புன்னகைசெய் போதும்.
சமநிலைச் சிந்து
மதலைப் பருவத்திலே - அம்மா உன்றன்
வாழ்த்தினைப் பெற்றிருந்தேன்
குதலை மொழியினிலே- உன்றன்பேர்
கூப்பிடக் கற்றிருந்தேன்
கொஞ்சம் வளர்ந்தவுடன்- உனக்குநான்
கும்பிடு போட்டுவந்தேன்
தஞ்சம் அடைந்தவுடன்- உன்னருள்
தந்தெனைக் காத்துவந்தாய்
சற்றும் தயங்காமல்- எனக்கெழும்
சந்தேகம் தீர்த்துவந்தாய்
கற்றிடும் முன்னரதை – என்னுள்ளே
காட்டி மகிழ்வுதந்தாய்
தனயன் தனில்மேலாய்- என்னைத்
தாங்கிப் புரந்தனைநீ
எனக்கும் உனக்குமுள -உறவை
எப்படிச் சொல்லுவது?
எனக்கு வயதானால்- என்ன
என்றும்நீ தாயல்லவோ?
கனக்கும் மறதியினைப் -போக்கிக்
காத்திட வேண்டுமம்மா?
உள்ளே ஒளிவீசி- -ஞானத்து
உள்ள நிலைபேசி
வெள்ளமெனக் கருணை -தந்தே
வீறுகொளச் செய்வாய்
எத்தனை தூரம்வரை -பாதை
ஏகிடும் நானறியேன்
புத்தகி, நாமகளே - சற்றே
புன்னகை செய்போதும்
No comments:
Post a Comment