காயத்ரி மும்மணி மாலை
(இப்பாடலில் முதல் பாடலில் தொடங்கி ஒவ்வொரு பாடலிலும் காயத்ரி மந்திரத்தின் ஓரட்சரம்
முறைப்படி வரும்.)
காப்பு
மூலமாம்
காயத்ரி மும்மணி மாலையிலே
ஞாலம்
புகழும் நலம்பெறவே- சாலவே
மந்திர
அட்சரங்கள் வந்து சிறக்கின்ற
தந்திரம்
ஐங்கரனே தா!
நூல்
1 வெண்பா
தத்துவமாம் சத்தியத்தைத் தன்னுள்ளே தாங்குகிற
நித்தியமாம்
ஞான நிதியாகும்- நித்தநித்தம்
சந்தியா
வந்தனத்தில் தாமோது கின்றவர்கள்
சிந்தைநிறை
காயத் திரி!
கட்டளைக்
கலித்துறை
2 காயத்
திரியொரு கண்ணிய மந்திரம், காட்டுகிற
மாயத்
திரியல்ல வாத்ஸல்யம் கொண்டு வலுவுடனே
தோய
உரைப்பவர் தூய மனத்திடைச் சொந்தமென
நேயத்
துடனமர் வாளந்த அற்புத
நிர்மலையே!
அறுசீர்
விருத்தம்
3 மலைமகள்
வரிசை நிற்க
வாணியும் விருது பாட
அலைமகள்
அழகு செய்ய
அருள ரசாளும் தேவி
நிலைபெறும்
அறுநான் கிற்குள்
நின்றிடும் வேத மூலம்
நலமுயர்
காயத் ரீயின்
நற்பதம் போற்றி போற்றி
வெண்பா
4 போகட்டும்
துர்மதி பொன்றட்டும் துர்க்கதி
ஆகட்டும்
நல்ல அமைவுகள்- பூக்கட்டும்
காயத்ரி
நல்லருள், காணட்டும் எங்குமே
நேயத்
துடன்நன் னெறி
கட்டளைக் கலித்துறை
5 நன்னெறி பற்றி நலமாய் மனத்தின் நடத்தையினைத்
தன்னெறிக்
காக்கித் தகவுடன் காயத்ரி தாள்பணிந்தால்
முன்னறி
விப்பாள், முனிவரும் போற்றும் முறைதருவாள்
புன்னெறி
யாவும் புலப்படா தப்புறம் போய்விடுமே!
அறுசீர் விருத்தம்
6 மேவு
வரே நல் மேம்பாடு
வித்தகங்கள் , வீரியங்கள்
ஏவு வரேசொல் அதிகாரம்
எய்து வரேபல் வளம்செல்வம்
தூவுவரே தன் நெஞ்சத்தின்
சுகந்தம் தன்னை எங்கெங்கும்
தேவி காயத் ரீபாதம்
சேர்ந்தோர்க் கான செயலிவையே!
வெண்பா
7 இவையோ
இலைவே றெவையோ மறையின்
சுவையோ, அணியோ, சுடரோ- தவறாதே
எண்ணத்தில்
ஏற்றி இனிதே பரவிடுக
விண்ணுக்கும் அஃதே விளக்கு.
கட்டளைக் கலித்துறை
8 குணதிசை,
காலையில் காயத்ரி ஆகக் கொலுவிருப்பாள்
தணலெரி உச்சியில் சாவித்ரி ஆகச்
சமைந்திடுவாள்
தணிகிற மாலை சரஸ்வதி ஆகத் தழைந்திடுவாள்
அணிதிகழ் பாதம் அபயம் நிறைவாய் அளித்திடுமே!
எண்சீர் விருத்தம்
9 அளிக்கின்ற
வேதத்தின் ஆகம், ஞான
ஆலயத்தில் உறைகின்ற தெய்வம், அன்பர்
களிக்கின்ற
மந்திரத்தின் சிகரம்,
உச்சி
காட்டிநமை உய்விக்கும்
மூல சக்தி
விளிக்கின்ற
போதினிலே ஓடி வந்து
வேண்டியன நல்குகிற வள்ளல், நெஞ்சில்
துளக்கமுற
உட்கண்டே உச்ச ரிப்பார்
துரியநிலை எய்திடுவார்,
சுகமே காண்பார்.
வெண்பா
10 பார்ப்பதற்கோ
கண்ணிரண்டும் பத்தாவாம், பாதத்தில்
சேர்ப்பதற்கோ உள்ளத் திடமொன்றே-
வார்க்குமெழில்
ஐந்து திருமுகத்தாள் ஆளும் பதின்கரத்தாள்
வந்தருள் கூட்டிடும் வான்.
கட்டளைக் கலித்துறை
11 வான்சுடர்த்
தாமரை , வார்சங்கு சக்கரம் வாய்த்தகதை
பான்மைகொள் அங்குசம் பக்கம் கசை
அபயம்வரதம்
கான்மிசை கிட்டும் கபாலம் எடுத்தே
கரங்களிலே
தான்பொலி வேற்கும் தயாபரி காயத்ரி
சத்தியமே!
அறுசீர் விருத்தம்
12 சத்திய மான ஒன்று
தானொன்றாய் நின்றும், எங்கும்
நித்திய மான வஸ்து
நெறியிலே நிறைந்தி ருக்கும்
புத்தியை விளக்கும், உண்மை
புலப்படக் காட்டும் மாண்பு
முத்தியை அளிக்கும் நல்ல
மூலமாய் வயப்ப டுத்தும்
வெண்பா
13 வயப்பட்டு
விட்டாலே வாழ்வில் எதற்கும்
பயப்படத்
தேவையில்லை பாங்காய்- இயக்கத்திற்கு
எல்லாம்
இயக்கம் இதுவாகும் காயத்ரி
இல்லாமல்
ஏதும் இலை.
கட்டளைக்
கலித்துறை
14 இலையென்ற ஒன்றிங் கிருக்கையில் உண்டென் றிருந்ததுவாய்
நிலையென்று
காலம் நினைவோ டியங்கிடும் நித்தியமாய்
உலையொன்றில்
அண்டங்கள் ஊதி உமிழ்ந்திட்ட உன்னதமாய்
துலைநின்று
தீமைகள் தூள்படுத் தும்பதம் தோத்திரமே!
எண்சீர் விருத்தம்
15 தோத்திரங்கள்
செய்தபடி மஹிமையினைப் பாடு
சொந்தமென
காயத்ரி அருளைநிதம் நாடு
காத்திரமாம்
முத்துநிறம் காட்டும் ஒரு முகமே
காணறிய
பவளத்தில் ஒளிரும் ஒரு முகமே
மாத்துவிடாத்
தங்கநிறம் திகழும் ஒரு முகமே
மங்காத நீலமணி வண்ணமொரு முகமே!
பூத்தவொளி
வைரத்தில் பொலியும் ஒரு முகமே!
போற்றிடுவோம் அவளருளில் பொருந்திடுவோம்
அகமே!
வெண்பா
16 கம்மென்று
அகத்தில் கனிந்து பிரணவம்
மும்மை
வியாக்ருதி முன்னமைய- செம்மை
விழிப்புணர்
வோடு விதந்தோதக் கிட்டும்
செழிப்புடைய
ஞானமாம் தேன்
கட்டளைக் கலித்துறை
17 தேனேயோ,
இல்லை, திகட்டாத் திதிப்பேயோ, சேரமுத
வானேயோ,
சொர்க்க வரவேயோ, என்ன வகைவகையாய்த்
தானேயோர்
கொத்தாய் சகல சுகந்தரு சௌக்கியமாய்
" நானேபார் உன்னுள்'
எனச்சொல்லும் காயத்ரி நாமங்களே!
எண்சீர் விருத்தம்
18 நாமங்கள்
ஆயிரமாய் நாவதனில் ஏற்றி
நமகவென
நாளெல்லாம் இசையோடு போற்றி
நேமங்கள் தாம்காத்து நிறைமலர்கள் கொய்து
நித்தநித்தம் அலங்காரப் பூசை பல செய்து
தாமங்கு
நெகிழாமல் தற்பெருமை சாற்றும்
தம்பட்டம்
தாமடித்துச் ஜபங்களுரு வேற்றும்
சூமந்தி
ரக்காளி வேலையில்ம யங்காள்
சொற்பமெனி
லும்நெகிழ்வுக் கருளத்த யங்காள்!
வெண்பா
19 தயக்கம்
எதற்கு? ஜபம்செய்து வந்தால்
மயக்கங்கள்
யாவும் மறையும் -வியக்க
நகமுடி
தீபமாய் நல்லொளியைக் காண்பாய்
தகதக
வென்றே தனி.
(நகமுடி-
குன்றின் உச்சி)
கட்டளைக் கலித்துறை
20 தனித்திருந்
துன்றன் தவற்றை முழுவதும் தானுணர்ந்து
நினைத்திருந்
துள்ளம் நெகிழ்ந்தால், மனத்துள் நெருங்கிவந்தே
இனித்திருந்
தென்பாள், இவள்பிர பாவம் இதுவறிக!
அனைத்திருந்
தாலும் அவள்மந் திரமோர் அனுபவமே!
அறுசீர் விருத்தம்
21 பவக்கடல் நீங்க இந்தப்
பார்க்கடல் தன்னில் சேரும்
அவக்கடல்
முழுதும் தாண்டி
அம்மையின் அருளி னாலே
தவக்கடல்
அனைத்தும் மேலாம்
தனிக்கடல் சோதி வெள்ள
நவக்கடல்
தன்னில் மூல
நாதமே ஒன்ற லாமே!
வெண்பா
22 ஒன்று
பிரணவம், ஓங்கிரண்டு தாமரைகள்
நின்று
கரங்களிலே நேராகும்- நன்றாக
முந்திநிற்கும்
மூவுலகம் நால்வேதத் துள்ளிருப்பாள்
ஐந்துமுகத்
தன்னை யவள்
கட்டளைக் கலித்துறை
23 அவள்பதம்
நாடி அமரரும் போற்றி அருளடைந்தார்
கவிஞர்கள்
வேண்டிக் கவிதையில் யாத்தனர் காவியங்கள்
திவலை
எனினும் திகழரும் பக்திச் சிறப்பிருந்தால்
தவறுகள்
செய்யினும் தாங்குவாள் அன்னை தயாபரியே!
எண்சீர் விருத்தம்
24 தயாள
மூர்த்தி தளராக் கீர்த்தி, தாயின் மந்திரம்
தத்ஸ விதுர்வ ரேண்யம் பர்கோ தேவஸ் யதீமஹி
தி யோ யோ நப்ர சோத யாத்'என்
றியம்பும் மந்திரம்
தேவர் களெல்லாம் தலைமேல் ஏத்தும்
சிறந்த மந்திரம்
வயோதி
கம்நம் கண்முன் வந்து வாட்டும் முன்னமே
வாயால் மனத்தால் தினமும் சொல்ல வாய்த்த
மந்திரம்
வியாதி வாரா விதமே நல்கும், மேவி மண்ணிலே
மீண்டும் பிறவா வரம ளிக்கும் வேத
மந்திரம்!
வெண்பா-
அன்னபந்தம்
25 மந்திரங்க ளத்தனைக்கும் மாட்சிமிகும்
காவியம்
விந்தைமிகு
மற்புதங்கள் மேவிநிற்க - வந்துள
மந்திரத்தை
வேறேயெத் தந்திரத்தால் கொள்ளுவது
வந்தவன்ன
பந்தம் மதம்..
(இது அன்ன பந்தம். காயத்ரியின்
வாகனங்களில் அன்னமும் ஒன்று. பின்னிணைப்புக் காண்க!)
கட்டளைக்கலித்துறை
26 தம்பிடித் தேசொலும் சாகசம் இல்லை,
தருக்கிமுனம்
வம்படித்
தே கொடும் வல்வினை கள்செய்த வல்லரக்கன்
நம்பிடும்
காயத்ரி நாமம் துறந்ததால் நல்லுரமாம்
தெம்பொடிந்
தேஉயிர் நீங்கினன் காரணம் சிந்திக்கவே!
பதினான்கு
சீர் விருத்தம்
27 வேத மோங்கிட வீற்றிருப்பவள்
விண்ணவர்களும் போற்றுவார்
வீழுவார் பதம் வேண்டுவார் தினம்
வெற்றி கிட்டிடச் சூழுவார்
ஏதம் அற்றதாம் ஏற்றம் கண்டவள்
எண்ணம் யாவுமே வெல்லுமே
ஏழுலகமும் தோத்தரிக்குமே
இற்றுப்போகுமே தீவினை
ஓது மந்திரம் ஊற்றம் கொண்டவள்
உண்மை உன்னதம் உன்னதம்
ஊழையும் புறம் காணலாகுமே
உற்றவள் பதம் பற்றவே
ஆதரிப்பவள் ஆற்றல் போற்றுவோம்
அண்ட நாயகி ஆமவள்
ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்
அற்புத ஒளி நிச்சயம்
(குறிப்பு- இது தச பங்கி-
ஒரே பாடல் பத்துப்பாடல்களாகப் பிரியும்.) காயத்ரியின்
ஒவ்வொரு கரத்துக்கும் ஒவ்வொரு பாடல். பின்னிணைப்புக் காண்க.)
வெண்பா
இரட்டைநாகபந்தம்
28 நிச்சய
மாகவிச் சக்தியை நீ தொழு
புச்ச
மழகு திகழ்சக்தி - மெச்சுபுகழ்
காயத்ரி
விந்தைச் சிறப்பு வனப்புள்ள
மாயள்
மகிழ்வுற வே!
(இது இரட்டை நாக பந்தம். குண்டலினி
சக்தியைக் குறிப்பது. பின்னிணைப்புக் காண்க!)
கட்டளைக் கலித்துறை- வினா உத்தரம்
29 மகிழ்வு தருமழ கானதோர் மந்திர மாண்பெதுவோ
திகழ்மா மறையு ளுயர்வாய்த் தெரியும் சிறப்பெதுவோ
புகழில்
பெருந்தத் துவத்தில் சிறந்த பொருளெதுவோ
உகந்தே
விடையை உ ரி ய முறையறி ஒன்பதிலே!
(இது வினா உத்தரம்- பாடலிலேயே
விடையும் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் ஒன்பதாம் எழுத்தை எடுத்து
இணைத்தால் காயத்ரி என்று விடை வரும்.)
வெண்பா
30 ஒன்பது
வாசல் உடம்புக் குள்ளே
ஒவ்வோர் அணுவும் சக்கரமாம்
என்பது
விஞ்ஞா னத்தார் இந்நாள்
எடுத்துச் சொல்லும் உண்மையடா
அன்னவை
தம்முள்ஆறும் ஒன்றும்
ஆயி ரத்தில் நிறைந்துவிடும்
உன்னத
மதற்கே உயர்கா யத்ரி
உயர்த்திக் காட்டும் தத்துவமே!!
நூற்பயன் - வெண்பா
31 வானம்
நமக்கே வசப்படும், போதரிய
ஞான
உணர்வு நமக்குவரும்- ஈனமாம்
பேதம் மறையும், பெருமைமிகு காயத்ரி
போதம் ஒளிர்ந்திடும் போது.
வேத
மோங்கிட வீற்றிருப்பவள்
விண்ணவர்களும் போற்றுவார்
வீழுவார் பதம் வேண்டுவார் தினம்
வெற்றி கிட்டிடச் சூழுவார்
ஏதம்
அற்றதாம் ஏற்றம் கண்டவள்
எண்ணம் யாவுமே வெல்லுமே
ஏழுலகமும் தோத்தரிக்குமே
இற்றுப்போகுமே தீவினை
ஓது
மந்திரம ஊற்றம் கொண்டவள்
உண்மை உன்னதம் உன்னதம்
ஊழையும் புறம் காணலாகுமே
உற்றவள் பதம் பற்றவே
ஆதரிப்பவள் ஆற்றல் போற்றுவோம்
அண்ட நாயகி ஆமவள்
ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்
அற்புத ஒளி நிச்சயம்
கலி விருத்தம்
வேத மோங்கிட வீற்றி ருப்பவள்
ஏதம் அற்றதாம் ஏற்றம் கண்டவள்
ஓது மந்திர ஊற்றம் கொண்டவள்
ஆத ரிப்பவள் ஆற்றல் போற்றுவோம் 1
வஞ்சித் துறை
வேத மோங்கிட
ஏத மற்றதோர்
ஓது மந்திரம்
ஆதரிப்பவள் 2
எழுசீர் விருத்தம்
வேத மோங்கிட வீற்றி ருப்பவள் விண்ண வர்களும் போற்றுவார்
ஏதமற்றதாம் ஏற்றம் கண்டவள் எண்ணம் யாவுமே வெல்லுமே
ஓது மந்திரம் ஊற்றம் கொண்டவள் உண்மை உன்னதம் உன்னதம்
ஆதரிப்பவள் ஆற்றல் போற்றுவோம் அண்ட நாயகி ஆமவள் 3
வஞ்சித் துறை
வீற்றி ருப்பவள்
ஏற்றம் கண்டவள்
ஊற்றம் கொண்டவள்
ஆற்றல் போற்றுவோம் 4
வஞ்சி விருத்தம்
விண்ண வர்களும் போற்றுவார்
எண்ணம் யாவுமே வெல்லுமே
உண்மை உன்னதம் உன்னதம்
அண்ட நாயகி ஆமவள் 5
கலித்துறை
வேத மோங்கிட விண்ண வர்களும் போற்றுவார்
ஏத மற்றதாம் எண்ணம் யாவுமே வெல்லுமே
ஓது மந்திரம் உண்மை உன்னதம் உன்னதம்
ஆதரிப்பவள் அண்ட நாயகி ஆமவள் 6
கலிவிருத்தம்
வீழுவார் பதம் வேண்டுவார் தினம்
ஏழு லகமும் தோத்த ரிக்குமே
ஊழையும் புறம் காணலாகுமே
ஆழமாய் அவள் நாமம் போற்றிடி 7
வஞ்சி விருத்தம்
கிட்டிடச் சூழுவார்
இற்றுப்போகுமே தீவினை
உற்றவள் பதம் பற்றவே
அற்புத ஒளி நிச்சயம் 8
எழுசீர் விருத்தம்
வீழு வார் பதம் வேண்டு வார் தினம்
வெற்றி கிட்டிடச் சூழுவார்
ஏழு லகமும் தோத்த ரிக்குமே
இற்றுப் போகுமே தீவினை
ஊழை யும் புறம் காணலாகுமே
உற்றவள் பதம் பற்றவே
ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்
அற்புத ஒளி நிச்சயம்
9
அறுசீர் விருத்தம்
விண்ண வர்களும் போற்றுவார் வெற்றி கிட்டிடச் சூழுவார்
எண்ணம் யாவுமே வெல்லுமே இற்றுப் போகுமே தீவினை
உண்மை உன்னதம் உன்னதம் உற்றவள் பதம் பற்றவே
அண்ட நாயகி ஆமவள் அற்புத ஒளி நிச்சயம் 10


No comments:
Post a Comment