கண்ணன் என் மைந்தன்
வெண்கலிப்பா
வெண்ணிலவை மேகம் விழுங்கி மறைந்திருக்க,
தண்ணுலவு தென்றல் தவழ்ந்து நடந்துவர
மீந்த இடைவெளியில் விண்மீன்கள் ஒன்றிரண்டு
நீந்து வதுபோல நின்ற இடம்பெயர
ஊட்டியது போதாமல் உள்ளே பசியெடுக்கக்
கூட்டில் ஒரு குஞ்சு கொஞ்சம் சிணுசிணுக்க ,
தென்னைக் குருத்தோரம் சில்வண்டு பாட்டிசைக்க
இன்னவெனச் சொல்ல இயலாத ஓரெண்ணம்
மெல்ல விகசித்து மேலோங்கி என்கவிதைச்
சொல்லை உசுப்பத் தொடர்ந்து முயற்சி செய
வீதித் திருப்பத்தில் வேகத் தடையின்மேல்
மோதிவிட்ட வண்டி முரட்டுக் குரல்கொடுக்க,
தண்டு விளக்குத் தயங்கி ஒளிவாங்க
மண்டும் கொசுக்கள் மனித இரத்தத்தை
மொண்டு மிகக் குடித்து மொய்யென் றிசைபாட
நொண்டி யடித்து நொடித்த மனத்தோடு
வாசல் புறத்திண்டில் வானத்தைப் பார்த்திருந்தேன்
தாசில் புரியத் தளரா வகையினிலே
எண்ணங்கள் ஒவ்வொன்றாய் என்னுள்ளே பூசலிட
மண்ணுக்கும் விண்ணுக்கும் மாறி மா றிப் பார்த்தேன்
பையன் ஒருபக்கம், பாசமகள் ஓர்பக்கம்
மொய்த்துக் குடைகிற முட்டிவலி யில்துடித்து
இல்லாளோ வீட்டுக்குள் ஏதோ நடக்கின்றாள்
எல்லாம் வெறித்ததுபோல ஏக்கத்தில் நானிருக்க
வந்தான் ஒருவன், வயது பதினாறிருக்கும்
“தந்தையே” என்று தரையில்
அமர்ந்துவிட்டான்
இந்த வயதில் இவருக் கொருமகனா
தந்தையென் கின்றானே, சந்தேகக் கண்கொண்டே
என்மனைவி உள்ளிருந்து ஏறிட்டெனைப் பார்த்தாள்
என்மகனா? இங்கிவனா? எப்படிச்
சொல்கின்றான்?
தந்தை நிகரென்றே சாற்றுகிறான் போலுமெனச்
சிந்தையிலே கொண்டேன். சிரித்தான், அவன்சிரிப்பில்
மந்தை மந்தை மேகங்கள் வாகாய் விலகிவிட
சொந்தங்கொண் டாடியங்கே தோன்றியது வெண்ணிலவு.
மல்லிகைப் பந்தலிலே மண்டுமுகை தாம்வெடித்து
மெல்ல மலர்நாற்றம் வீதி தடவியது.
தென்னை மரத்தினிலே தென்றல்விளை யாடியது.
சின்னப் பறவைச் சிணுங்கல் அடங்கியது
தண்டு விளக்குத் தயங்காமல் மின்னியது
நொண்டி அடித்திருந்த நொம்பலம் தான்மறைய
வாசல் வரை ஓடி வந்துநின்றாள் என்மனைவி
தாசில் புரியத் தலைப்பட்ட எண்ணங்கள்
நேசத்தோடென்னை நெருங்கியதை நானுணர்ந்தேன்
ஆசை யுடன் இல்லாள் அன்புவிழி நோக்கினாள்
“தந்தாய், என என்னைச் சாற்றியதும்
ஏனப்பா?
உன்தந்தை என்னைப்போல் உள்ளவரா” சொல்லென்றேன்
மீண்டும் சிரித்தான், விடிவெள்ளி தோன்றியது.
தூண்டா விளக்காய்ச் சுடர்ந்தது வெண்ணிலவு
“தந்தையே என்னென்ன தந்தாய் மறந்தாயா?
முந்தியொரு நாள் சீடை முள்முறுக்கு நீதந்தாய்
வெண்ணெய்தந் தாய் நல் விளாம்பழமும் நீதந்தாய்
பண்ணொலிக்கும் பாதந்தாய், பாகுக் கனிதந்தாய்
என்தந்தாய்என் தந்தாய் என்றே வரிசையிட
முன்தந்தாய், இங்கிதுவும் முன்னைத் தொடர்”பென்றான்
பேரென்ன சொல்லென்றேன், பிள்ளையின் பேரதனை
யாருரைப்பார்? தந்தையன்றோ, அப்பாநீ
சொல்லென்றான்
‘கண்ணா நீ சொல்”லென்றே
கண்பனித்தாள் என்மனைவி
”கண்ணனா, ஆகாகா, கச்சிதமாம் பேரதுதான்
அப்படியே ஆகட்டும் ஆயிரத்தில் ஒன்றென்றான்
இப்படித்தான் வந்தான் , இவன்வந்த நாள்முதலாய்
என்வீட்டுக் குள்ளெங்கும் ஏறியது தெய்வீகம்
என்பாட்டுக் குள்ளே இழைகிறது சங்கீதம்
கண்ணன்வந்த நாள்முதலாய் கால்வலியே இல்லையெனத்
தண்ணீர்க் குடம்தூக்கித் தாவுகிறாள் என்மனைவி
ஏறும் வயதும் இறங்குவது போலுணர்வு
என்வீட்டு மொப்பட்டில் எங்கேனும் செல்வதெனில்
என்கண்ணன் சாரதியாய் என்னையழைத் தேகுகிறான்
துள்ளியே தள்ளாச் சுளுவாக ஓட்டுகிறான்
தள்ளி விடப் பார்த்த சாரதிகள் எத்தனைபேர்?
நான்பார்த்த சாரதி நல்லவனாம், வல்லவனாம்
தோன்றாத தெய்வீகம் தோன்றியதை நானுணர்ந்தேன்
தோட்டம் திருத்துகிறான், சூம்பிநின்ற
தென்னைமரம்
கூட்டுக் குலைதள்ளி கூத்தாடி நிற்கிறது.
வீட்டுக் கணக்கின் விவரமெல்லாம் பார்க்கின்றான்
வாட்டமே இன்றி வசதிகளைச் சேர்க்கின்றான்
அன்றொருநாள்,
என்பையன் சுந்தர் இனிய பிறந்தநாள்
இன்னறும் நெய்யில் இனியபா தாம்ஹல்வா
என்னவள் செய்திருந்தாள், என்றாலும்
ஓர்வருத்தம்
அன்பு மகனோ அமெரிக்கா வில் உள்ளான்
என்செய்வேன் , நானிதை எப்படித் தின்னுவேன்
என்று புலம்பி இருந்தாள் மனையாட்டி
”முன்னிருக்கும் என்றனுக்கு முந்தித்தா” நீதந்தால்
பின்னென்றன் அண்ணனுக்குப் போய்ச் சேரும் என்றிசைத்துத்
தின்றான் எழில்கண்ணன், தித்திப்பு பேஷென்றான்
அந்நேரம்
எங்கள் தொலைபேசி எம்மை அழைத்ததுவால்
அங்கதனைக் கேட்டோம், அமெரிக்காவின் அழைப்பு
சிக்காகோ கோயிலைச் சேர்ந்தவொரு அர்ச்சகர்
மிக்க சுவைபாதாம் அல்வா கொணர்ந்தங்கு
தந்தார் எனவுரைத்தான், சந்தோஷம் தாங்கவில்லை
விந்தையிது விந்தையிது மேதினியில் என்றுரைத்தேன்
பக்கத் திருந்த பயலோ சிரிக்கின்றான்
அக்கறையாய் என்னை அவன்பார்த் திருக்கின்றான்
எங்கெங்கே சென்றாலும் எல்லோர்க்கும் மத்தியிலே
அங்கொருவன் போலே அவன்தனியே தோன்றுகிறான்
கண்ணன் கறுப்புத்தான், காண்போர் வெறுக்கின்ற
வண்ணத்துக் கும் பேர் வசீகரம் நல்குகிறான்
பையன் அழகதனைப் பார்த்த சிலபேர்கள்
அய்யா இவனெங்கள் ஆண்டாளுக் கேற்றவனே
ஜாதகம் தாருமெனச் சாற்றுகிறார்,கல்வியும்
ஏதெனக் கேட்கின்றார்? என்சொல்ல? கண்ணனின்
ஆன அறிவை அளவிட்டு யார் சொல்வார்?
ஞானம் அவனது நாவில் நடமாடும்
பின்னொருநாள்
என்பையன் சுந்தர் இசைத்த ஒலிநாடா
தன்னைச் செவிமடுத்தோம், தள்ளிநின்ற கண்ணனிடம்
இப்பாட்டின் ராகம் இயம்பென்றேன். கண்ணனோ
”அப்பா இராகம் அறியேன் .” எனச்
சொன்னான்
“யானறியேன்” என்றேன். ”அதனாலே தானப்பா
நானறியேன்” என்று நமுட்டுச் சிரிப்புதிர்த்தான்
இன்னோர்நாள்
என்மனைவி யோடெனக்கு ஏதோவோர் சச்சரவு.
என்ன நினைத்தோ இவள் அழுதாள். அந்நேரம்
தேவ இசை மாடிச் சின்ன அறையிருந்து
மேவியெங்கள் ஆவியுள்ளும் மின்னல் அடித்ததுவால்
புல்லாங்குழலும் புனர்ஜென்மம் பெற்றதுபோல்
எல்லாச் சுகமும் எடுத்துக் கொடுத்ததுவோ?
பண்களிலே இந்தப் பரவசமா? எங்களது
கண்களிலே ஓடுவது கண்ணீரா? வந்ததுவும்
விண்ணிசையா? தேவ விருந்திசையா? ஓர்நிமிடம்
மண்ணை மறந்தோம், வருத்தமெல் லாம் மறந்தோம்
நாதம் உயிர்த்து , நயந்து வெளிதுழவி
மோதி முகிழ்த்து, முகடுகளின் மேல்தாவி
அண்டக் கருவின் அசைவில் பதம்பிடித்துக்
கொண்டு, கலந்து குழைந்து கனிவாகி
பண்ணாய்ச் சுரமாய், பரிவாய்ப் பிரிவாகி
ஓர்யுகத்தை இங்கே ஒருநொடியில் காட்டுகிற
ஓர்யுகத்தை இங்கே ஒருநொடியில் காட்டுகிற
பேர்வித்தை செய்து பிணித்துப் புதுக்கியதோ?
அப்பப்பா அந்த அதிசயத்தை என்சொல்ல?
இப்போ நினைத்தாலும் என்னுள் இனிக்கிறது.
இந்தக் கவியரங்கிற்(கு) என்னோடு வாவென்றேன்
தந்தையே , பின்னோர் தடவை வருகின்றேன்
அன்னை கொடுத்த அரியபணி ஒன்றுளது
இன்றைக் கதற்காக ஏகுகிறேன் என்றுரைத்தான்
கண்ணனை உங்களுக்குக் காட்டுகிறேன் நிச்சயமாய்
பண்ணுக்குள் தேடப் படவா அகப்படுவான்
தேடுவோம் தேடுவோம் தேடித் திரிகையிலே
கூட இருப்பான் குறிப்பில் அறிந்திடுக!.
No comments:
Post a Comment