இணையில்லா மந்திரம்
அரக்கனோர் அருணன் என்பான் அன்றொரு காலம் தேவர்
உருக்குலைந் தோடும் வண்ணம் உறுதுயர் செய்த போது
வருத்தமும் போக்க எண்ணி வானவர் குருவும் அந்த
இரக்கமில் அருணன் இல்லம் ஏகியே பணிந்து நின்றார்.
எதிரிநீர் வந்த தென்ன? என்றவன்
கேட்கச் சொன்னார்
"கதிரதன் ஜோதி யாகும் காயத்ரி மந்திரத்தைத்
துதிசெயும் நீயும் நானும் சொந்தமே அன்றோ?” என்றார்.
மதியிலான்'மந்தி ரத்தை மறுபடி
சொல்லேன்' என்றான்
காயத்ரி மந்தி ரத்தைக் கைவிட்ட தாலே , முன்னாள்
மேயதோர் வலிமை போக விண்ணவர் வலிமை ஓங்க
தாயவள் சக்தி தேவி தனியொரு வண்டாய் மாறி
தீயனைக் கொன்றாள், வானில் தேவர்கள் பூச்சொரிந்தார்.
தீயவர் என்ற போதும் ஜெபித்தவர் தம்மைக் காக்கும்
நேயமாம் காயத் ரீயை நெஞ்சிடைக் கொண்டே உள்ளத்
தூயராய் வாழ்ந்தால், வாழ்வில் தொட்டது துலங்கும், ஞாலத்து
ஆயநற் கலைக ளெல்லாம் அன்புடன் சித்தி யாகும்
காயத்ரீ என்றால் என்ன? காரிய சித்தி யாக்கும்
தாயத்தா? இல்லை, இல்லை சத்தியம்,
வேத சாரம்
நேயத்தில் வான மத்தி நின்றிடும் ஜோதி வெள்ளம்
மாயத்தை விஞ்சும் மூல மந்திரம் பரப்பிரம்மம்
முத்துவைரம் நீலம்பொன் பவளமென மேவி
முகமைந்து கொண்டவளாம் காயத்ரி தேவி
மெத்தவிழி மூவைந்து முகமைந்தில் உண்டு
விரைசக்ரம் சங்கமுடன் தாமரை யிரண்டு
முத்திரையாய் அபயமொடு நல்வரவு தாங்கி
முந்துகதை
சாட்டையுடன் அங்குசமும்
வாங்கி
உத்தமமாய் மதுக்கிண்ணம் கரம்கொண்ட அன்னை
ஒளித்திங்கள் முடியுடையாள் ஒண்பாதம் போற்றி
வானத்தில் ஒளியாக நிற்கின்ற வெள்ளம்
மனமதுவோ அவ்வொளியை வாங்குகிற பள்ளம்
கானத்தில் எழுத்தாகி மந்திரமாய் ஆகும்
கருத்தினிலே
அதையேற்கும் ஜீவனுயர் வாகும்
மோனத்தில் தியானத்தில் மூழ்குகிற போது
மூண்டுவரும்
அற்புதத்திற் கீடிணையும் ஏது?
ஈனத்தை அடையாமல் அறிவதனைத் தூண்டி
ஏற்றமுறத்
தேவியினைப் போற்றுகிறோம் வேண்டி.
தெளிவுடன் அறிவைத் தூண்டும் சீர்மைய தெதுவோ அந்த
ஒளியினைத் தியானிப் போமென்று ஓதிடும் மந்தி ரத்தை
வெளியினில் இருந்து வேத விளக்கமாய்ப் பிழிவாய் வந்த
அளியினைப் போற்று கின்றோம் அறிவொளி பெருகு மாறே!
காயத்ரி வேத சாரம் காயத்ரி வாழ்க்கை மார்க்கம்
காயத்ரி தத்து வத்தைக் கடைந்த பின் வந்த வித்து
காயத்ரி தெய்வ வாக்கு கடவுளின் சந்நிதானம்
காயத்ரி மூன்று தேகக் கட்டதன் சொரூப மாகும்
காலையில் அன்ன மேறி காயத்ரி நாமம் தாங்கி
சீலமாம் ரிக்கைச் சொல்லி திகழ்நறு மாலை ஏந்தி
கோலமாக் கதிரின் மத்தி கொண்டதேர் இருக்கை யாக்கி
வாலையாய்ச் சிவந்த மேனி வனப்புடன் வருவாள் போற்றி!
உச்சியில் சாவித் ரீயாய் ஒருமலர்ப் பருவ மாகி
கச்சிதச் சூலம் ஏந்திக் கனன்றிடும் கதிரின் மத்தி
மெச்சிடும் வகையமர்ந்து வெண்ணிறக் காளை யேறி
இச்சையாய் யஜுர் வேதத்தை இசைத்திடும் தேவி போற்றி!
அந்தியில் முதிய ளாகி அஞ்சன வண்ண மாகி
சந்தமாய், சொல்லாய் நிற்கும் சரஸ்வதி என்னும் பேரில்
முந்திடும் சாம கானம் மொழிந்துபின் கருடன் ஏறி
வந்திடும் ஞான அன்னை மலரடி போற்றி போற்றி!
உள்ளொளி
யாகி, ஆத்ம ஒண்சுடர் ஆகும் தெய்வம்
தெள்ளிய வானில் பூத்த தேவனின் மத்தி யாகி
வெள்ளமாய் ஜோதி கூட்டும் வியன்மறைத் தெய்வம்,
ஞானக்
கள்ளிலே மிதப்பார் தெய்வம் காயத்ரி பாதம் போற்றி!
சொல்லெலாம் கடந்த சொல்லாய் ஜோதியாய், மக்கள் நெஞ்சக்
கல்லெலாம் கனியச் செய்யும் கனலியை, காயத்
ரீயை
எல்லையும் இன்றி நெஞ்ச எல்லைக்குள் அமர்ந்திருக்கும்
வல்லியை, மறையின் உச்ச மஹிமையைப்
போற்று கின்றேன்!
No comments:
Post a Comment