Saturday, May 11, 2019

பிரமன்


பிரமன்
அறுசீர் விருத்தம்
தோன்றுதல் என்னும் வார்த்தை
     தோன்றுதல் யாரால், ஜீவன்
ஊன்றுதல் யாரால், மண்ணில்
     உற்பத்தி யாரால், மூலத்(து)
ஆன்றதோர் கலையாய், மண்ணை
     அழகுறப் பெற்ற தாரால்
ஈன்றிடும் பெற்றி இங்கே   
     இருந்திடும் தன்மை யாரால்?

படைத்திடும் தொழிலைச் செய்யும்
     பவித்திரன், யார்க்கும் வாழ்க்கை
கிடைத்திடும் அருளைச் செய்யும்
     கீர்த்தியான்,  படைப்பை என்றும்
உடைத்திட அறிந்தி டாத
     உத்தமன், பிரமன் என்னும்
படைத்திறம் மிக்கான், செய்யும்
     பாத்திரம் அறிந்த மேதை

உழைப்பவன், உழைப்பி னாலே
     உயர்பவன், வேர்வை சிந்தித்
தழைப்பவன், படுத்துத் தூங்கும்
     தன்மையன் அல்ல, மண்ணைக்

குழைப்பவன், , அழகு கொஞ்சக்
     கொடுப்பவன், கலைகள் சேர
இழைப்பவன், நடிக்க மாட்டான்
     இவன்புகழ் சொல்லப் போமோ?

கோயில்கள் இல்லை யென்று
     கூறுவார், ஜீவ னெல்லாம்
கோயில்க ளாக உள்ளே
     கொண்டிடும் போது, வேறு
கோயிலும் ஏனோ, வேதம்
     கூறிடும் சான்றோர் ஞான
வாயிலே குடியி ருக்கும்
     வள்ளலை வணங்கு கின்றேன்

கலையெல்லாம் இவனைச் சாரும்
     காரணத் தாலே யன்றோ
கலைமகள் இவனைச் சார்ந்து
     கணவனாய்ப் பெற்றாள், வாழ்க்கை
நிலையெலாம் இவனைப் போல
     நிறைவுடன் செய்வார் இல்லை
தலையிலே எழுதிவைத்தால்
     தப்புவார் இல்லை, உண்மை
**
கலிவெண்பா
மூலப் படைப்பு முழுதும் குறைவின்றிச்
சீலத் திருந்தால்தான் சீராக மற்றவர்கள்
காத்துப் புரந்து, கணக்கை முடித்திடலாம்
பாத்திரத்து  நேர்த்தி பழகுபவர் தானறிவார்
செய்திறன் கொண்ட திறமை பிரமனைப்போல்
எய்தியவர் வேறே இருக்க முடியாது.
கண்ணறியா, காது , கருத்தறியா, எண்ணில்லா
நுண்ணியதாம் நல்லுயிர்கள் நோகாமல் தாம்படைத்து
இன்னபடி வாழ்க்கை இருக்கும் எனவெழுதி,
சொன்னபடி வைக்கின்ற சூக்குமத்தை யாரறிவார்?
செய்த வினைக்கேற்பத் தீர்வை விதிப்பவனை,
செய்கைப் பயன் நாடாத் தேசு படைத்தவனை
வாய்த்த சிலையிலுயிர் வார்த்தாலும் பாசமெனும்
பேய்வலையில் சிக்காத பேரருளை, செங்கமலப்
பூவிலே உற்பவித்த பூரணனை, இன்றென்றன்
பாவில் உயிர்தூவும் பார்த்திபனைப் போற்றுகிறேன்
உங்கள் உருவை உமக்களித்த வானவனை
பொங்குகிற அன்பதனால் போற்றுங்கள், செய்ந்நன்றிப்
பண்புண்டேல் போற்றிப் பரவுங்கள், என்றனரும்
நண்பர்களே சொன்னேன் நலம்!

No comments:

Post a Comment