Sunday, May 12, 2019

வாராகி அட்டமங்கலம்


வாராகி அட்டமங்கலம்
 96 வகைப் பிரபந்தஙளுள் அட்ட மங்கலம் என்பது ஒன்று. அஷ்டகம் போலத்தான் என்றாலும்   பாடப்படும் தெய்வத்தைத் தன்னைக் காக்கவேண்டும் என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் வேண்டுவதாக அமைய வேண்டும். இயன்ற வரை உடன்பாடாக அமையவேண்டும். ஒன்று முதல் எட்டு எண்களுக்குறிய சொற்கள் முறையே ஒவ்வொரு பாடலிலும் அமைவதுசிறப்பு. 
வாராகி அட்டமங்கலம்
 ஒன்றென்று நெஞ்சத்தில் எண்ணி எண்ணி
     உறுதியுடன் பக்திசெயும் உள்ளத்தோர்க்கு
நன்றென்று தானருளும் பரிவுத் தேவி
     நாவுக்குப் பயிற்சிதந்தே வார்த்தை யள்ளி
வென்றென்றும் வாழ்கவென வாழ்த்தும் அன்னை
     வேண்டுவதை நலங்கண்டே வழங்கு கின்றாள்
என்றென்றும் எங்கெங்கும் எம்மைக் காக்க
     எச்செயலும் வென்றிடவே செய்து காக்க!
இரண்டில்லை ஒன்றேதான் என்பார், இல்லை
     இரண்டடுத்த ஒன்றென்பார், இல்லை இல்லை
இரண்டேதான் வெவ்வேறாய் உள்ள தென்பார்
     எமக்கெதுவும் விளங்கவில்லை,, குழம்பி இங்கே
மிரண்டுள்ளேன்
, ஒன்றேயாய் ஒன்றுக் குள்ளே
     வெவ்வேறாய் விளங்குகிற வாரா கித்தாய்
சென்றோடும் வாழ்க்கையிலே புகழைக் கொண்டு
     சேர்த்தென்னை நன்றாகக் காக்க காக்க!
முப்போதும் தொழச்சொல்வார், இல்லை, இல்லை
`
     முன்னிரவில் தொழுவென்பார், விந்தை விந்தை
எப்போதும் நெஞ்சத்தில் இருந்து கொண்டே
     எழுதுகநீ என்றென்னை இயக்கு கின்றாள்
தப்பேதும் செய்யாமல் தவறும் போதே
     தண்டனையைத் தாங்குவகை தந்து காப்பாள்
அப்போதைக் கப்போது வாராகித் தாய்
      அவ்வுலவிற் கிவ்வுலகை அருளிக் காக்க!
நாற்புறமும் பச்சையெனத் திகழு கின்ற
     நாயகியாள், ஞாலத்தில், கடலா ழத்தில்
மேற்புறத்தில் கீழ்ப்புறத்தில் எங்கெங் கேயும
     வீறுகொளும் வாராகி, அடியார் வாழ
ஏற்புடைய நல்குகிற தேவி
, சொற்கள்
     ஏற்றமுடன் அருளுபவள், நாமம் தன்னைப்
போற்றுகிறேன்
, எனையறியும் ஞானம் தன்னைப்
      
     புத்தொளியாய்த் தந்தென்னைக் காக்க காக்க!
பஞ்சமியாள், பராபரையாள், பரிவு மிக்காள்
      பார்வையொரு சிறிதளவும் பட்டால் போதும்
விஞ்சுபுகழ் தேடிவரும்
, வேண்டிச் சென்று 
      வேட்கையுடன் தகுதியிலார் தம்மை அண்டிக்

கெஞ்சுகின்ற நிலையின்றி விருதெல் லாமும்
      கேண்மையுடன் கூடிவரும், வெற்றி கிட்டும்.
தஞ்சமென
  அவள்பாதம் பணிந்து விட்டேன்
      தக்கவெலாம் தந்தெம்மைக் காக்க காக்க!
ஆறெதுவோ எனக்குழம்பி, வலிமை குன்றி
     அல்லாடும் போதினிலே,குழப்பம் தீர்த்து
வீறுகொளும் மார்க்கத்தை தெரியக் காட்டி
     விடிவுக்கு வழிவகுக்கும் வாரா கித்தாய்
சீறுகிற சினமுடையாள் என்ற போதும்
     சினம் மறந்தே அடியார்க்குத் தாகப் போதில்
சாறெடுத்துத் தருகிறவள்
, அன்னை பாதம்
      தலைவைத்தேன், நலமெல்லாம் தந்து காக்க!
 எழுதிவைத்த படிதானே இயங்கும் என்றே
     இடிவதுமேன்?  எழுவரிலே ஒருத்தி தன்னைத்
தொழுகிறவர் விதிகொடுக்கும்
,சிரமப் பாட்டை
     தொலைத்திடுவாள்,தணித்துவைப்பாள்,சிந்தை ஒன்றி
எழுதுகிற கவிதையிலே எழுதி ஈவாள்
     எதிர்வாதம் செய்பவரை, மயங்க வைப்பாள்
வழிமறைப்பு நீங்கிவிடும்
, வாராகித் தாய்
     வளமெல்லாம் என்றனுக்குத் தந்து காக்க!
இட்டவடி போதாதோ, அம்மா உன்னை
     எட்டுவதும் எப்படியோ என்றே வேண்ட
எட்டடியும் பத்தடியும் தேவை யில்லை
     எட்டியடி வைத்திடுமுன் சிந்தை தன்னில்
தொட்டுவிடின் போதுமெனச் சொல்லு கின்ற
     சூக்குமத்தாள் வாராகி இதைப் படித்தே
எட்டியடி வைக்கின்ற அனைவ ருக்கும்
     ஏற்றங்கள் அத்தனையும் தந்து காக்க!



No comments:

Post a Comment