எழுதுகோல் தெய்வம்
நெஞ்சிலே வானம் பாடி
நினைவுகள் பாடும் போது
விஞ்சையைச் சொல்நி லத்தில்
வித்திடச் செய்யும் தெய்வம்,
கஞ்சமே இல்லாத் தெய்வம்,
கவிஞர்கள் தெய்வம், என்றும்
எஞ்சிடும் தெய்வம், எங்கள்
எழுதுகோல் தெய்வம், தெய்வம்.
சோகமா, சுகமா, ஞானச்
சூக்குமம் தானா, பக்தி
யோகமா, கற்ப னைசேர்
யூகமா, உணர்வா, காதல்
தாகமா, தவிப்பா, செஞ்சொல்
சாரமா, யாவும் வாங்கி
ஏகமாய் அளிக்கும் தெய்வம்
எழுதுகோல் தெய்வம், தெய்வம்
கணங்களை யுகமாய் மாற்றிக்
கால்பெற வைக்கும் தெய்வம்
குணங்களை, கொள்கை தீபக்
குதிப்பினை, கால நெஞ்சின்
மணங்களை, மாற்றம் தன்னை
வழங்கிடும் தெய்வம், உள்ளே
இணங்கிடும் தெய்வம், எங்கள்
எழுதுகோல் தெய்வம், தெய்வம்
சரித்திரம் ஆக்கும் தெய்வம்,
சந்தடி கொள்ளும் நெஞ்சின்
தரித்திரம் போக்கும் தெய்வம்
சாதனைத் தெய்வம், சொல்லில்
சிரித்திடும் தெய்வம், பொங்கிச்
சீறிடும் தெய்வம், தீமை
எரித்திடும் தெய்வம், எங்கள்
எழுதுகோல் தெய்வம், தெய்வம்~
விண்ணினை மண்ணுக் காக்கும்
வித்தகத் தெய்வம், சொல்லைப்
பண்ணிலே குழைத்து மக்கள்
பயன்பெற வைக்கும் தெய்வம்,
கண்ணிலே பதியும் காட்சி
கவிதையாய் மார்றும் தெய்வம்
எண்ணிலே உயர்ந்த தெய்வம்,
எழுதுகோல் தெய்வம், தெய்வம்!
No comments:
Post a Comment