Sunday, May 12, 2019

வாராகி பள்ளு


வாராகி பள்ளு

ஓடிவரும் தேர்ச்சத்தம் காதில்கேட்குதே -அதன்
      உள்ளமர்ந்த வாராகி பேரொலிக்குதே
கூடவரும் யோகினிகள் ஆட்டம் காண்குதே- எதோ
      கொண்டாட்டம் போட்டுவரும் வேட்டு மீறுதே
பாடிவரும் தேவதைகள் நாதம் கேட்குதே – வரும்
      பாதையெல்லாம் ஒளிவெள்ளம் பளபளக்குதே
நாடிவரும் படைதிரண்டே அணிவகுக்குதே-இது
      நாடகமா நாட்டியமா
, எனை மயக்குதே!

கோடையிடி போலொலியும் குலைநடுக்குதே- களம்
      கூத்தாடும் பேய்க்கூட்டம் கெக்கலிக்குதே
சாடிவரும் எதிரியணி துடிதுடிக்குதே- கிரி
      சக்கரத்தின் தோற்றமெங்கும் தடதடக்குதே
கூடுமலை மீதெகிறி ரதம் கடக்குதே – அதைக்
      கொடியவர்கள் கூட்டம் கண்டு கிடுகிடுக்குதே!
பாடிவரும் பக்தர்களின் படை நடக்குதே – அன்னை
      பரவசமாய் முறுவலிக்க அருள்கிடைக்குதே!



No comments:

Post a Comment