Saturday, May 11, 2019

தடங்கள்


தடங்கள்
எண்சீர் விருத்தம்

"புயலடிக்கும், இடைவிடாத மழையால் வெள்ளம்
        புரண்டுவரும், புழுங்கவைத்துப் பொசுக்கு கின்ற
வெயிலடிக்கும், பனிகடிக்கும் குளிரில் மேனி
        வெடவெடக்கும், என்றாலும் வசந்த காலக்
குயில்படிக்கும் எனநம்பிச் செல்லும் வாழ்வில்,
        கொடுமைகளே மிகுந்திருந்தால் என்ன செய்வேன்?
உயிர்குடிக்கும் நிலைமாற்றி இறைவா, என்றன்
        உடனிருக்க மாட்டாயா?" கேட்டான் கண்ணன்.

"உன்னோடு நானிருப்பேன், கவலை கொண்டே
        உழலாதே!" எனச்சொன்னான் இறைவன், "தேவா
என்னோடு நீயிருக்கும் உண்மை தன்னை
        எப்படிநான் அறிந்திடுவேன்?" என்றே ஐயம்
முன்னோட வினாத்தொடுத்தான் கண்ணன், "கண்ணா,
        முந்துகையில் பாதையைநீ திரும்பிப் பார்த்தால்
உன்னோடு நான் நடக்கும் தடத்தைக் காண்பாய்
        உனைப்பிரியேன், நம்புகநீ" என்றான் தேவன்.

எங்கெங்கு சென்றாலும் திரும்பிப் பார்த்தே
        இருஜோடிப் பாதங்கள் தடமாய்க் கண்டான்
அங்கங்கே வரவேற்பும், தன்பால் யாரும்
        அன்பாக இருப்பதுவும் கண்டான், மூன்று
திங்கள்கள் சென்றதன்பின் துன்பம் மீண்டும்
        தொல்லைதர மிகவருந்தித் திரும்பிப் பார்த்தான்
அங்கேயோ ஒருஜோடிப் பாதம் மட்டும்
        அடித்தடமாய் அமைந்திருக்கக் கண்டு நொந்தான்.

"இறைவனுமா பொய்சொல்வான், நம்பி வந்த
        இமயமுமா கரைந்துவிடும், உண்மை கூட
முறைதவறிப் போய்விடுமா? முட்டாளாநான்?
        முடக்குகிற துன்பம் எனை வாட்டும் போது
மறைவதுவா? வழங்கிப்பின் பறிக்கலாமா?
        வாக்குறுதி ஒருகேடா? இறைவா நீயும்
நெறிதவறிப் போய்விட்டாய், பொய்மை பேசும்
        சன் நீ" என அரற்றி நின்றான் கண்ணன்.

மலையெடுத்த மாதவனோ இதனைக் கேட்டே
        மலரிதழில் புன்னகையை நெளிய விட்டான்.
இலையுதிர்த்த மரத்தினிலே வண்ணக் கொள்ளை
        எழுதிவைத்த சித்திரமாய் செக்கர் வானம்
அலையெடுத்த சமுத்திரத்தில் நுரைப்பூ வெண்மை
        ஆனந்த மயில் நடனம், குயிலின் பாட்டு
குலையெடுத்த தென்னையிலே இளநீர்க் கூட்டம்
        குளிர்தடவி இதமளிக்கும் சாரல் ஊட்டம்.

"நீசன்நீ" எனச்சொன்னாய் கண்ணா, யார்க்கும்
        நேசன்நான், உன்னிடத்தே என்றென்றைக்கும்
வாசன்நான், கர்மவினை யாலே நீயும்
        வாடுகையில் உன்னை,நீ அறியாவண்ணம்
தாசன்நான் என்தோளில் தூக்கிச் சென்றேன்
        தடமாய் நீ கண்டவை என் கால் தடங்கள்
மோசம்நான் செய்தேனா? சொல்க" என்ற
        முழுமுதலின் குரல்கேட்டான் , நெகிழ்ந்தான் கண்ணன்.

(சென் கதை ஒன்றை ஒட்டியது)


No comments:

Post a Comment