Saturday, May 11, 2019

விஷ்ணு துர்க்கை




விஷ்ணு துர்க்கை
சக்கரம் வலது கையில்
     சங்கமோ இடது கையில்,
தக்கதோர் அருள்செய் ஹஸ்தம் 
    சார்ந்திட   ஓர்கை பாதம்
மிக்கவே காட்ட , சோதி
     விளங்கிடப் புன்னகைக்கும்
துர்க்கையே நின்தாள் போற்றி
     சுகமெலாம் அருள்வாய் போற்றி

அம்மையே விஷ்ணு துர்க்கா
     யாருனை இந்த வண்ணம்
செம்மையாய் வரைந்தார்? பச்சைச்
     சேலையில் மிளிரும் தேவி
நம்பினோர் கெடுவதில்லை
     ஞானமே உனது தோற்றம்
இம்மியோர் அளவுக் கேனும்
     எமக்கருள் பிரம்ம ஞானம்!

சீவலப் பேரி தன்னில்
     திகழ்ந்திடும் தாயே, இஃதோர்
ஓவியம் என்று சொல்வார்
       உண்மையில் விந்தை, நானும்
பாவிலே உன்னைப் போற்றிப்
      பரவினேன், கடைக்கண் நோக்கிக்
காவலைத் தந்தால் போதும்
     கவலையே இல்லை அம்மா!-       நன்றி- ஆர்ட் முனீஸ்வரன்

No comments:

Post a Comment