Friday, May 10, 2019

நங்கைநல்லூர் இராஜரஜேச்வரி பதிகம்


நங்கைநல்லூர்  ராஜராஜேஸ்வரி பதிகம்

கட்டளைக் கலித்துறை
பொங்கும் அலைகடல் மேலுயிர் ஏற்றும் புது நிலவே
எங்கும் நிறைந்தெமைக் காத்திட வேயெழு பூரணமே
துங்கம் வளர்கெனச் ஜோதிப் பதங்கள் தொழுதிடுவேன்
நங்கைநல்லூர் வளர் ராஜராஜேஸ்வரி நாயகியே!

நாயகன் போற்றிடும் நாயகம் ஆகிடும் நல்லமுதே
தாயகம் கொண்டெமைத் தாங்கிப் புரந்திடும் தண்ணளியே
சீயென யாரும் சினந்திடல் செய்யாச் சிறப்பருளே
காயெனும் நெஞ்சம் கனியென மாறக் கருதுவையே!

கருதிடும் யாவினும் காண்கிற தெய்வக் கனியமுதே
பெருகிடும் அன்புப் பிழம்பாய் அணைக்கும் பெருஞ்திறலே
உருகிடும் உள்ளத் துறைந்திடும் ஞானத்(து) உயர்பொருளே
கருத்திடை ஊன்றும்  கவிதை களித்திடும் கற்பகமே!

கற்பகச் செந்தமிழ்க் காவிடைக் காவிய நாயகியே
நிற்பதும்  ஏதோ நடப்பதும்  என்ற நிலையிலதாய்
வெற்றி எனதடி வேண்டித் தொடரும் விதமருள்வாய்
அற்புதம் யாவினும் அற்புத மாகிடும் அன்னையளே!

அன்னையே , தேவி, அருள்வடி வாகிடும் ஆரமுதே
கன்னல் மொழியே கனியே அறிவே கவிநயமே
என்னயான் வேண்டுவன் என்பது நீயும் அறிந்திலையோ
சொன்னதும் சொல்ல மறந்ததும் யாவும் உன் சுந்தரமே!

சுந்தரி, ஞானக் கடலே, துலங்கிடும் சொற்பொருளே
அந்திவான் வீசிடும் அற்புதச் செக்கரின் ஆனந்தமே
மந்திரம் தந்திரம் யாவையும் உன்முன் வசமிழக்க
முந்திடும் அன்பின் மொழியில் இறங்கிடும் முன்னவளே!

முன்னெனும் முன்னுக்கும் முன்னாகி நிற்கின்ற மொய்குழலே
மென்மையில் மென்மையும் திண்மையில் திண்மையும் வீசுகிறாய்
தன்னையே போற்றித் தவித்திடும் என்மனம் சந்ததமும்
உன்னையே போற்றி உயர்ந்திடும் உண்மை உயர்வருளே!

அருள்வேண்டி அம்மா நினைச் சார்ந்தேன் அன்புடன் ஆதரிப்பாய்
உருளுமிவ் வாழ்வில் ஒருபயன் இன்றி ஒடுங்குவதோ?
தருவதும் தாரா திருப்பதும் தாயுன் தனிக்கருணை
கருதியென் நெஞ்சில் கனிவாய் அமர்தல் கடமையதே!

கடமைகள் காரணம் , காரியம் காட்சிகள் கற்பனையும்
உடைமையாய்க் கொண்டிடும் அன்னாய் உனது விரலசைவில்
நடந்திடும் வாழ்க்கையில் நல்லன தீயன சக்கரமோ
தடைகளை நீக்குக தக்கதைக் காட்டும் தயவுடனே!

உடனேகி வாரா ஒழிபொருள் பற்றும் உறுதியினத்
திடமெனக் கொண்டு தினந்தினம் நானும் திரிவதுவோ
நடமிடும் நாவில் ஜதியிடும் ஞான நளிர்மணியே
புடமிடு பொன்னாய்ப் புகழ்வர நின்னருள் பொங்குகவே!

No comments:

Post a Comment