்ளலாரின் ஜீவகாருண்யம் அங்கே எவ்வளவு தூரம் ஆழமாகச் சென்றிருக்கிறது என்பதைக் கண்கூடாகக்கண்டோம்.


முருகன் என் காதலன்

வெண்கலிப்பா

உயரே குடைவானம் ஓரத்தில் பொன்னில்
வயிரம் இழைத்து வரைந்த கரைப்பட்டை
வைரத்தைத் தங்கமென மாற்றுகிற செவ்வந்தி
மையல் நிறங்கொண்டு, வள்ளியினைக் காணுதற்குச்
செல்லுகின்ற செவ்வேளாய்ச் செம்மை கொளும் வெய்யோன்
சொல்லிலே சிக்காத சுந்தரங்கள் காட்டுகிற
அந்தியெழு ஓவியங்க ளெங்கும் அழகுமயம்
மந்தை முகிலெல்லாம் வண்ணம் குழைத்துவரும்
தூரத்துச் சோலையிலே தோன்றும் மரத்தொகுதி
ஆரத்தி  கூட்டுகிற அந்தியிலே தாம்மயங்கும்
மெல்ல வெளிநிரப்பி வீசிவரும் பூங்காற்று
செல்வ அழகையெல்லாம் சீராட்டி நெஞ்சத்தில்
ஆராதனை செய்தே யான் மயங்கி நிற்கையிலே
வாரா திருந்த தெதோ வந்துவிட்ட பாவனையில்
மின்னலொன்று வெட்டியது விண்மீண் சிமிட்டியது
சின்ன முகைமுல்லை சீறி வெடித்ததுவால்
காட்சி எழிலெல்லாம் கண்முன்னே காண்பதற்குச்
சாட்சியென என்முன்னே சத்தியமாய் நிற்பதுயார்?
ஆரா அழகமுதா?  ஆகாகா என்சொல்வேன்?
பாரா திருந்த தெல்லாம் பார்க்கின்றேன், உள்ளத்தில்
சேரா திருந்ததெல்லாம் சேர்க்கின்றேன், நிற்பதுவும்
யாரா யிருக்கும்? அழகென்னும் தெய்வதமோ?
பேச்சு வரவில்லை, பேதலித்து நிற்கின்றேன்.
கூச்சம் விடவில்லை, கோலத்தைச் சொல்வதெனில்
வார்த்தை படுத்துவிடும், வந்தவரை யாரறிவார்?
கூர்த்த முகமழகா? கொள்ளும் நிறமழகா
சேர்க்கும் நகையழகா, செய்ய வடிவழகா?
பார்க்கும் விழியழகா? பாத இணையழகா?
நின்ற திருக்கோலம் நெஞ்சத்தைத் தின்கிறதே!
சென்ற கணத்தில் செலுத்திவிட்ட பார்வையிலே
ஒன்றிவிட்ட நல்லுருவம் உள்ளத்தைக் கொல்கிறதே
கன்னி எனக்குள் கனன்று பொறியாகி
முன்னி முகிழ்த்து முனைந்து மொடமொடத்து
மின்னி இடித்து வியப்பு ரசமாகி
என்னதிது என்னவே எண்ண முடியாத
அற்புதம் ஒன்றினையே ஆக்கி நடிக்கிறதே
கற்பனையில் எண்ணியது கண்முன் நடக்கிறது
பொங்கும் உணர்வுகளின் பூரிப்புத் தாங்காமல்
அங்கே தலைகிறங்கி அல்லாடும் அந்நேரம்
       
பதினான்கு சீர் விருத்தம்
       
        ஓடோடி வந்தென்னை உள்ளோடும் அன்பாலே
                ஒய்யாரமாய் அணைத்தான்
                உறவாடித் துடிக்கின்ற இதழாடி என்றென்றும்
              ஒப்பில்லா உவகையாடி
        நாடோடி போலவே நடமாடி வந்தென்றன்
                நாணம் கவர்ந்தணைத்தான்
                நானிங்கிருக்கையில் நங்கையே பயமென்ன
                நானறி யாத துண்டோ?
        ஊடாடி நிற்பதும் உன்றனுக் கழகாமோ
                உன்கனி வாய்திறந்தே
                ஒருமாற்றம் தந்தென்றன் தடுமாற்றம் தீர்ந்திட
                உள்ளம் கனிந்திடாயோ?
        ஏடாவென்றொருவார்த்தை இயம்பினும் போதுமே
                ஈடதற்கில்லையன்றே
              என்னுடன் துள்ளியே என்மனம் அள்ளியே
              எழில்நடம் ஆடுகென்றான்

வெண்கலிப்பா

என்னை மறந்தேன்  எனது நிலைமறந்தேன்
முன்னை வினைப் பயனோ, முந்திவரும் அற்புதமோ
யாரே இவனென்று யான்பார்க்க எண்ணிவிழி
நேரே திருப்பிவிட்டேன், நின்றவனைக் காணவில்லை
இத்தனை நேரம் எனையணைத்து நின்றவன்யார்?
சித்தனா, இல்லை இல்லை தேவனா? அன்றிவெறும்
பித்தனா? நெஞ்சப் பிரமையா? உண்மையா?
சித்தப் பிரமைஎன்று செப்பிவிடில் என்னையவன்
தொட்டயிடம் இன்னும் சுகமா யிருக்கிறதே
கட்டிப் பிடித்த தடம் கன்னிச் சிவந்துளதே
ஈர இதழ்க்கடையில் இன்பம் சுரக்கிறதே
வாரிவிட்ட கூந்தல் வகிடு நனைந்துளதே
வந்தவன்யார்? வந்தபின்னே வாடவிட்டுச் சென்றதுமேன்?
சிந்தை மயங்கிச் செயல்மறந்து நிற்கையிலே
அன்னை குரல்கொடுத்தாள், யான்சென்றேன், என்னுள்ளே
கன்னிப் பருவத்துக் காதல் பிறந்ததுவே

இருசீரிரட்டைச் சமநிலைச் சிந்து

கூவும் குயிற்குரலும்-முழுநிலா
        கொட்டும் ஒளிபொழிவும்
பூவும், அதன்மணமும்- கசந்திடப்
        பூஞ்சை நிலையானேன்

தென்றல் எரித்திருக்க- மலைநறும்
        தேனும் புளித்திருக்க
நின்ற ஒருவனதுநினைவை
        நெஞ்சம் வழுத்தியது.

உணவு செல்லவில்லை- கண்ணும்
        உறக்கம் கொள்ளவில்லை
அணிம ணிகளையேபூணும்
        ஆசை பிறக்கவில்லை

வெண்கலிப்பா

என்றுநான் மீண்டும் எனதுயிரைக் கான்பேனோ
மன்னன் வருவானோ? வாவென்றழைப்பானோ
நெஞ்சை நிவேதனமாய் நேர்படவே வைத்திருக்கும்
வஞ்சி எனையும் மணம்புரிந்து கொள்வானோ
சுட்டெரிக்கும்  தென்றல் சுகமாய்க் குளிர்ந்திருக்கப்
பட்டெரிக்கும் வெண்மதியும் பாங்காய் அமுதளிக்க
விட்டுவிட்டுச் சென்றவனும் மீண்டும் வருவானோ?
என்றெண்ணி என்னுள்ளே ஏங்கியே நானிருக்க
தின்று  விடுங்கவலைச் செல்லரித்த தேகத்தில்
கண்டுவிட்டுத் தாயும் கவல்கின்றாள், அந்நேரம்

சமநிலைச் சிந்து (இயைபு மடங்கியது)

வேலெடுத்த கோலத்தோடு வீதிவருகிறான்வேலன்
வேண்டுபவர் நலமறிந்து யாவும் தருகிறான்
                வீதி வருகிறான்வேலன்
                யாதும் தருகிறான்
சூலெடுத்த தாய்மகிழ்த் துள்ளி வருகிறான்வேலன்
சூரடுத்த பகைவனுக்கும் அள்ளித்தருகிறான்
                துள்ளி வருகிறான்வேலன்
                அள்ளித் தருகிறான்
பெண்ணிருவர் பக்கம்வரக் காட்சி கொடுக்கிறான்வேலன்
பேதைமைகள் மாற்றியுள வீழ்ச்சி தடுக்கிறான்
                காட்சி கொடுக்கிறான் - வேலன்
                வீழ்ச்சி தடுக்கிறான்
 கண்சிமிட்டி என்றனுக்குச் சேதி சொல்கிறான்வேலன்
 காதலனாய் வந்திருக்கும் போது வெல்கிறான்
                 சேதி சொல்கிறான் - வேலன்
                 போது வெல்கிறான்

பஃறொடை வெண்பா!

ஓகோ இவன்தானா? ஓடோடி வந்தென்னைத்
தேகாப் பியாசம் செயவைத்த வேலாண்டி
தேவி இருவர் சி/ரப்பாய் அருகிருக்கப்
பாவியிவன் என்னையுமேன் பாடு படுத்துகிறான்
என்மனம் இன்னும் இவன்பின்னால் செல்கிறது
என்னைக் கவர்ந்தோன் இவனென்று சொன்னாலோ
அன்னை சிரிப்பாள், அடியே நீ பித்தென்பாள்
இன்னுமிந்த வீதிவழி என்று வருவானோ?
என்றெதிர் பார்த்திருப்பேன், இங்குநான் காத்திருப்பேன்
மன்னனுக்கென் உள்ளம் மனை..

No comments:

Post a Comment