Monday, May 13, 2019

தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் ஊஞ்சல் பஞ்சகம்

தெற்கிலந்தைக் குளம்  மாரியம்மன் ஊஞ்சல் பஞ்சகம்

ஊஞ்சலிது ஊஞ்சலிது ஒய்யார ஊஞ்சல்
   
உலகாளும் மாரியம்மா ஆடுகிற ஊஞ்சல்
வாஞ்சையுடன் அடியார்கள் மகிழ்ந்தாட்டும் ஊஞ்சல்
   
மகராணி எம் ஆத்தா மலர்வேய்ந்த ஊஞ்சல்
நீஞ்சுகிற எம்வாழ்வில் நிம்மதிகள் சேர
    
நிர்மலையாள் எம்மாரி ஆடுகிற ஊஞ்சல்
தீஞ்சுவைசேர் பழத்தோடு பூசைபல ஏற்றே
   
தெற்கிலந்தைக் குளம் வாழும் ஸ்ரீமாதா ஊஞ்சல்

திரிசூலம் கைக்கொண்ட தேவியவள் ஊஞ்சல்
   
திரிலோக நாயகியாள் செலுத்துகிற ஊஞ்சல்
பரிவான எம்மாரி பாய்ந்தாடும் ஊஞ்சல்
    
பகைகண்டால் சீறுகிற சினமுடையாள் ஊஞ்சல்
விரைவாக நலமருளும் வித்தகியாள் ஊஞ்சல்
    
வேண்டுகிற வரம்நல்கும் மாதாவின் ஊஞ்சல்
சிரித்தோங்கி அருள்நல்கும் தேவியவள் ஊஞ்சல்
    
தெற்கிலந்தைக் குளம் வாழும் ஸ்ரீமாதா ஊஞ்சல்

ஆட்டிடுவோம் வாருங்கள் அம்மாவின் ஊஞ்சல்
    
ஆயிரங்கண் உடையவளின் அலங்கார ஊஞ்சல்
பாட்டுபல பாடியிங்கே ஆட்டிடுவோம் ஊஞ்சல்
    
பராசக்தி மாரியம்மா பரிந்தாடும் ஊஞ்சல்
ஈட்டுவன யாவையுமே அவள்தயவால் என்றே
    
எண்ணிமனம் கொண்டிங்கே ஆட்டிடுவோம் ஊஞ்சல்
தீட்டிடுவோம் ஒப்பனைகள் செய்வமலங்  காரம் 
    
தெற்கிலந்தைக் குளம்வாழும் ஸ்ரீமாதா ஊஞ்சல்.

ஆங்காரி ஓங்காரி ரீங்காரி காளி
  
ஆதிபரா சக்தியவள் அலங்கார ஊஞ்சல்
நீங்காத அன்புடைய தேவியவள் ஊஞ்சல்
   
நித்தியமாய் சத்தியமாய் நிறைகிறவள் ஊஞ்சல்
பாங்கான பாண்டியநாட் டெழிலரசி ஊஞ்சல்
   
பாராளும் நாயகியாள் பலமான ஊஞ்சல்
தீங்கான எதுவுநமைச் சேராத வண்ணம்
   
தெற்கிலந்தைக் குளம்வாழும் ஸ்ரீமாதா ஊஞ்சல்

அம்மாவின் ஊஞ்சல்மிக அழகான ஊஞ்சல்
    
அசைந்தாடும் ஊஞ்சல்மிக இசைந்தாடும் ஊஞ்சல்
நம்வாழ்வின் இயக்கமெலாம் அவளாலே என்றே
    
நமக்கெல்லாம் காட்டுகிற நயமான ஊஞ்சல்
எம்மாரி யம்மாவின் எழிலான ஊஞ்சல்
    
எல்லையிலாக் கருணையினாள் இசைவான ஊஞ்சல்
தெம்பாக ஆட்டிடுவோம் எல்லோரும் சேர்வீர்
    
தெற்கிலந்தைக் குளம்வாழும் ஸ்ரீமாதா ஊஞ்சல்


No comments:

Post a Comment