Saturday, May 11, 2019

அது போதும்


அது போதும்

ஓடும் நதியின் மேற்காக
     ஒதுங்கும் அடிவான் என்றெண்ணி
ஓடும் நதியைக் கடக்கின்ற
     ஒன்றும் அறியாச் சிறுவனென
ஓடும் நதியைக் கடந்திடவே
     ஒருகால் எடுத்து வைக்கின்றேன்
ஓடும் நதியக் கடப்பேனோ
     ஒதுங்கும் அடிவான் அடைவேனோ?
     

எங்கோ நெடிய தொலைவினிலே
     இருக்கும் ஊற்றுப் பொய்கையென
சங்கை இன்றித் தொடர்கின்றேன்
     சரியா தவறா யாரறிவார்?
கங்கைப் புனலும் கண்டிடுமோ
கானல் நீராய் மாறிடுமோ
தங்கிச் செல்லும் பாதையிலே
     தாகம் பற்றி விழுங்கிடுமோ?

 என்ன வென்றே தேறாத
     ஏதோ என்னைத் தூண்டிவிடக்
கன்றுப் பயத்தில் ஓடுகிறேன்
     காலத் தேரில் சுற்றுகிறேன்
கன்று காளை ஆகிடுமோ
     காலத் தேரில் யான்சுற்றும்
சின்னக் கருவி சுற்றிடுமோ
     சிறிதே தலையை ஆட்டிடுமோ?

ஒருவன் என்னைத் தொடர்ந்துவர
     ஓடி ஓடிச் செல்லுகிறேன்
தெருவின் முனையில் வளைவுகளில்
     திரும்பிப் பார்த்தால் வருகின்றான்
அருகில் நெருங்கி வருவானோ
     யாரென் றறிய வழியில்லை
விரைந்து வந்து பிடிப்பானோ
     விந்தை தானோ வேதனையோ?

என்றன் பின்னே தொடர்வோனே
     இங்கோர் சேதி சொல்லுகிறேன்
என்னை நீயும் பற்றிவிடில்
     எனக்கோர் உதவி செய்வாயா?
மின்னும் இரவி விண்மீன்கள்
     விந்தை மதிசேர் கூட்டத்தில்
சின்ன ஒளிசேர் மின்மினியைச்
     சேர்த்துவிட்டால் அதுபோதும்!

No comments:

Post a Comment