நீயேதான்
என்ன செய்யப் போகிறேன் என்றே
ஏனோ எனக்குத் தெரியவில்லை
அன்னை பாதம் பிடித்திடச் சொல்லி
ஆங்கோர் பக்தன் சொல்லுகிறான்
என்ன, சிவனை மறந்திட லாமா
என்றோர் சைவன் இயம்புகிறான்
என்ன செய்யப் போகிறேன் என்றே
ஏனோ எனக்குத் தெரியவில்லை
இன்னும் திருமால் கணபதி கந்தன்
இவர்கட் கப்பால் குலதெய்வம்
பின்னும் நாமம் ஆயிரம் கூறிப்
பித்துப் பிடிக்க வைக்கின்றார்
ஒன்றைப் பிடிக்கும் உறுதிகள் கொள்ள
ஓயா ஆய்வு செய்கின்றேன்
என்ன செய்யப் போகிறேன் என்றே
ஏனோ எனக்குத் தெரியவில்லை
இவனா, அவனா, இலையெனில் இவளா
இதுவா அதுவா தெரியவிலை
சுவரில் எழுதச் சித்திரம் உண்டு
சுவர்கள் நூறு வரைவதெங்கே?
கவலைப் பட்டுக் காரியம் இல்லை
கையை எந்தத் திசை குவிப்பேன்?
அவலை நினைத்தே உமியைச் சுவைக்கும்
ஆபத் துக்குள் சிக்குவனோ?
உள்ள விளக்கில் ஒருசிறு தீபம்
ஒளியை வீசத் தவிக்கிறது
மெள்ளத் திரியை விரல்நுனி யாலே
மேலே சற்றே தூக்குகிறேன்
வெள்ள மாக விளக்கினில் எண்ணெய்
விளிம்பு வரையில் நிறைகிறது
அள்ளும் ஒளியில் அண்டகோ ளங்கள்
அனைத்தும் என்னுள் காணுகிறேன்
ஆகா என்ன அதிசயம் இங்கே
யாவும் ஒன்றே வேறில்லை
போகா வழிக்கே இதுவரை என்னைப்
பூட்டி வைத்துப் பார்த்துள்ளேன்
ஏகாந்தத்தில் இருப்பதும் ஒன்றே
எல்லாம் நீயே நீயேதான்
வாகாய்க் கையைக் கூப்பிடு தம்பி
மார்க்கம் எல்லாம் நீயேதான்!
No comments:
Post a Comment