வரமருள் வாணி
அறுசீர் விருத்தம்
எடுத்ததை முடித்து
வைத்தே
ஏறிடும் வெற்றி நல்கி
படிப்பதில் நன்மை தீமை
பார்த்ததை ஏற்கச் செய்து
கொடுப்பதில் இன்பம்
தந்து
கொள்கையில் நிலைக்க வைப்பாய்
தொடுத்திடும் கலைக
ளுக்குள்
துலங்கிடும் அம்மா, வாணி
உழுதுவைத் திருக்கும்
பூமி
உறுபயிர் விளைக்கத் தோது
விழுதுகள் தாங்கும்
ஆல்தான்
விருட்சமாய்ப் படர்ந்தி ருக்கும்
எழுதுதல் இன்பம் அம்மா
எழுதிக்கொண் டிருக்க வைப்பாய்
தொழுகிறேன், என்னை நன்கு
துலக்கிட வேண்டும் வாணி
சோம்பரை வெட்டிப் போடு
சுறுசுறுப் புத்தீ ஏற்று
சாம்பரால் மூடப் பட்ட
தணலினால் பயனொன்றில்லை
சூம்புதல் போக்கு, நானும்
தொட்டவை துலங்க வைப்பாய்
ஆம்பல வெற்றி நல்கி
ஆதரித் தருள்வாய் வாணி!
அடுத்தவர் மனம்நோ காமல்
அருஞ்செயல் புரிய வேண்டும்
நடத்திடும் செயலில்
எல்லாம்
நன்மையே விளைத்து, வெற்றி
மிடுக்குடன் வாழ வைத்து
விண்ணினை மண்ணில் காட்டிச்
சிடுக்குகள் நீக்கி
வாழ்வில்
தெம்புகள் தருவாய் வாணி
உசிதம்நீ அறிவாய், ஞான
உன்னதம் அறிவாய், உண்மை
வசியம்நீ அறிவாய்,வார்த்தை
வலிமைநீ அறிவாய், அன்புக்
கசிவுநீ அறிவாய், என்ன
காரணம் என்றன் ஞானப்
பசியைநீ அறிந்திடாமல்
பட்டினி போடு கின்றாய்?
ஆள்வினை வேண்டும், தாழ்த்தும்
அயர்வுகள் போக்க வேண்டும்
வாள்முனை கூர்மை யின்றி
வடிப்பதால் பயனொன் றில்லை
கோள்வினை எல்லாம் நன்மை
கூட்டிடத் திருப்பி வைப்பாய்
தாள்பணிந் திருக்கும்
என்னைத்
தாங்கியே அருள்வாய் வாணி!
No comments:
Post a Comment