Saturday, May 11, 2019

தெய்வத்திரு


தெய்வத் திரு
கலிவெண்பா

காலம் அசைப்பதெது, காட்சி தருவதெது
ஞாலம் உருட்டி நடிப்பதெது, மண்மார்புக்
குன்றில் நிமிர்வதெது, கொட்டும் அருவியெது,
நன்றென்றும் தீதென்றும் நட்புப் பகையென்றும்
உள்ளே மனத்தை உலைப்பதெது, ஊக்கமெது
பள்ளத்தை மேடாக்கிப் பார்ப்பதெது, மேடுகளைத்
தள்ளிக் களித்துச் சலிப்பதெது, தூங்குகையில்
மெள்ள விழிப்பதெது, மேடை அமைப்பதெது
ஒன்றை இரண்டாக்கி ஒன்றாக்கி ஒன்றுக்குள்
ஒன்றுக்குள் ஒன்றாய் உயிர்ப்பதெது? உண்மையெது
வாங்கக் கொடுப்பதெது, மாற்றி எடுப்பதெது
ஓங்கும் நிலைக்கே உயர்த்துவதும், ஓங்கிப்பின்
ஏங்கும் நிலைக்கே இழுக்கின்ற செய்கையெது
மூங்கில் துளைக்குள் முடங்கிக் கிடப்பதெது
ஆடுகிற பம்பரத்தில் ஆடா திருப்பதெது,
கூடுகிற அண்மையிலும் கூடா திருப்பதெது
ஓசைப் பொருளாய் ஒலிப்பதெது, ஏதேதோ
தூசடைந்த உள்ளத்துத் தோன்றா திருப்பதெது
உள்ளதெது, அல்லதெது, ஒவ்வொன்றும் ஆனதெது
தெள்ளியது, தேனமுது, தேவர் உயரமுது
எல்லாம் அதுதான், அதுதானே எல்லாமும்
இல்லையென இல்லா திருக்கின்ற அப்பொருள்தான்
பார்க்காத நம்முள் பதுங்கி இருக்கிறது
சேர்ப்போம் அத்தெய்வத் திரு.

No comments:

Post a Comment