Friday, May 10, 2019

சைதை சிவசுப்ரமணியன் நான்மணிமாலை


சைதை சிவசுப்ரமணியன் நான்மணிமாலை
                       
காப்பு

சேவல்  கொடிதாங்கிச்  செங்குந்தக்  கோட்டத்தில்
காவல் புரிகின்ற கந்தனை- ஆவலொடு
நெஞ்சு புனையும் நிவேதனத் தால்தொழவே
அஞ்சு கரனே அருள்.
                        நூல்
                       
வெண்பா

உண்மைப் பொருளே, உளம்நாடி வந்தோர்க்குத்
திண்மை அருளும் சிவபாலா- தண்மை
விழிக்குள்ளே தேக்கிடும் வேலவா, சொல்லும்
மொழிக்குள்ளே நீயே முதல்.                                            1

கட்டளைக் கலித்துறை

முதல்நீ, முறைநீ, மொழிநீ, முழுதின் முழுமையும்நீ
இதம்நீ,எழில்நீ, இசைநீ, இனிமை இறையவன்நீ
சதம்நீ, ஜகம்நீ, தயைநீ, தருமச் சரித்திரம்நீ
பதம்நீ, பரம்நீ, பதிநீ, பலம்நீ பரம்பொருளே!                               2

அறுசீர் விருத்தம்

பொருளாய் எனையும் ஏற்றிடுவாய்,
        புனிதா, கந்தா, புண்ணியனே
வெருளும் உள்ளத் துள்ளுக்குள்
        வீசும் அலையைச் சரியாக்கி
அருளாம் வித்தை ஊன்றிடுவாய்
        ஆக்கப் பயிரை ஊக்கிடுவாய்
தெருளே, ஞானச் சித்திரமே,
        செங்குந் தக்கோட் டத்தரசே!                                     3


அகவல்

அரசன் ஆனாய், ஆண்டி ஆனாய்,
அருமறை சொல்லும் ஆசான் ஆனாய்
பொருள்மொழி கூறும் புறவக வாழ்விற்கு
ஒருமக னாக உன்னை அமைத்தாய்
மருள்மட மானாம் வள்ளி மணாளா
புரந்தரன் பூவை பொருந்திடு நாதா
நிரந்தரம் சிறந்தஉன் நிறைமலர்ப் பாதம்
பரவிடும் பாடல் பக்குவம் தன்னைத்
தருகவே சாதனை சமைக்கும்
திருநகர் சைதைச் சிவசுப்ர மணியே!                                     4

வெண்பா!

மணியே, பரமன் மகவே, தமிழின்
அணியே, அடியார் அகமேதுணியும்
செயலே, செயலின் சிறப்பே, நடமே
இயலே, அருள்வாய் இசை!                                              5

கட்டளைக் கலித்துறை

இசைகொண்ட வாழ்வும், இறைகொண்ட வாக்கும் இளகுமருட்
பசைகொண்ட நெஞ்சும், பலம்கொண்ட தேகமும் பக்குவமும்
திசைகொண்ட வெற்றிச் சிறப்பும் திருவும் சிறுமையிலா
விசைகொண்ட நோக்கும் விழைந்தேன் அருள்க விசாகையனே!   6

அறுசீர் விருத்தம்

விசாகன், முருகன் வேலனென
        விதமாம் உன்றன் பேர்பாடி
உசாவும் உள்ளத் துன்னடியார்
      ஒவ்வொன் றுள்ளும் உனைக்காண்பார்
தசாவ தாரத் திருமாலின்
      தகைசால் மருகா, பொறிகளெனும்
பிசாசுப் பிடியில் சிக்காமல்
      பிறவா நெறியே அருள்வாயே!                                     7





அகவல்

அருள்வாய் என்றே அருஞ்சிறை தன்னில்
உருகிச் ஜயந்தன் உன்னருள் வேண்ட
கனவில் தோன்றிக் காட்சி கொடுத்தாய்
தனையே தின்னத் தகிக்கும் வலியால்
பகழிக் கூத்தன் பரிபவம் எய்த
அகற்றிக் காத்தாய், அருந்தமிழ் கொண்டாய்
சொல்வா ராத தொண்டை வலியால்
அல்லல் எய்தி அ.சீ. ராவும்
செந்தில் வந்து தேனை உண்ண
அந்த வலியும் அற்றிடச் செய்தாய்
வயிற்று வலியால், ஐயா றப்பன்
துயருற் றுழன்று தொழுதுனை வேண்டி
சுப்பிர மணியப் பதிகம் பாட
அப்பொழு தேநீ அவர் வலி தீர்த்தாய்
செப்பும் கருணைத் திறத்தில்
அய்யா, உன்றன் அருட்கிணை இலையே!                                8

வெண்பா

இலதாய் உளதாய் இதமாய் விதமாய்
பலவாய்ச் சிலவாய்ப் பதமாய்- நிலையாய்
அழகாய் அமுதாய் அமரும் முருகைத்
தொழுதால் வருமோ துயர்?                                            9               

கட்டளைக் கலித்துறை

துயர்தந்த சூரர்க்குத் தூயவன் நின்னைச் சுமந்துவரும்
உயர்நிலை தந்தாய் உனது கொடியாய் உயர்வளித்தாய்
உயிரிந்தத் தோலாம் உடுக்கையைக் கீழே உதறுகையில்
அயர்வினைப் போக்க அணிமயில் ஊர்வாய் அறுமுகனே!         10

அறுசீர் விருத்தம்

அறுமு கத்தான், ஞானத்தை
     அருள்மு கத்தான்,  தீவினைகள்
அறுமு கத்தான் எல்லோரும்
        அணுகும் முகத்தான், ஆறுதலைப்
பெறுமு கத்தான் பக்தரெலாம்
        பெரிதும் போற்றும் பேராளன்
குறமா வள்ளி பயில்மார்பன்
        குழந்தை வேலன் வாழியவே!                           11

அகவல்

வாழிய புலவ, வந்து பெருநலம்
சூழினும் நம்குலச் சுடர்புகழ் பற்றிப்
புவிவாழ் அளவும் போற்றிடும் வண்ணம்
கவிநூல் ஒன்றைக் கட்டிட வேண்டும்
கூத்தரே, எங்கள் குறைகளை வீரே
யாத்தருள் செய்க அருள்நூல்என்றே
தங்குலக் கவியிடம் தமிழ்நூல் வேண்ட
ஒவ்வொரு கவிக்கும் ஒருதலை வேண்டும்
அவ்விதம் தந்தால் யாம்கவி செய்வோம்
என்றே ஒட்டக் கூத்தர்  இயம்ப
நன்றென அக்கவி நவின்றிடு முன்பே
வந்தவர் எல்லாம் வாளை உருவி
தந்தம் தலையைத் தானே வெட்டிட
குன்றெனத் தலைமலை குவிந்து விட்டது
இன்தமிழ்ப் பாவால் ஈட்டி எழுபது
என்னும் நூலை இயற்றி வாணியைத்
தன்னின மக்கள் தம்முயிர் முன்போல்
பெற்றிட வேண்டப், பெரிதும் மகிழ்ந்து
நற்றவ வாணி நல்லருள் செய்தாள்
செந்தமிழ் பெற்ற செங்குந் தர்வழி
வந்தவர் கூடி வளார்தமிழ் முருகன்
கோயிலைத் திருத்திக் கும்பாபிஷேகம்
வாயுள யாரும் மகிழ்ந்து போற்றிடும்
வகையிற் செய்து வரலாறு கொண்ட
தகைசால் கோயில் சாரும் முருகா
தமிழை விரும்பும் சண்முகா,
எமையும் காக்க இன்னருள் செய்தே!                                     12                               

வெண்பா

செய்தேன் எனவெண்ணிச் சிந்தைச் சிறுபுள்ளை
எய்தேன், குறிப்பை இழந்துவிட்டேன். – செய்கை
அனைத்தும் முருகனால் ஆவ தெனவே
நினைத்தலே உண்மை நெறி.                                            13


கட்டளைக் கலித்துறை

நெறிகொண்ட நெஞ்சின் நினைவே, நிறைதரும் நிம்மதியே
குறிகொண்ட கொள்கைக் கொடுமுடி கூட்டும் குளிர்நிலவே
செறிவுண்ட கோலமும் சேவலும் தோகையும் சேவடியும்
அறிவுண்ட கண்களும் அஞ்சலென் றேவரும் ஆனந்தமே!         14

அறுசீர் விருத்தம்

ஆனந் தத்தின் உருவம் நீ
        அற்பு த்த்தின் சிகரம்நீ
ஞானம் நல்கும் நாதன்நீ
        நமசி வாயன் பாலன்நீ
கானக் குறவர் தேவன்நீ
        கந்தன் வேலன் கடம்பன்நீ
வானம் தழுவும் அலைச்செந்தில்
        வதியும் முருகா, யாவும்நீ!                                       15

அகவல்

நீல வானும் நெளியும் கடலும்
கோல முகிலும் குழந்தை முகமும்
காலைக் கதிரும், கமலச் சிரிப்பும்
மாலை வானம் வரையும் படமும்
மண்ணின் நிறமும் வளரும் பயிரும்
குஞ்சின் வாயில் குழைவாய் ஊட்டும்
விஞ்சைப் பறவை விரிக்கும் எழிலும்
கன்றை நக்கும் கறவைப் பசுவும்
உன்றன் அழகின் ஒவ்வொரு சாயல்
அழகா, குமரா, அமரா, முருகா
மழுவைச் சுமந்த மாதே வர்க்கு
வேதம் சொன்ன வித்தகா
போதம் அருள்க போற்றினேன் பதமே!                           16

வெண்பா!

பதப்படுத் தாத பரிசை உடையேன்
இதப்படுத் தாததும் ஏனோ- மதப்பிடி
என்னும் வலைக்குள் இடருரா வண்ணமே
இன்னருள் செய்க இனிது.                                               17

கட்டளைக் கலித்துறை

இனியவா, எங்கள் இறைவா, இமையோர் எழில்முதல்வா
கனியவா, ஓதற் கரியவா அன்பிற் கணுகியவா
பனிமலர்க் குன்றின் பசுமை வனத்திடைப் பைங்கிளியைத்
தனியவ னாகத் தமிழ்க்கள வாடிய சற்குருவே!                   18

அறுசீர் விருத்தம்

குருவே, குமர குருபரனாம்
       குழந்தை பேச வைத்தவனே
அருண கிரியாம் அடியவருக்கு
       அநுபூ தியினைத் தந்தவனே!
உருகிக் கண்ணீர் விழிசிந்தி
       ஊமை யாகக் கீரனவன்
உரையை மெச்சி உலகறியும்
        உயர்வைத் தந்தாய் வடிவேலா!                         19

அகவல்

வேலா, சீலா, விண்ணவர் தலைவா
பாலா, சங்கப் பாடற் புலவா
செந்தில் குமரா, திருப்பரங் குன்றில்
இந்திரன் மகளை எழில்மணம் கொண்டவா
பந்து பந்தாய்ப் படர்மலைக் குன்றில்
மந்தை மந்தையாய் மஞ்சுகள் மேயப்
பாயும் அருவிப் பழமுதிர்ச்சோலையில்
தோயும் அழகுச் சுக வாரிதியே!
தந்தைக்கு வேத மந்திரம் சொன்ன
சுந்தர வாய்ச்சொல் சுவாமிநாதா
ஆவினன் குடியில் அடிவா ரத்தில்
மேவும் குழந்தை வேலவா, பழநி
ஆண்டி, தணிகை ஐயா, போரூர்
ஆண்டவா, சரவணா, அறுமுகா, குருபரா
மருத மலைவாழ் மன்னவா, வயலூர்
முருகா, செங்கோட்டு முதல்வா, சைதை
சிவசுப்ர மணியா, தேவா
நவநிதி யம்தரு நாதா காக்கவே!                                 20



வெண்பா!

காக்கும் உனது கழனிணைகள், ஞானவொளி
தேக்கும் உனது திருவதனம்- வாக்கில்
புறப்படும் சொல்லில் பொருளமுதே , நீயே
பெறப்படும் நல்லருட் பேறு                                                      21

கட்டளைக் கலித்துறை

பேறு பெறவே பிறந்தாய், மனிதா, பெரும்பொருளைத்
தேறும் அறிவும் திறமும் அடைந்தும் தெரிந்திலையோ
ஆறு முகமாய் அடைக்கலம் நல்கும் அருள்முருகன்
ஏறு மயிலில் எழிலாய் வருவான் இயல்பிதுவே!                         22

அறுசீர் விருத்தம்

இதுவே கந்தன் திருக்கோவில்
        இதுவே இராஜ கோபுரமாம்
இதுவே அடியார் பாடலெலாம்
        எழுதி வைத்த சுவரேடாம்
இதுவே கவிஞர் பாரதியார்
         ஏத்தும் முருகன் பாட்டமுதம்
இதுவே இதுவே இதுவேதான்
         எழிலார் சைதை நல்லிதயம்.                                   23

அகவல்

இதய தேவன் வருவான் என்று
கதவைத் திறந்து கருத்தில் நிலைத்தே
உதயம் மட்டும் உறங்கா திருங்கள்
விதமாய் ஒலிகள் வெளியில் திரியும்
காற்று மெல்லக் கவிதை பாடும்
ஆற்றுப் புனலின் அரவம் கேட்கும்
குழலும் யாழும் குழையும், எங்கோ
சுழலும் பொறியின் தொழிலிசை மீறும்
மணிப்பொறி ஒலிக்கும், வகையாய்க் குறித்த
கணப்படி இதயம் காலம் கனிக்கும்
ஒலியாய், உருவாய், உணர்வாய், ஒளியாய்
இலையெனில் எதுவோ எதுவாய், முருகன்
வருவான், வந்து தரிசனம்
தருவான் உணர்ந்து சரணடை வீரே!                                             24

வெண்பா!

சரணம் அடையும் தகுதி தனையே
முருகா, குமரா முறையாய்- அருள்வாய்
பெருகும் எனது பிழைகள் பொறுத்துக்
குருவாய் வரவே குறி                                                           25

கட்டளைக் கலித்துறை

குறியேன், குகனெனக் கூறேன், பொருளது கொள்கையெனச்
சிறியேன் அலைந்தேன், திரிந்தேன், பிரிதொரு சிந்தையிலேன்
வறியேன், அகத்துள் வதியும் உனதருள் மாண்பதனை
அறியேன், இதுபோ தறிந்தேன், இனியெவர்க் கஞ்சுவதே!                  26

அறுசீர் விருத்தம்

அஞ்சல் என்பான், உன்வரவை அறிவேன் என்பான், அய்யாவுன்
தஞ்சம் எனவே யாவுமவன் தாளில் வைத்தால் காத்திடுவான்
செஞ்சொல் முருகன் மயிலேறித் தேவி இருவர் புடைசூழ
விஞ்சைக் காட்சி தந்திடுவான், மேலோர் தெய்வ வாக்கிதுவே!            27

அகவல்

வாக்கும் மெய்யும் மனமும் அழகாய்ப்
பூக்கும் முருகன் புகழே போற்றுக
செயலும் பயனும் சேயன் துணையால்
இயலுவ தென்றே எண்ணித் துணிக
நடந்ததும் அவனே, நடப்பதும் அவனே
நடக்கப் போகும் நாளையும் அவனே!
தேளின் கொடுக்கும் சிங்க மிடுக்கும்
வாளின் கூர்மை வடிவும் வீச்சும்
யாவும் அவனே, யாவும் அவனே
நிகழ்த்துவ தவனெனும் நெறியால்
இகழ்ச்சியும் உயர்ச்சியும் இரண்டிலை யாமே!                            28

வெண்பா!

ஆமென்று பேர்பாடி யார்யாரோ பின்சென்று
நாமென்றும் வாடி நலிவதுவோ- ஓமென்ற
வேதப் பொருள்செய்த வித்தகன் பேர்பாடும்
போதமே என்றும் புகழ்                                                  29

கட்டளைக் கலித்துறை

புகழ்கிறேன் நீயெழில் புன்னகை பூத்துப் புரட்டுகிறாய்
இகழ்கிறேன், கந்தனே, இன்னும் சிரிக்கிறாய், ஏதறியேன்
இகழும் புகழும் எனதுளே நீயே இசைப்பதனால்
நிகழும் அனைத்தையும் நின்பரம் ஆக்குதல் நிம்மதியே!                  30

அறுசீர் விருத்தம்

மதியே, மதியின் ஒளியமுதே
       மலரே, மணமே மாருதமே
நிதியே, நினைவே, நிறையெழிலே
       நெஞ்சில் நிலவும்  நித்தியமே
சுதியே, சுகமே, சுந்தரமே
       சுரபூ பதியே, சொற்பொருளே
கதியே எனவுன் கழல்பணிந்தேன்
       கருதிக் காத்தல் கடமையதே!                                             31

அகவல்

கடமை என்பது கடவுள் தந்த
உடைமை தன்னை உயர்த்துக் காத்தல்
பெற்ற பரிசின் பெருமை தூக்கி
உற்ற முறையில் உலகுக் களித்தல்
என்ன பரிசை இறைவன் அளித்தான்
என்றே அறியா திருப்பவர் பலபேர்
பரிசின் சாயல் பார்த்த பின்னும்
சரிவர வாழ்க்கைச் சாதனையாக
தரமுய லாது சரிபவர் பலபேர்.
முருகா உன்பால் முறையிடு கின்றேன்
என்னை உலகில் இறக்கிய காரணம்
என்ன என்பதை இன்னும் தெளிவாய்
எடுத்துச் சொல்லி என்பால் நீயும்
கொடுத்தது சிறக்கும் குணம்தரு வாயே!                                 32

வெண்பா!

தருவானாய், வேத உருவானாய், ஞான
குருவானாய், அள்ளிக் கொடுக்கும்திருவானாய்
ஞால வரவானாய், நாலும் அறியாத
பாலன் எனையும் கண் பார்                                                     33

கட்டளைக் கலித்துறை

பாரென்றேன் நீயென்னைப் பாரென்றாய், தேராப் பதைபதைப்பால்
பேரென்றேன், நின்பேரே பேரென்றாய், இன்னுமென் பேதைமையால்
யாரென்றேன், நீயென்றாய், யானும் அறியா அறிவதனால்
தீரென்றேன் சிந்தை தெளிவித்தாய்  அத்வைத சித்தாந்தமே!             34

அறுசீர் விருத்தம்

சித்தாந் தங்கள் ஆயிரமாம்     
      சேரும் வழிகள் ஆயிரமாம்
அத்த னைக்கும் முடிவாக
      ஐயா நீயே நிற்கின்றாய்
கத்தும் உள்ளப் பறவையதன்
      கதியை விதிக்கும் கந்தாயிப்
பித்தன் உன்றன் அருள்ஞானப்
      பேற்றை எய்தப் பெறுவேனோ?                                    35

அகவல்

பெறுதற் கரிய மானிடப் பிறவியை
அறுமுக தேவா அளித்தாய் நன்று
கிடைத்த பதவியைக் கீழ்மைப் படுத்தா
திடத்தைத் தந்து தேவ னாக்கி
உன்னுள் மிதக்கும் ஒவ்வொரு கோடி
இன்னும் கோடி கோடி கோடி
எண்ணுதற் கரியதை எண்ணத் தொடங்கினேன்
எண்ணி எண்ணி என்று நிறையுமோ
உன்னுள் உன்னுள் உன்னுள்
உன்னுள் உறையும் உயர்வுகள் பூக்கவே!                                 36

வெண்பா!

பூக்காத மொட்டில் பொலிவில்லை, பக்திநெறி
தேக்காத நெஞ்சில் தெளிவில்லை- காக்காத
நாவால் நலமில்லை, நாதன் புகழ்பாடாப்
பாவாலே ஏது பயன்?                                                            37

கட்டளைக் கலித்துறை

பயனுண்டு, நல்ல படிப்புண்டு, தொண்டர் பழக்கமுண்டு
நயனுண்டு, காட்சி நலமுண்டு, வேத நலமறியா
அயனன்று வாட அடுஞ்சிறை சேர்த்த அறுமுகனின்
நயனங்கள் ஈராறும் நல்லடி யும்போற்றி நாம்தொழவே!                           38

அறுசீர் விருத்தம்

தொழுது போற்றும் அடியவரின்
        தொல்லை போக்கும் வடிவேலா
கழுகு மலையில் உறைபவனே,
        கந்தா, முருகா, கதிர்காமா
எழுதும் சொல்லில் இசைபவனே
        எண்ணி எண்ணி நீர்மல்கி
அழுதால் ஓடி வாராயோ
        ஐயா, சைதைப் பதி வாழ்வே!                                                    39

அகவல்

வாழுங் கணங்கள் வகையாய் நிறைக
சூழும் துயர்கள் தொலைந்து மறைக
யாரும் போற்றும் அற்புத மாகப்
பாரத நாடு பலம்பெற் றோங்குக!
அச்சத் தாலே அடிக்கடி மாயும்
துச்ச நிலைமை தொலைக, செய்யும்
முயற்சிகள் யாவும் முற்றுப் பெறுக
அயர்வுகள் யாவும் அற்றுப் போக
உழைப்புச் சுடரில் உண்மை ஒளிர்க!
தழைக்கும் வகையில் சாதனை நிறைக
பொருள்களைப் பதுக்கும் புத்தி ஒழிக
திருவும் கலையும் செழிக்க, எங்கும்
நெஞ்சத் ததிர்வுகள் நேர்பட ஒன்றுக!
வஞ்சமும் சூதும் வாழ்விடம் இன்றி
எங்கோ எங்கோ எங்கோ மறைக!
தங்கும் ஆத்ம சாந்தி நிறைக
உறுதி நெஞ்சில் உயர்க ,
அறுமுக தேவன் அருள்வான் உண்மையே!                                       40

நூற்பயன்

செங்குந்தக் கோட்டச் சிவசுப்ர மண்யனையே
பொங்குமிப் பாவாலே போற்றிசெயதங்கு புகழ்
நல்வளம் கல்வி, நலியாத பேராற்றல்
சொல்வளம் சேரும் சுகம்


No comments:

Post a Comment