ஒத்திகை
என்னையே நானெனச் சொல்கிறேன் இறைவனே
இதனைநான் சொல்வதற்கே
எனக்கொரு வடிவமும் இயக்கமும் இருக்கையும்
இயல்பென வந்ததெப்போ?
சின்னதோர் அணுவெனத் தந்தையின் உயிர்ப்பிலே
திரிந்தலைந் திருந்த போதா?
சிறுகோளப் பொறியாக தாயவள் கர்ப்பத்தில்
தேர்வரக் காத்த போதா?
சன்னமாய்த் தாக்கியே சங்கமம் ஆனதோர்
சாதனை நேர்ந்தபோதா?
தனியிரு ஜதையாக, ஜதைஜதை,
ஜதையாகத்
தன்னுருப் பெருத்த போதா?
இன்னுமோர் மாற்றமாய் கண்களும் வாயுமாய்
எழிலுருப் பெற்ற போதா?
என்னநீ சொல்கிறாய், என்னநான்
சொல்லுவேன்
எதிரொன்று சொல் தெய்வமே!
உந்தியில் ஒருகொடிப் பிணைப்பிலே தாயுடன்
உயிராகும் உறவாகவும்
ஒருகோடி, பலகோடி, சதகோடி, காலத்தின்
ஓட்டமே நிலையாகவும்
அந்தநாள் ஊழியில் ஆழியில் ஆலிலை
அறிதுயில் கொண்டவன்போல்
அன்னையின் கருப்பையில் ஆராதனை செய்தே
அருந்துயில் கொண்டபோது
உந்துமோர் அசைவினைச் செய்ததும் நான்கொலோ?
ஊகமோ, அன்றி நீயோ?
உன்வழி கேட்டுநான் செய்ததோ, அதற்குநான்
ஒத்திகை பார்த்த தெங்கே?
சந்ததம் என்னுளே சதிராடி வருகின்ற
சத்தியத் தேவ தேவா,
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே!
படிப்படியாகவே சூழ்கடல் சோலையில்
பக்குவமாகி வந்தே
பத்தொரு மாதமாய் வித்தொரு மொட்டெனப்
பாலகனாய் வளர்ந்து
திடப்படும் ஓருடல் உள்ளுமோர் உடலெனச்
சேர்ந்த்திரண் டுயிர் துடிக்க
தினந்தினம் ஆழிசூழ் உலகிலே தெப்பமாய்
சேர்கரை காலுதைக்க
உடைப்பெடு கடலுடன் உலகினைக் காணவே
உற்பவம் செய்த நேரம்
ஓலமிட்டழுததும் நான்கொலோ, ஆமெனில்
ஒத்திகை பார்த்ததெங்கே?
தடம்பதித் தென்னுள்ளே நடமிடும் நாதனே
சத்தியத் தேவ தேவா,
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே!
அன்னையின் வயிற்றிலே அடங்கிக் கிடக்கையில்
அடுபசிக் கழுததுண்டோ?
அறியாத வலியினால் துடிதுடித்திடுமுயிர்
அவதிகள் பட்டதுண்டோ?
இன்னரும் புவியிலே வந்ததும் இவையெலாம்
இறங்கிய நிலை என்னவோ?
எதிரிலே நிற்பவர் எவரெனக் கண்டிடும்
இங்கிதம் தோன்று மட்டும்
உன்னையே காட்டினை அல்லவோ, பசியினை
உணர்ந்திடும் போது மார்பில்
உறிஞ்சிடும் வகையினைச் செய்ததும் நான்கொலோ
ஒத்திகை பார்த்ததெங்கே?
தன்னரும் பதமலர் என்மனம் பதித்திடும்
சத்தியத் தேவ தேவா
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே! 4
மண்ணிலே போட்டதோர் நிலையிலே சற்றேனும்
மாறாமல் தான்கிடந்து
வானத்தை நோக்கியோர் மாயத்தில் தேவ உன்
வரவினைத் தானுணர்ந்து
கண்ணிலே துயில்கொளும் போதிலும் எதனையோ
கண்டதாய்ப் புன்னகைத்து
கலங்கிடும் நெஞ்சமும் களிகொள வைத்திடும்
கவர்ச்சிகொள் அந்தநாளில்
ஒண்புனல் ஆடிடும் தகைமையில் தரையிலே
உதைத்துத் தவழ்ந்ததெல்லாம்
உண்மையாய் என்செயல் ஆகுமோ , ஆமெனில்
ஒத்திகை பார்த்ததெங்கே?
தண்பதம் நாட்டியே என்னுளம் ஆடிடும்
சத்தியத் தேவ தேவா
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே! 5
புவியெலாம் ஒலிமயம், ஓமெனும்
நாதமே
பொழுதெலாம் கேட்டிருக்க,
புரியாத ஒலியெலாம், மாந்தர்கள்
வாயிலே
புறப்பட்டு வெளிநிறைக்க
நவையிலா சொல்லொன்று சொல்லவென் நாவிலே
நரம்புகள் துடிதுடிக்க
நடுவிலே போய்வரும் காற்றெனும் நாதனும்
நாடகம் தான்நடிக்க
உவகையில் முதன்முதல் அம்மாவென் றோசையில்
ஓங்கியே குரலெடுக்க
உணர்வாடும் நாவினை அசைத்ததும் நான்கொலோ?
ஒத்திகை பார்த்ததெங்கே?
தவறாமல் என்னுளம் சந்ததம் ஆடிடும்
சத்தியத் தேவ தேவா
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே1 6
ஊதுலையாய் மனம் உந்திடும் காற்றிலே
உள்ளொளிக் கங்கு பூக்கும்
ஒட்டிப் பிடித்ததைக் கொட்டிட எண்ணியே
உற்றசொல் நெஞ்சு கோக்கும்
ஏதெதோ வார்த்தைகள் தோதுடன் வந்துடன்
எண்ணம் தனைக் குடிக்கும்
எப்படியோ அதில் தப்பிய மிச்சமே
இங்குக் கவிவடிக்கும்
ஓதிட வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேடியே
ஒப்பனை செய்ததெப்போ?
உண்மையில் வார்த்ததும் நான்கொலோ, ஆமெனில்
ஒத்திகை பார்த்ததெப்போ?
சாதக மாகவே தாகம் தணித்திடும்
சத்தியத் தேவ தேவா
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே! 7
நினைவெனும் ஏட்டினைத் திறந்தனை, திறந்தபின்
நித்தமென் செய்கையெல்லாம்
நீண்டநாள் பின்னரும் திருப்பிடும் வகையிலே
நீளவே எழுதிவைத்தாய்
கனமுறப் பதிந்தன சிற்சில, பற்பல
கலைந்தன மங்கலாக
கடந்ததன் அனுபவம் வருவதைக் காக்கவே
கருதிடும் ஏடுதன்னை
எனதரும் வாழ்க்கையில் திறந்திடும் முன்னமே
இசைந்தவாம் செயலிலெல்லாம்
இறைவனே கற்பதற்கேதுமே இல்லையோ?
ஏனடா மூடிவிட்டாய்?
தனதன தாவென்று தாளங்கள் போட்டுளே
சதிராடும் தேவதேவா?
சாகாத தத்துவம் தானாகத் தந்தவா
தர்மமே சாற்றுவாயே! 8
No comments:
Post a Comment