Saturday, May 11, 2019

நந்தா விளக்கு


நந்தா விளக்கு அனுமன்

நந்தா விளக்கு, தேர்வட்டு
       நடுவே இருக்கும் அச்சாணி,
இந்தா என்றே கற்புமகள்
       ஈந்த வெற்றிச் சிரஞ்சீவி,
சிந்தா மணியாய் ஆரத்தில்
       சேர்ந்த ஜோதி, துயருற்றே
அந்தோ எனவே வீழாமல்
       ஆயுள் நல்கும் சஞ்சீவி.

ஒற்றைச் ஜதையை மந்திரமாய்
       உள்ளம் கொண்ட தவயோகம்,
பற்றிக் கொண்ட பின்னாலே
       பாதை மாறாப் பெருந்தொண்டு
கற்றுக் கொண்ட வான்பள்ளி,
       கடலின் நடுவே விடிவெள்ளி,
வெற்று வார்த்தை அறியாத
       வேதம், விவேகம் மெய்ஞானம்.

பணியும் செல்வம், பால்நிலவு,
       பட்டப் பகலின் பசுங்கொள்ளை,
துணியும் வீரம், சுறுசுறுப்பு,
       தூய்மை கொண்ட அவதாரம்,
கணமும் மறவா இராமஜபம்
       கடமைக் குள்ளும் ஒலிக்குமனம்,
அணியும் வெற்றி இராமதனு,
       அனுமன் என்னும் திருநாமம்.

குத்து விளக்கு நடுவிருந்தால்
       கூடம் முழுதும் விளக்குதல்போல்
முத்தாய்க் காதை நடுவினிலே
       முகிழ்த்த போதும், முன்பின்னே
சத்தாய் வெளிச்சம் பாய்ச்சுமொளி,
       தருமத் தனிமை தீர்க்குமருள்,
புத்திக் கூர்மைக் கோர் இமயம்,
       புயலின் ஞானம், பூந்தெறிப்பு!


ஆற்றல் கல்வி, அமைதியுடன்
       அறிவு நிறைவென் றேதேனும்
வேற்று மைகள் இல்லாத
       வீரன்,, எனவே இராமபிரான்
போற்றும் பெருமை தான் பெற்றோன்,
       புனிதன், தருமம் தான் போன்றோன்,
ஊற்றுக் கோலாய் தன்தலைவன்
       உரத்தின் நிலையாய் விளங்கியவன்.

இராமன் நோக்கு நேரடியாய்
       நிகழ்த்தப் பெற்ற பேராளன்,
மராம ரங்கள் துளைத்திடவே
       வார்த்தை சொல்லி இராமபிரான்
தராத ரத்தை அரசற்குத்
       தகுந்த வண்ணம் காட்டியவன்,
பராவும் மூர்த்திக் கற்புடையான்
       பண்பின் சிகரம், மெய்வீரன்!

மனத்தின் தன்மை புரிந்தியல்பாய்
       மாற்றம் வழங்கும் மாமேதை,
இனத்திற் குயர்வைத் தன்பண்பால்
       ஏற்றி வைத்த குலத்தோன்றல்,
சினத்துக் கெதிரி, உரம்பெற்ற
       சிந்தைப் புலவன், தன்தலைவன்
நினைத்த பொழுதில் செயலாற்றும்
       நீதி யமைச்சன், நெறியுடையான்.

நல்ல தவத்தின் இராமபிரான்
       நல்கும் பட்டம் நன்றென்று
சொல்லின் செல்வன் பட்டத்தைத்
       தூக்கிக் கம்பன் கொடுக்கின்றான்
வெல்லும் வேதம் உள்ளளவும்
       விளங்கு புகழோன், தன்னைத்தான்
அல்லா தொருவர் ஒப்பில்லான்
       அறிஞன் பட்டம் முதல்பெற்றோன்.

அஞ்ச னைக்குப் பிறந்தமகன்,
       அஞ்ச னத்து வண்ணனையே
நெஞ்சிருத்திப் போற்றியவன்,
       நேர்மை விளக்கு, கம்பீரன்,
செஞ்சொற் புலவன், எப்பொழுதும்
       தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்
தஞ்சொற் காத்து கச்சிதமாய்த்
       தந்த கடமை முடிக்கிறவன்.


அடைக்க லம்யான் எனவந்த
       அரக்க நம்பி வீடணனைத்
தடுக்க எண்ணிப் பல்லோரும்
       தத்தம் கருத்தைக் கூறிவர
தொடுத்தெ டுத்த வார்த்தைகளால்
       தோது சொல்லி அபயத்தைக்
கொடுத்தல் நன்றென் றியம்பியவன்
       குறிப்பால் குறிப்பை  உணர்த்தியவன்.

தாவிச் சென்று கடல்தாண்டி
       தனியாய் இலங்கைப் பதிசேர்ந்து
தேவி தன்னைக் கண்டனுமன்
       செய்த திறமும், போர்க்களத்தில்
ஆவி கலங்க இராவணனின      
அடர்ந்த மார்பில் குத்தியதும்
பாவில் சொல்ல ஒண்ணாது
       பண்கடந்த தீரனவன்.

அண்ணன் இராமர்க் கடுத்தபடி
       அதிகம் கம்பன் தனை ஈர்த்துப்
பண்ணில் இடத்தைப் பிடிக்கின்ற
       பண்புச் செல்வன் நம்மனுமன்
கண்ணொன்  றுடம்பில் அமைவதுபோல்
       கதையிலனுமன் அமைந்துள்ளான்
எண்ணமெல்லாம் நல்லனவாய்
       இருக்க அருள்வன், வாழியவே!



No comments:

Post a Comment