Sunday, May 12, 2019

வாராகி நவமணி மாலை


வாராகி நவமணி மாலை
நவமணி மாலை என்பது 96 பிரபந்தங்களில் ஒன்று. நவரத்ன மாலையிலிருந்து மாறுபட்டது.  பா, பாவினங்களில் 9வகைகளைத் தேர்ந்தெடுத்து, காப்பைத்தவிர 9 பாடல்கள் எழுதவேண்டும்.
பாவே இனமே என்றிவை இரண்டு
மேவிய வகையது நவமணி மாலை   என்பது விதி.
வாராகி நவமணி மாலை எழுதியிருக்கிறேன்.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா வஞ்சிப்பா   அவற்றின் இனங்களில் ஒவ்வொன்று, ஆக மொத்தம் எட்டு. இவற்றோடு மருட்பாவையும் சேர்த்து ஒன்பது வகைகளாக எழுதியுள்ளேன்.
வாராகி நவமணி மாலை
காப்பு
அம்மைமகா வாராகி ஆசிகளை வேண்டுகிற
செம்மை நவமணி மாலையிது – தும்பிக்கைக்
காரனே
, அன்புக் கணபதியே, செய்யுமிக்
காரியத்தில் நீயேதான் காப்பு.
நூல்
வெண்பா
ஓங்குபுகழ் நாயகியாள், உத்தமி, வாராகி
ஆங்காரி
, அன்பின் அருள்வாரி- தேங்கும்
அகந்தைக் கிழங்கை அடியோடு பேர்த்தே
இகம்செம்மை செய்வாள் இனிது.                        1
வெண்பா இனமாகிய வெளிவிருத்தம்
இனியவள், அருள்பவள், எழிலவள் பலமவள் - வாராகி
கனியவள்
, நிலமவள் புனலவள் காற்றவள் - வாராகி
கனலவள்
, வானவள் அணுவவள் கதியவள் - வாராகி
மனம்உனும் முனம்வரும் தயையவள் தாயவள்-  வாராகி 2


ஆசிரியப்பா
 வாராகி என்று வாய்சொன்னால் கூடத்
தாராள மாகத் தருகிற தேவி
கூரான தந்தம் கொடுமையை மாய்க்கும்
வேரோடு தோண்டித்தீ வினையை அழிக்கும்
ஏனோவென் றில்லாமல் இதமாய்ப் பணிந்தால்
தானாக வந்து தயைபுரி கின்றவள்
பாதம் பணிந்து பரவுக
வாதில் வெல்லாம் வழ்க்கையும் வெற்றியே!              3
 ஆசிரிய விருத்தம்
 வெற்றியெனச் சொல்வதெது? பிறரைவென்று நாமுயரும் வித்தை தானா?
கற்றதனைக் கைக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாய்க் கணித்தல் தானா
?
பெற்றிருக்கும் நலமெல்லாம் வெற்றியினால் பிறந்தனவா
? பின்னர் என்ன?
பற்றியவள் பாதத்தைப் பலமெல்லாம் அவள்கொடுக்கப் பார்த்தல் தானே!        4
 கலிப்பா
 தானாக எனக்கென்ன தகுதியுண்டு, தாயேநீ
தானாகத் தருவதுவே தனிப்பெரிய உன்னதமாம்
வானாக
, மண்ணாக, வளியாகப் புனலாக
ஆனாத காற்றாக யாவையுமாய்
, யாவினுள்ளும்
ஊனாக உயிராக உள்ளவளே காத்தருள்க
நானாகச் செய்வதெல்லாம்
, நல்லடியைப் பற்றுவதே      
பற்றாக முற்றாகப் பற்றுவது யாதெனிலோ
வற்றாத பேரருளாய் மாண்பருளும் வாராகி
பொற்றா மரைப்பாதம் போய்ப்பற்றிக் கொள்வதுதான்
கற்காத போதினிலும் கல்விதரும் யாதெனிலோ
முற்காலம் தற்காலம் பிற்காலம் யாவுமெனப்
பற்றாகப் பற்றுதற்குப் பரிந்துவரும் திருவடியே!          
வெற்றாகப் போகாமல் வீறுதரும் யாதெனிலோ
சற்றேனும் கூடாத  சந்தேகம் இல்லாமல்
முற்றாகப் பற்றுகிற மூர்க்கமுள பக்தியதே!
எனவாங்கு,

நெஞ்சம் கனிந்து நினைவும் ஒன்றி
தஞ்சம் எனவே சரணம் அடைக
அஞ்சல் இல்லை
, அபயம்
கஞ்சம் இன்றிக் கையகப் படுமே!                        5
 கலிப்பாவின் இனமாகிய
கட்டளைக் கலித்துறை

அகப்படும் யாவும் அகம்படும்
, நெஞ்சில் அவளிருக்கச்
சுகப்படும் யாவும் சுகம்படும்
, வேண்டும் சுவைகளெல்லாம்
மிகைப்பட லின்றி மிகப்படும்
, நல்கும் விடயமெல்லாம்
வகைப்படும் நல்ல வளப்படும் அன்னை வரத்தினிலே!     6
 வஞ்சிப்பா
 வரமருளுவள் வளமருளுவள்
தரமருளுவள் தகவருளுவள்
இனமருளுவள் இதமருளுவள்
மனத்தமைதியை மகிழ்ந்தருளுவள்
எனவே நீ

இடைவிடா தவள்பதம் எண்ணி
நடைபெறும் நாள்களை நகர்த்துக நலமே!                7          
 வஞ்சித்துறை
 நலமே பெறுக
பலமே உறுக
நிலமே விளைக
கலைகள் மலிக!                                        8
மருட்பா
(வெண்பாவில் தொடங்கி அகவலில் முடியும். இது வாயுறை வாழ்த்து. அதாவது , இத்தெய்வத்தைப் பணிந்து நீ வாழ்வாயாக என்று வாழ்த்துவது)
 மலியும் வளமெல்லாம் வாராகி வந்து
நலமாய் மகிழ்வோடு நல்கிப் – பொலிக

பொலிகவென என்றும் புரந்திடுவாள், நெஞ்சில்
வலிமை அருள்வாள் வளங்கொடுப்பாள் என்பதனால்
நெஞ்சம் மறவா நிலையில்
தஞ்சம் அடைக
, சந்ததம் ஓங்கவே!                     9
29-9-2018

No comments:

Post a Comment