வைகிகியில் மணற்கோயில்
காலையில் குளிப்ப தற்குக்
கடற்கரை சென்ற போது
பாலகன் விதாத்தைப் பார்த்துப்
'பக்குவ மாக நீயும்
காலிலே மணலைக் கூட்டி
கட்டிடு வீட்டை என்றோம்
காலனை உதைத்த அந்தக்
கடவுளைக் கட்டி விட்டான்
அங்கொரு வட்ட மாக
ஆவுடை யாரைக் கட்டி
லிங்கமும் நடுவி ருத்தி
நேரெதிர் நந்தி வைத்தான்
பொங்கிடும் நதிக டக்கப்
பொருந்தவோர் பாலம் போட்டான்
பங்கமில் கோயி லுக்குள்
பரமனும் இறங்கி விட்டான்
கட்டிய கோயில் வந்த
கடவுளைப் பூஜை செய்து
கிட்டிய மலரைப் போட்டு
கேண்மையாய்ப் பாடல் பாடி
எட்டியே வந்தி ருக்கும்
இறைவனைத் தியாணம் பண்ணி
நிட்டையில் இருப்ப தைத்தான்
நேருரக் காணு கின்றோம்
பூசலார் மனத்தி நுள்ளே
பொருந்திய கோயி லுக்குள்
ஈசனார் வந்தி றங்கி
இன்னருள் செய்த தைப்போல்
நேசமாய் மணலைக் கட்டி
நிகழ்த்திய கோயி லுக்குள்
பூசைய ஏற்றுக் கொள்ளப்
புண்ணியன் வந்தி ருப்பான்
வானமே கூரை யாக
மறிகடல் பிரண வத்தைக்
கானமே பாட, தென்றல்
காற்றதைச் சுமந்து சேர்க்க
மேனிலை நெருப்புக் கோளம்
விண்ணிலே தீபம் காட்ட
ஆனநற் பஞ்ச பூத
ஆலயம் அரனார் கோயில்
தினந்தினம் அழித்த ழித்துச்
செய்திடும் அந்தி யைப்போல்
புனைந்திடும் இந்தக் கோயில்
பொன்றினும் பொன்றா தாகும்
நினைந்திடும் உள்ளத் துள்ளும்
நிழற்படத் துள்ளும் நிற்கும்
கனிந்ததோர் அந்த நாளைக்
கண்முனே நிறுத்தி வைக்கும்
வாழிய மணலில் கோயில்
வடித்தயிச் சிறுவன், நெஞ்சில்
வாழிய கோயி லுக்குள்
வந்தருள் செய்த தேவன்
வாழிய ஒருமைப் பாடு
வாழிய மனித நேயம்
வாழிய கவிதை மாந்தி
மகிழ்ந்திடும் அன்ப ரெல்லாம்!
திருச்சிற்றம்பலம்!
* வைகிகி என்பது ஹவாய்த்தீவுகளின் தலைநகரம் ஹோனலூலுவில் உள்ள மிக அழகிய கடற்கரை
No comments:
Post a Comment