ஆதி வியாதிஹர ஆஞ்சனேயா!
ஆதி வியாதிஹர ஆஞ்சனேயா -எமை
ஆதரித்துக் காக்க வேண்டும் ஆஞ்சனேயா
தூதில் உயர்ந்தவனே ஆஞ்சனேயா-எங்கள்
சொந்தமென வந்தவனே ஆஞ்சனேயா
(ஆஞ்சனேயா-எங்கள் -
ஆஞ்சனேயா)
ஓங்கி உயர்ந்திருக்கும் விஸ்வரூபம்-காண
ஓடி மறைந்துவிடும் எங்கள் பாபம்
தாங்கும் அருள்விழிகள் நல்கும் பார்வை-வழி
சாற்றி அருளும் வாழ்வில் நல்ல தீர்வை
(ஆஞ்சனேயா- எங்கள்
-ஆஞ்சனேயா)
ஞானியருள் பெரிய ஞானியும் நீ-பக்தி
நாட்டியதில் பெரிய பக்தனும் நீ
கானத் தருமையெல்லாம் கண்டவன் நீ -எம்மைக்
காக்கவென அன்பு நெஞ்சம் கொண்டவன் நீ
(ஆஞ்சனேயா-எங்கள் -ஆஞ்சனேயா)
தந்தையிடம் பெற்றனையோ வாயுவேகம்-கதிர்ச்
சான்றோனிடம் பெற்றனையோ ஞானத் தாகம்
சொந்தமெனப் பெற்றனையோ வஜ்ர தேகம்- சான்று
சொல்லவெனப் பெற்றனையோ பக்தி யோகம்!
(ஆஞ்சனேயா-எங்கள் -ஆஞ்சனேயா)
கண்ணன் கீதை சொல்லும் போதே செவிமடுத்தாய்-
ஜெயம்
காண்டீபன் தேர்க்கொடியாய் நீகொடுத்தாய்
எண்ணமெல்லாம் உன்றனையே சுற்றிச் சுற்றி-இருக்கும்
ஏற்றம் தந்து, நல்கிடுவாய்
என்றும் வெற்றி
(ஆஞ்சனேயா-
எங்கள் -ஆஞ்சனேயா)
உள்ளுக்குள் ளேயிருக்கும் ராம நாமம்- நாங்கள்
உன்றன்வழி பெற்றிடவே கிட்டும் சேமம்
தள்ளிடாமல் எங்களைநீ காக்க வேண்டும்-ஐயா
தாள்பணிந்து வேண்டுகிறோம் மீண்டும் மீண்டும்
(ஆஞ்சனேயா-எங்கள் ஆஞ்சனேயா)
No comments:
Post a Comment