Monday, May 13, 2019

காயத்ரி கேசாதி பாத வர்ணனை


காயத்ரி கேசாதி பாத வர்ணனை

தத்துவ மான ஐந்து
       தலைகளில் இரத்தி னங்கள்
மெத்தவே பதித்தி ழைத்து
       விளங்கிடும் கிரீடம் ஐந்தும்
நித்திய வண்ண ஜாலம்
       நிகழ்த்திட , கூந்தல் பொங்கி
வித்தகம் காட்டப் பூக்கும்
       வேதமே போற்றி போற்றி

முத்தெனப் பளப ளக்கும்
       முகமொன்று, பவளம் ஒன்று
பத்தரை மாற்றுப் பொன்னாய்
       பளிச்செனத் திகழ்வதொன்று
உத்தம வைரம் ஒன்று,
       ஒளிர்ந்திடும் நீலம் ஒன்று,
அத்தனை அழகு விஞ்சும்
       ஐந்துமா முகங்கள் போற்றி!

பூரண நிலவு தோற்கும்
       புன்னகை போற்றி, ஞான
ஆரண மாகக் கண்கள்
       ஐந்தொடு பத்தும் போற்றி
தோரணம் போலக் காதில்
       சுடர்விடும் அணிகள் போற்றி
காரெனத் திரண்டி ருக்கும்
       கருங்குழல் போற்றி போற்றி

சிந்துரத் திலகம் போற்றி,
       திறந்துள செவிகள் போற்றி
சந்திர நெற்றி போற்றி,
       தகவுள நாசி போற்றி
இந்தநல் அழகுக் கிங்கே
       ஈடிலை என்னும் வண்ணம்
வந்தனைக் குரிய செய்ய
       வனப்புள திருவாய் போற்றி

இப்படிக் கதுப்பு கூடி
       இருப்பதே அழகாம் என்ன
அப்படி இருக்கும் கன்னம்
       அமைந்துள தேவி போற்றி
ஒப்பிட முடியா வண்ணம்
       ஒளிர்மணிக் கண்டம் போற்றி
செப்பிட இயலா வெற்றி
       சிறந்திடும் தோள்கள் போற்றி!

இரத்தின ஆரம் போற்றி
       இவையிவை ஏற்ற வென்றே
பொருத்தின வண்ண வண்ணப்
       பூக்களின் மாலை போற்றி
இருந்தனம் எல்லாம் நல்கும்
       ஏந்திழை தனங்கள் போற்றி!
திருந்தவே அமைந்திருக்கும்
       சிந்தனை வயிறு போற்றி

சக்கர நாபி போற்றி
       தாமரை ,சங்கு, சக்ரம்
அக்கறை யாக ஏந்தும்
       அங்குசம் கசை, கபாலம்
மக்களைக் காக்கக் காட்டும்
       வரதமும் அபயம் தானும்
மிக்கவே தாங்கி வீரம்
       விளைத்திடும் கரங்கள் போற்றி!

பொய்யெனும் இடையின் ஏற்றம்
       புகலவோ, போற்றி போற்றி
மெய்யென மூலம் காக்கும்
       மேகலை போற்றி போற்றி
உய்வகை அளிப்ப தற்கே
       உதவிடும் கால்கள் போற்றி
எய்தரும் வேத நாதம்
       இசைத்திடும் கழல்கள் போற்றி!

வந்துவந் தடியார் எல்லாம்
       வணங்கிடும் பாதம், தேவர்
வந்தனை செய்யும் பாதம்,
       மறைகளின் வடிவாம் பாதம்
எந்தவோர் கலையும் வந்து
       இருப்பிடம் காணும் பாதம்
சிந்தனைக் கேற்ற பாதம்
       தேவியின் பாதம் போற்றி!

விடுகிலேன் என்றே காக்கும்
       வீரிய மந்த்ரம் போற்றி
கடவுளர் போற்று  கின்ற
       காயத்ரி தேவி போற்றி
முடிவிலா ஞானம் நல்கும்
       முதல்வியே போற்றி போற்றி
திடமெனப் பற்றி விட்டோம்
       தேவியே போற்றி போற்றி!

No comments:

Post a Comment