Saturday, May 11, 2019

காரைக்கால் அம்மையார் காரிகை


காரைக்கால் அம்மையார் காரிகை               
                    


                  


            கவிமாமணி இலந்தை சு இராமசாமி
                         சுந்தர் பதிப்பகம்
                  2,29வது தெரு,தில்லைகங்கா நகர்
                               சென்னை-600061
                                  91-44-22671249
BIBILIOGRAPHY
Name of the book :  Karaikkal Ammaiyar karigai
Author           :   Kavimaamani Ilanthai S. Ramasami
Number of pages  :
Paper
Type of the book  :  Poem
Published by      :  The Author
Sundar pathippagam
                         2, 29th street, Thillaiganganagar
                         Chennai-600061
Printer            :

இலந்தைக்கு இன்னொரு மகுடம்

                           கவிமாமணி இளையவன்
கவிமாமணி இலந்தை இராமசாமி , இரட்டை மாநகருக்கு வந்த சில மாதங்குள்ளேயே இங்குள்ள தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் தனியாசனம் இட்டு அமர்ந்துவிட்டார். அவருடைய முதல் நிகழ்ச்சியே கம்பன் விழாவின் கவியரங்கத் தலைமைதான். இரு பெரிய செவியானைப் பாடிய  அந்த ஒரு சிறு கவிதையிலேயே அரங்கம் அவருக்கு வசப்பட்டது.
கடந்த முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக திரு .சு. இராமசாமி அவர்களை நான் அறிவேன்அவரது கவிதை வீச்சுகள் அற்புதமானவை. அவரது கட்டளைக்கலித்துறையின் இரசிகன் நான். “அப்பாலுக்கப்பால்என்ற அவரது பக்திமாலையிலிருந்து ஒரே ஒரு கவிதை மாதிரிக்குத் தருகிறேன்எனது வழிபடு கடவுளாம் மாகாசரஸ்வதி பற்றிய பாடல் அது.
வாவென்று சொன்னால் வரவேண்டும், வந்து வளக்கவிதை
தாவென்று சொன்னால் தரவேண்டும் , நீவந்து தான் நடிக்க
நாவொன்று வைத்துளேன், நன்றென வாரா நலிவுசெய்தால்
ஓவென்று  அழுவேன், உனக்கிது தேவையா உத்தமியே!”
ஏதோ சிந்து பாடுகிற மாதிரி , போகிற போக்கில் சொற்களைத் தெளிக்கிற சித்தர் அவர்பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்இந்தப் பையலும் வீமனை அஞ்சியேஎன்று துரியோதனன் கூற்றாகப் பயன்படுத்திய சொல்லாட்சி போலே. “ஓவென்று அழுவேன்என்ற சொற்பிரயோகம் கட்டளைக் கலித்துறையில் அமைவது சாதாரணமானதல்ல.
காரைக்கால்  அம்மையாரின் நான்கு படைப்புகளின் மொத்தப்பாடல்களும் இலந்தையார் எழுதியுள்ள இக்காரிகையின் மொத்தப் பாடல்களும் 143 ஆகவே அமைந்திருப்பது இறையருளேஅருட்கவிகளுக்கு இப்படி அமைவது வியப்பேதுமில்லை.
காப்புச் செய்யுளே கம்பீரமாக அமைந்திருக்கிறது. . சிவபெருமான்தேரைக்கால்இற்றிடச் செய்தவன்  காப்பு என்ற அடியில் உள்ள எதுகை அற்புதமாக வந்து விழுந்திருக்கிறது. அதுபோல் நூல் தொடங்கும் கவிதையும்கட்டளைஎன்ற சொல்லைப் பயின்றுவர கவிஞரின் கவிமேன்மை ஆட்சி புரிகிறது.
கதை ஒருபுறமிருக்க,. காரிகை முழுவதிலும் சிறகு கட்டிய எதுகைகள், பொருத்தமான சீரில் உட்கார்ந்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மகாகவி பாரதியைப் போலப் பெண்மையைப் போற்றும் இயல்புடையவன் நான். பேரழகியாகிய புனிதவதி பேய்வடிவு கொள்வதும், தலையால் நடந்து செல்வதும், சிவபெருமானைத் தரிசித்த பின்னும் பூலோகத்தில் திருவெண்காட்டில் தொண்டு செய்வதும் என்னை வருத்திய வரலாறு என்பது உண்மை. அதைக் கதையாகச் சொல்வதும், துன்பத்தின் தொடர்கதை எனும் போது கவிதையாக்குவது என்பதும் எளிதன்றுஎனது எண்ணம் கவிஞரின் கூற்றாகவும் வெளிப்பட்டுள்ளது.
தோற்றம் அழகிய தூயோள் அதனைத் துறந்து அரனை
நோற்றுப் புதுவடி வேற்றுப் புலமையின் நுட்பமுடன்
ஆற்றுத் தலையர் அரும்புகழ் பாடி அவனருளால்
ஏற்றம் அடைந்தனள் , இக்கதை செப்பல் எளிதலவே!”

கவிஞர் இலந்தை சொற்களை அடுக்குவதில் சூரர். அக்காலப் பாரதி கலைக் கழகக் கவியரங்குகளில் இதைப் பலமுறை அனுபவித்துப் பரவசமடைந்துள்ளேன். கடல்வளம் என்ற பகுதியில் இந்தக் கைவரிசையைக் கணிசமாகவே காட்டியுள்ளார்.
இரண்டு மாங்கனிகளில் ஒன்றைத் தானுண்ட பரமதத்தன் கனியின் சுவை கருதி மற்றதையும் கேட்டது கவிஞர்க்குப் பொறுக்கவில்லை.
யானினும் உண்ண அடுத்த கனியும் அளிக்கவென்றான்
ஆன சுவைக்கனி அம்மைக் களிக்க அறிந்திலனே!”
இரண்டு கனிகளில் மற்றொன்று மனைவி உண்ணவேண்டியது, என்னதான் சுவையென்றாலும் அதையும் கொடு எனக் கேட்பது சுயநலம் இல்லையாஅது மனைவிக்குரியது என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லை. என்ற சினத்தில்அறிந்திலனேஎன்பது கவிஞரின் சாடலே தவிர வேறில்லை.
இது உயர்வின் எல்லை, இது பரவாயில்லை, இது சுகமில்லை என்றெல்லாம் தரம் பிரிக்கத் தேவையின்றி அனைத்துக் கவிதைகளுமே சொல்லால், பொருளால், செம்மாந்து நிற்கின்றன.
காரைக்கால் அம்மையே கவிஞரின் கையைப் பிடித்து எழுதவைத்தாள் என்பதுபோல் பரவசம் பயிராகிற இந்தக் காரிகைக்கு அணிந்துரை எழுதுவதும் அம்மையிட்ட கட்டளையாய் எண்ணி ஆனந்திக்கிறேன். கனகதாரா துதியையும், பஜகோவிந்தத்தையும், மொழியாக்கம் செய்த இளம்பருவத்திலிருந்தே நிலைத்த பணிகளையே நினைத்துச் செய்யும் இலந்தைக்குக் கிடைத்த புகழ் மகுடங்களுக்கு எண்ணிக்கை இல்லை.
காரைக்கால் அம்மையாரின் காரிகை இலந்தையார் பெற்றிருக்கிற இன்னொரு மகுடம் என்று பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன்
கவிமாமணி இளையவன்.
Plot no, 15,D.No. 8-69/23
Dwaraka Nagar,,Uppal
Hyderabad- 500039
7-11-11
 இறைவனுக்குத் தத்துத்தாய்
        உறுதி உச்சம், வைரக்கல், உருகி ஓடும் கங்கைநதி
        இறுதி யில்லாப் பெரியவரம், இயக்கம் காணும் தாளலயம்.
        அறுதி யிட்டுச் சொலமுடியா ஆன்மீ கத்தின் அச்சாணி
        இறைவன் அன்னை தனைவேண்டி எடுத்துக் கொண்ட தத்துத்தாய்.

        காரைக் காலின் கற்புப்பேய், கயிலைப் புனிதம் கண்டசிரம்
        காரெ டுத்த பெருவானம், கருணை வெள்ளம், காட்டுத்தீ
        கூரெ டுத்த அருள்குன்றம், கோபு ரத்தின் பொற்கலசம்.
        ஊருக் கேற்றம், உண்மையொளி, உலையாப் பக்திக்கு ஓர்சான்று.

        கட்ட ளைக்கு நாற்றங்கால், காட்டும் பதிக முன்னோட்டம்
        விட்டு விட்ட வனப்பாலே மேன்மை கண்ட பேய்வடிவம்
        சுட்ட வெண்மை நீறுடைய சுடுகாட் டுக்குள் தூயதமிழ்
        கட்ட ஒண்ணாப் பக்தியினால் கடவுள் தாங்கும் கர்ப்பப்பை.

        தீர்க்கம் ஊக்கம், சிவபக்தி, சிந்தை உருக்கம், தாயன்பு
        வார்க்கும் பாடல் வரலாறு, வணிக குலத்தின் வழித்தோன்றல்  
       சேர்க்கும் சித்தி படைத்தாலும் சித்தம் மயங்காச் சீர்மையுளம்      ஆர்க்கும் கடல்சூழ் காரைக்கால் அம்மை நாமம் வாழியவே             



                                                                  உ        

காப்பு

யாரைக்கால் பற்றிட யாவையும்  நன்றாய்  அகப்படும் அச்
சீரைக்கால்  பற்றித் தொடங்குகின் றேனச் சிவபெருமான்
தேரைக்கால் இற்றிடச் செய்தவன் காப்பெனச் சேர்ந்திடுக
காரைக்கால் அம்மை கதைசொலும் இவ்வரும் காரிகைக்கே!

                                  நூல்

கட்டளை  போட்டுக்  கனிகொணர்   என்ற   கணவனது
கட்டளை  ஏற்றுக்  கனியைக்  கொணர்ந்தளி காரிகையார்
கட்டளை  போட்டுக்  கவிதை  எழுதிக்  கனித்தமிழில்
கட்டளைப்  பாட்டின் கணக்குத் தொடங்கிக் கணித்தனரே!               1               

கூனார்  மதிபுனை கூத்தன்  நடத்தைக்  குளிர்ந்துகண்டு
தேனார்  கவிதைகள்  தீந்தமிழ்  ஏற்றிச்  சிறப்புடனே
வானார்  பெரும்புகழ்  வாய்த்தவர்  பற்றி  வரைந்திடவே
நானார்? எனினும் நமக்கும் துளிர்த்திடும் நம்பிக்கையே!                 2

பேரிகை கொட்டிப் பிழைத்திடல்  கைவிட்டுப்  பேய்வடிவின்
காரிகை  பற்றிநற் காரிகை மூலம் கதைத்திடஅந்
நாரிகை காட்டி நமக்கருள் செய்வாள், நலமுடனே
தூரிகை  பற்றிச்  சுடர்மணி   ஓவியம்  தோற்றுவனே!                  3 

தோற்ற  மழகிய   தூயோள் அதனைத் துறந்தரனை
நோற்றுப்  புதுவடி  வேற்றுப்  புலமையின் நுட்பமுடன்  பொலிவுடனே
ஆற்றுத்  தலையர்  அரும்புகழ்  பாடி  அவனருளால்
ஏற்றம்  அடைந்தனள்  இக்கதை  செப்பல்  எளிதலவே!                 4

எனினும்  துணிந்தனன்  ஏரல்  எழுத்தை  இனிதெனவே
நனிபுகழ்  மேலோர்  நடைபயில்  வோனாய்  நமைக்கருதி
கனிவுடன்  ஆதுரம் காட்டி  அருள்வர் அக்  காரணத்தால்
இனியெதும்  இங்கே  இனிதென   எண்ணி   இயம்புவனே!                       5
 

காரைக்கால் படலம்

கடல்வளம்

காலையில் தத்தம் கடமையைச் செய்யும் கருத்துடனே
வேலையில்  கட்டு மரத்தினில் ஏறி வினைதொடங்கி
வேலையில்   சென்றவர்   மீள்வதைக் காணும் விழைவுடனே
மாலையில்  வேலை  மணலில்  திரளுவர்  மாதர்களே!                    6

கொட்டச் சிதறிய  மீன்களைக் கண்டுடன் கொத்திடவே
வட்ட  மடிக்கும் பறவைகள், அங்கே மணற்பரப்பில்
ஒட்ட  நெளிந்திடும்  நண்டுகள், ஓரம்  ஒதுங்குசங்கை
எட்டி  நடப்பவர்  என்னப்  பலவாய்   இயக்கங்களே                       7

கத்து  தரங்கக்   கடற்கரை  ஓரம் கடைபரப்பி
முத்து பவளம் முறைபடு சங்கு முழுவளையல்
நத்து ,கிளிஞ்சல், வகைவகை யாக நவமணிகள்
கொத்துக் கடற்பஞ் செனவே பலவாய்க் குவிப்பர்களே!                     8

வீதிகள் உண்டு, விதவிதத் தர்க்கம் விரும்புகிற
வாதிகள் உண்டு, வருபவர் கூடி வழங்குகிற
சேதிகள் உண்டு, சிறிதும் நெறியில்  திறம்பறியா
நீதிகள் உண்டு, நிதமும் விழாக்கள் நிறையவுண்டே!                       9


தானிய  வீதிதனிக்கலைத் தொண்டுசெய்   தாசிகட்கு
மானிய  வீதி, வலிமைப்  பயிற்சி  வகைவகைசெய்
மேனியர்  வீதி, விளங்கும்  மற்றவை  விற்பனைசெய்
ஏனைய  வீதி  எவையென   எங்ஙன்   இயம்புவதே!                   10

ஏருக்கு  வேலை   இருக்கும்  புறநகர்  எவ்விடத்தும்
யாருக்கும்  வேலை  இருக்கும் , அரண்சேர்  அணிநகரில்
நேருக்கு  நேராய்  நிமிர்வில்  பொருதும்   நெறியுடையோர்
ஊருக்குள்  காப்பாய்  உலவுவர்  வாணிகம்  உத்தமமே!                 11

அளிநாட்   டமுடன்  அலர்மலர்   சூடும்   அணிநகர்க்கே
வெளிநாட்  டவரும்   மிகவே   வருவர்  விருப்புடனே
களிநாட்  டமுளோர்  கலகல  வென்னக்  களித்திடுவர்
ஒளிநாட்   டினுமுயர்  வோங்கும் நகரென     ஒப்புவரே!               12

பொன்னும்  மணியும்  பொறியொளி  வைரமும்  பொற்பொதிந்த
இன்னும்  பலவும்  எழில்மிகு  நேர்த்தி  இழையணியும்
மின்னும்  இரத்ன  விதவிதக்  கற்களும்  விற்பதிலே
தன்னிக  ரற்று  விளங்கினன்  அங்கே  தனதத்தனே!                    13

தன்னூர்   விடுத்துத்   தனத்துக்  கதிபதி   தான்விரும்பிப்
பொன்னூர் அனைய புகழ்காரைக் காலில் புகுந்தனரோ
என்னூர்  எனவே  இருந்தன  ரோவென எண்ணிடவே
முன்னோர்  வழியில் தனதத்தன்  வாழ்ந்தான்  முறையுடனே!              14

உன்னத  நேர்மை  உருப்பெற்ற  தென்ன  உலவியந்த
நன்னகர்  போற்ற  நவமணி  வாணிப  நாயகனாய்
நன்னெறி  பற்றி   நலமுடன்  தானங்கள்  நன்குசெய்து
மன்னவ  னென்னவே  வாழ்ந்தனன்  மக்கள்  மதித்திடவே!               15

ஆசையாய்ப்   போட்ட  அழகிய   கோலம்  அதையழிக்க,,
ஓசை   மழலை  உதிர்க்கபரம்பரை   ஓங்கிவர
ஈசன்   ஒருபிள்ளை  ஈந்திட   வில்லை  எனுங்குறையே
நேசரின்  நெஞ்சை  நெருடக்  குலைந்தது   நிம்மதியே!                  16

கிள்ளிக்  கொடுப்பினும்  கேடில்லைஎன்றாலும்கேண்மையுடன்
அள்ளிக்   கொடுக்கிற   அன்பர்   தனதத்தன்  ஆதரிக்கும்
வள்ளல்  எனப்பலர்  வாழ்த்திடும்  வாணிப  மன்னருக்குப்
பிள்ளை  இலையெனும்  பீழையை  எவ்விதம்  பேசுவதே!               17


''மாணாது  போமோ இவ்  வாழ்க்கைஇதுவரை  வாழ்ந்ததெலாம்
வீணோ? எனது  வியன்பக்திக் கீசா  விளைவிலையோ?
ஆணோ, இலையெனில் பெண்ணோ   அரனே   அளித்தருள்வாய்
வாணாள் சிறக்க வழிசெய்கஎன்றான் மனம்நெகிழ்ந்தே!                  18

தன்னைக்  கவிசொலும்  தாயைப்     புவிபெறத்    தான்நினைத்த
முன்னைப்    பரம்பொருள்    மூண்ட    தருணம்   முளைத்ததெனப்
பொன்னை   நிகர்த்த    புனித   வதியெனும்   புண்ணியத்தை
அன்னை   எனவரும்   ஆசையி    னாலே   அளித்தனனே!              19

வாராது  வந்த  மகவை  விழியின்   மணியெனவே
தீராத   பாசச்  செழிப்பில்   வளர்த்தார்    சிறப்புடனே
ஏராள   மாக   இறைவன்   திருவருள்   ஏற்றமெலாம்
வேராக   நெஞ்சில்   விழுது   விடவே   விதைத்தனனே!                20

நூல்படித்   தோரா அரும்பக்தி     அற்புத   நுட்பமெலாம்
பால்குடிக்   கின்ற    பருவத்தும்   நெஞ்சில்  படிந்ததனால்
சூல்பிடிக்  கின்ற   இறைவன்   சிவனைத்   தொழுதவனின்
கால்பிடிக்   கின்ற   களியே   உளத்தில்   கருதினளே!                   21

பள்ளிக்குச்  சென்று  படிக்காம  லேதமிழ்ப்  பாடமெலாம்
தெள்ளத்  தெளிவாய்த்  தெரிந்தத னாலந்தத் தெய்வமகள்
உள்ளத்  தொளிர்ந்த   சிவபெரு  மான்புகழ்  ஓதிவர
வெள்ள  மெனக்கவி   பாடிடும் ஆற்றல் விளைந்ததுவே!                  22

சின்னஞ்  சிறுவர்  தெருவினில்  ஆடித்  திளைக்கையிலே
தன்னை   மறந்தவ  ளாய்ச்சிவன்  ஆலயச் சன்னதியில்
பொன்னை   நிகர்த்திடும்  பூரணி  அன்புப்  புனிதவதி
பன்னரும்  பாடல்கள்  பாடிச்  சிவனைப்  பரவினளே                     23
                       
உண்ணும்  பொழுதும்  உறங்கும்  பொழுதும்  உயர்தொழுகை
பண்ணும்  பொழுதும்  படிக்கும்  பொழுதும்  பழகுகவி
எண்ணும்  பொழுதும்  எழுதும்  பொழுதும்  இசைத்திடவே
நண்ணும்  பொழுதும்  அரன் திருப் பாதங்கள்  நாடினளே!               24

செல்வமே  இந்தச்  சிறிய  வயதினில்  செந்தமிழில்`
சொல்வன்மை  பெற்றுத்  துதிபாடு  கின்றாய்துணையிதழார்
வில்வம்  விரும்பும்  விமலன்  மிளிர்சடை  மேவுபவன்
நல்வரம்  பெற்றனை  நாவன்மை   பெற்றனை  ஞானத்திலே! “           25


என்று  பெருமிதம்  எய்தித்  தகப்பன்   இசைத்திடவும்
ஒன்றும்  மனத்தில்  உறையும்  இறைவன்  உயரருளால்
வென்று  சிறந்தனம்   என்னும்  கருவம்  இலாதவளாய்
என்றும்  மனத்தில்  இசைந்த  சிவனை  இறைஞ்சினளே!                 26

அங்குத்  தினமும்  அருந்தமிழ்  பாடும்  அருமையினால்
தங்கு   தடையே   இலாமல்  தொழுகைகள்   தான்புரிய
தங்க   மயமாய்த்   தனியொரு   கோவிலைத்   தன்மனையில்
பொங்கிடும்  அன்புடன்  தந்தை  சமைத்தனன்  பூரிப்பிலே!               27

தனதத்தன்  இல்லாத்  தருணம்  தனிமையைத்  தான்தொலைக்கத்
தனதொத்த  தோழியர்  தம்முடன்   இல்லில்  தனியிடத்தே
மனமொத்த  பெண்டிரின்  ஆட்டங்கள்   ஆடி   மகிழ்ந்திருந்தாள்
தனதத்தத்   தாளங்கள்   போட்டுவந்   தாளொரு தையலங்கே!           28

கொல்லி   மலையின்     குறத்தி,    உனக்குக்   குறிசொல்லுவேன்
சொல்லில்   தவறேன்  சுடரொளித்   தேவி   துணையருளால்
வல்லி,   புனித   வதிநீ     அருகே   வருகவெனச்
சொல்லி   அவள்கரம்    தொட்டுக்   குறியைத்    தொடங்கினளே!       29

அம்மாசிவனார் அருளுமக்   கென்றும் அதிகமுண்டு
சும்மா உரைத்திடும்   சொல்லும்   அருளாய்ச்  சுடர்பரப்பும்
செம்மாந்  துமையே   திருக்கரம்   பற்றிடும்   செல்வ மகன்
உம்மால் உயர்வான்,   உமையே  தொழுவான்  உலகத்திலே!             30

கனியொன்று சாற்றைக் கடைந்த சுவைகொள் கனிமொழியே
கனியொன்றி  னாலே  கதிமாறும்  வாழ்க்கை  கதித்துவந்து
கனிநின்ற  தேகம் கரைந்தோடி  னாலும்  கருமிடற்றான்
கனிவொன்றி   னாலே களிகூடி   வையம்   கரந்தொழுமே!                31

அப்பனுக்  கம்மையென் றாகுதல்   ஞால   அதிசயமே
ஒப்பனை   எல்லாம்    உதறி    உடம்பின்   ஒளியொதுக்கி
எப்பொழு   தும்சிவன்   எண்ணம்   உளத்தில்   இருந்துவரும்
செப்பிடும்    யாவையும்    தெய்வத்   திருவருள்   சேர்த்திடுமே”        32

என்றவள்   சொல்ல   இனிய   மொழியாள்   எதிருரைப்பாள்
நன்றல,    தன்னுடை   நாயகன்     கைதொழல்   நற்குணமா?
பொன்றுதல்    இன்றிப்    புனிதச்   சிவனார்   புகழ்பதத்தில்
ஒன்றுதற்   கீடாய்   உளதோ    பிறிதிவ்   வுலகத்திலே?                          33

 இந்தா  பிடியென்  றெழிலணி  ஒன்றை  எடுத்துவந்து
தந்தாள்  பரிசாய்தமதரும்  தோழியர்  தம்முடனே
கொந்தார்  மலர்சூழ்  குளிர்நறுஞ்  சோலை  குறுகியங்கே
பந்தா  டினள்பின்  பரமற்குப்  பாடல்கள்  பாடினளே!                             34                                                            

                                            நாகைப் படலம் 
காற்றுக்கு  நாகைக்  கடற்கரை  மேலெழு  காதலினால்
ஆற்றுக்கு, மோதும்  அலைகடல்  மேலெழும் ஆசையைப்போல்
தோற்றம்  அழகுக்  கடற்கரை  நோக்கித்  துரத்தவென
ஆற்றலை யெல்லாம்  அலைகளுக்  கேற்றும்  அடிக்கடியே!             35

அங்கே  புயல்கள்  அடிக்கடி  வீசினும்  அச்சமின்றி
எங்கேயும்   இல்லா  இயல்பில்   வணிகம்   இயக்கிடுவர்
சங்கும் , மணியும், தரளவெண் முத்தும் தரங்குறையாத்
தங்கமும் அங்கே தடையின்றிக் கிட்டிடும் சந்ததமே!!                   36

அந்தத்  திருநகர்  தன்னில்  நிதிக்கோர்  அதிபதியாய்
வந்து  நிறையும்   வணிகம்  நிகழ்த்திடும்  மாமணியாய்
முந்தும்  நிதிபதி   என்னும்  பெயரில்  முறைமுறையே
சொந்தத் தொழிலில்  சுடர்மிக  வாழ்ந்தனர்  தூமணியே!               37

அதிபதி  யாகத்  திகழும் அரசன் அரண்மனையில்
விதிமுறை யாக அணிகள் தரத்தை விரித்துரைக்க
நிதிபதி  தன்னை  நியமித் திருந்தார்  நிருபரெனின்
புதிதாய் அவரைப்  புகழ்ந்தென்ன நானும்  புகலுவதே!                  38

ஆன வரையில் அறநெறி மாறா அருமையுடன்
தான தருமம் தகவுடன் ஆற்றித் தலைவரென
ஏனை வணிகர்கள் ஏற்றும் பெருமைக் கிலக்கியமாய்
வானப் புகழுடன் வாழ்ந்தார் நிதிபதி மாண்புடனே!                      39

சாவகம் புட்பகம் தண்கடல் நாப்பண் தழைத்திருக்கும்
தீவுகள், சீனம் மிசிரிம் யவனம் செழிப்புடனே
பூவகம் தன்னில் பொலிந்திடு தேசப் பொருள்களெலாம்
ஆவலில்  வாங்கி அணிமணி வாணிகம் ஆற்றினரே!                   40

புத்திரர்   நால்வர்  நிதிபதிக்  குண்டுபொருந்திடவே
சித்திர  வித்தையில் தேர்ச்சிகள்  பெற்றுச் சிறப்புறவே
எத்திறத் தோர்க்கும் இசையும் அணிகள்  இயற்றிவைத்துப்
பத்திர  மாக  அரண்செய்து  வைத்தனர்  பக்குவமே!                    41

பண்புடை  நால்வரில்   மூன்றாம்    புதல்வன்   பரமதத்தன்
கண்படு   கின்றவை   கைபுனை   கின்ற   கருத்துடையோன்
விண்படு   கின்ற   விரிகதிர்   விண்மீன்  விலைசொல்லுவோன்
மண்படு   கின்ற   வயிரங்கள்  உண்டோ  மதிப்பிடவே!                 42


இலங்கை  யிருந்தோர்  இரத்தின  வாணிகர்  ஏமசிங்கன்
கலங்களில்  ஏறிக்  கடாரம்  எனப்பல்  கடற்புறத்துத்
தலங்கள்  அனைத்தும்  தனது  திறைமையைச்  சாதிப்பவர்
இலங்கு  திருத்தலம்  நாகைக்கு  வந்தங்  கிறங்கினரே!                  43

துதிசெயும்  வண்ணம்  துலங்கும்  இரத்னச்  சுடர்மணிகள்
அதிசய  மான  வகையினில்  பற்பல  ஆயிரமாய்ப்
புதியபல்  வண்ணம்  பொருந்தும் அணிமணிப்  பொக்கிடங்கள்
நிதிபதி  இல்லில்  அவரிடம்  காட்ட  நினைத்தனரே!                    44

காணக்கண்  ஆயிரம்  வேண்டும்  எனச்சொலும்  காணரிய
ஆணிப்பொன்  னூடே  பொதிந்த  அணிமணி  ஆபரணம்
மாணிக்கம்  முத்து  வயிரம்வை  டூரியம்  மாபவளம்
கோணிக்குள்  வைத்தே  நிதிபதி  இல்லம்  கொணர்ந்தனரே!              45

அதுவரை  காணா  அதிசயக்  கல்லொன்  றவரிடத்தே
விதிசெய ஒண்ணா  விசையில்  இருந்தநல்  மேன்மையினை
நிதிபதி   பார்த்து  வணிகரைச்  சற்று  நெருங்கிவந்தே
இதன்மதிப்  பேதெனச்  சொல்கெனக்  கேள்வி  எழுப்பினரே!             46

சோதித்துப் பார்த்துச் சொலமுடி யாதா? தொழில்திறமை
சாதித் திருக்கும்  தனவணி  கர்கள்  தளபதியே!
போதித்தி  ருக்குமும்  புத்திரர்  யாரும்  புகலுவரோ
வாதிக்க வில்லை மகிழ்வுடன் பார்த்து மதிக்கட்டுமே!                     47

பகருங்கள்    என்றே    வணிகன்   இயம்பப்  பரமதத்தன்
அகலுங்கள் என்றே அருகினில் சென்றே அதையெடுத்தான்
தகதக  வென்றே  சதிரொளித்  தாண்டவம்  சாதித்தது
புகலரி  தென்றே  புகன்றனன்  அந்தப்  புதல்வனுமே!                    48

தலமுயர்  காரையைச்  சேரும்  தனதத்தன்  தான்கணித்தே
விலையுயர்  கல்லை  மிகச்சரி யாக விரித்துரைத்தான்
நிலவுல கத்தொரு நேரிலை என்னும் நிறைமதியான்
பலகலை கற்றவன் , என்றான் வணிகன் பலப்படவே!                    49

எங்கே திறமை இருப்பினும் அஃதை இயன்றவரை
அங்கே புகுந்தே அறிந்திடு தல்தான் அறிவுடமை
பங்கமே இன்றிப்  பரமதத் தா,மிகப் பாரிப்புடன்
சங்கையே இன்றித் தனதத்தன் பாற்செல்க சாதிக்கவே!                    50


தனதத்த னுக்குத் தருகிற ஓலையைச் சார்ந்தவுடன்
முனமெடுத் தேகொடு, பின்னர் வணங்கு முறைமுறையே
இனமொத் திருக்கிற  காரணத் தாலுனை ஏற்றிடுவான்
மனமொத்  தவனை மதித்திடு அவனும் மகிழ்ந்திடவே!                      51

எந்தச் சபலமும் இன்றி எதற்கென ஏகினையோ
அந்தப் பணியைச் சரிவர ஆற்றி அடக்கமுடன்
வந்தித் தவனிடம் மாணவ னாக மதிப்புறுவாய்
தந்திடும் ஏவல் எதுவெனி னும்செய் சரிவரவே!                                      52

கற்றிட வேண்டும்,, கலையினைக் கற்கக் கவனமிக
உற்றிட வேண்டும்,உறுதுயர் தாங்கி உறுதியுடன்
பெற்றிடல்  வேண்டும், பெருமைகள் கொள்ளும் பீடுடனே
நிற்பதும்  வேண்டும், எனமுறை சொன்னார் நிதிபதியே!```                 53

பாசமாய்த் தந்தை பகர்ந்ததைக் கேட்ட பரமதத்தன்
நேசமாய்ச் சொன்ன நெறிமுறை பின்பற்றி நிற்பனென
வாசகம் சொல்லி வணங்கி, இறைவனை வந்திக்கிற
பூசனை செய்து புறப்பட் டனன்ஓர் புதுவழியே!                                        54

முன்னை இருவர் முறையே மணங்கள் முடித்திருக்க
இன்னும் திருமணம் ஆகா இளைஞன் எழில்பரமன்
தன்னை அனுப்பச் சரித்திரம் ஆங்கொரு தாளெடுத்தே
என்னே இறைவன் திருவுளம் என்றே எழுதியதே!                                    55



                                    திருமணப் படலம்

பூப்பெய்தி விட்டாள் புனித வதி,நாம் பொறுப்புடனே
மாப்பிள்ளை பார்த்து மணம்செய்ய வேண்டும்நம் மாளிகையில்
மாப்பிள்ளை பெண்ணும் வதிந்திடும் வண்ணம்  மணமகனைப்
பார்ப்பது நன்றெனச் சொன்னாள் தனதத்தன் பத்தினியே!                  56

செல்வம் குவிக்கிற சிந்தையில் ஊறிய செல்வந்தனும்
பல்வகை சிந்தித்துப் பார்த்தான் மகளின் பதியெனவோர்
கல்வி மிகுந்தவன் தேவை எனவே கருதவில்லை
செல்வத் திருமகன் தேடலில் சென்றது சிந்தையுமே!                      57

ஒருமகள், பக்திக்கு உயர்மகள், தன்பால் உதித்திருக்கும்
திருமக  ளுக்குத் திருமணத் தின்பின் சிறப்பிடமாய்
ஒருமனை ஊர்க்குள் ஒருபுறம் கட்டி ஒருகடையும்
மருமக னுக்கு  வழங்கிடத் திட்டம் வகுத்தனனே!                        58

பழகிய நல்ல பரியினில் ஏறிப் பரமதத்தன்
அழகிய சோலை அடர்ந்திடு காரை அணிநகர்க்கே
முழுமதி வானில் முகிழ்த்தொளி நல்கிடும் முன்னிரவில்
வழியினைக் கேட்டே அடைந்தான் தனதத்தன் மாளிகைக்கே!              59

வாயிலைக் காப்போன் வருகெனச் சொல்லி வழி மறைத்து
போயென் உரைப்பேன்பெயரும் வரவும் புகலெனவே
நேயமாய்த் தந்தை நிதிபதி தந்த நிருபமிது
போயதை உள்ளே கொடுவென வார்த்தை புகன்றனனே!                   60

நாகை வணிகர் நிதிபதி புகழினை நானறிவேன்
ஆகையால் உடனே அழைத்து வருகென ஆணையிட
வேகமாய்ச் சென்று மிகவும் பணிவுடன்வீட்டினுள்ளே
போகலாம் வாருங்கள் என்றனன் சேவகன் புன்னகைத்தே!                 61

வீட்டினுள் சென்று தனதத்தன் தன்னை மிகப்பணிந்து,
நாட்டினுள் யாரும் நவின்றிட ஒண்ணா நலங்களிலும்
ஏட்டினில் சொல்லா அணிமணி ஏற்ற இயல்பினிலும்
மேட்டிமை கொண்டுள உம்மிடம் கற்க விழைவெனக்கே!”                 62

என்று பணிந்த இளைஞன் இனியசொல் ஈர்ப்பதனால்
நன்று, மகிழ்ச்சி, நமது விருந்தினர் மாளிகையில்
உன்றனுக் கேற்ற உதவிகள் கிட்டும், உனையழைத்துச்
சென்றுனக் கேற்றநற் சேவகம் செய்வரெம் சேவகரே.                     63


நாளை எமது, கடையினுள் வந்து  நடப்பவற்றை
வேளை தவற விடாமல் கவனி, விவரமுள
ஆளை உனக்கும் அறிமுகம் செய்வேன், அவனிடத்தே
மூளை கசக்கி  முழுவதும் கற்றிடு முறைமுறையே”                      64

என்றே அவன்பால் இயம்பி , தனதத்தன் ஏற்புடனே
இன்று பயணக் களைப்புகள் போக்கிடஇப்பொழுது
சென்றிடு , நாளை கடைக்கு, விரைந்திடு  தேவையெலாம்
வென்றிட லாகும்எனச்சொல்லிப் போக விடுத்தனனே!                   65

பையனும் நல்ல பணபலம் உள்ளவன், பண்புடையோன்
தையலுக் கேற்ற தராதரம் கொண்டவன், சாதியினன்
ஐயமே இன்றி அணிமணி வாணிப ஆளுமையைக்
கையகம் கொள்வான், கருதுவம்  என்று கணித்தனனே!                   66

தன்னுடை சீடன் தனபதி மூலம்  தராதரங்கள்
உன்னத மாயறி உத்திகள் கற்பித் துதவிசெய்தான்
பின்னெதும் ஐயம் பிறந்திடில் மிக்கப் பெருமையுடன் 
முன்வந்து  தானே தனதத்தன் பாடம் மொழிந்தனனே.                    67

பாவை   புனித வதியை   ஒருநாள்      பரமதத்தன்
தேவை வணங்கும் திருவா லயத்தினில் தெய்வயிசைப்
பாவை இசைக்கையில் பார்த்தான், விளைந்த பரவசத்தில்
பூவை உளத்தில் புகுந்திட  நின்றான் புளகத்திலே!                       68

வான்பார்த் திருந்தான், மனத்தில்   அவளை வரைந்துவைத்தான்
தான்பார்த்த பெண்தான் தனதத்தன் பெண்ணெனத் தானறிந்து
தேன்பார்த் திருந்த சிறுவண்டு மொய்க்கத் திரிவதுபோல்
மான்பார்த் தயரும் மணிவிழி எண்ணி மயங்கினனே!                     69

கற்று முடிகிற காரியம் ஆனதும் கண்ணியமாய்
உற்ற முறையில் உதவிகள் செய்த உயர்ந்தவரைப்
பற்று மிகுந்து பணிந்தான்,. விழிகள் பனித்தபடி
சற்றும் தளர்வின்றிச் சாதிப்பாய்’  என்றான் தனதத்தனே!                 70

பத்துத் தினங்கள் பறந்தபின் ஓர்நாள் பகற்பொழுதில்
முத்து, மணிகள் , அணிகள், பலவகை முந்திரியும்
கொத்துக் கனியும், குளிர்நறும் பூக்களும், கொண்டுமனம்
ஒத்து   நிதிபதி சொந்தங்கள் வந்தனர் உன்னதமே!                      71


புனித வதிக்கு   நிதிபதி   பையன்   பொருத்தமென
இனிதே நினைத்தான், தனதத்தன்  ஏற்றான், இசைவளித்தான
தனது மகிழ்வை நிதிபதி பாற்சென்று சாற்றுகென்றான்
கனிவாய் மகளினைக் கட்டி யணைத்தனன் கண்பனித்தே!                  72

வருமணம் பற்றி மனத்தில் எழுந்த மகிழ்ச்சியுடன்
ஒருமன மாக உறவின ரெல்லாம் ஒருங்கமைந்து
திருமண நாளைக் குறித்தனர் பின்னர்ச் சிறப்புடனே                     
அருமணச் செய்தி வரைந்தநல் ஓலை அனுப்பினரே                      73

வணிகத் தொடர்புடை மற்றைய தேச வணிகருக்கும்
அணிகள் தொடர்புடை ஆபர  ணக்கலை ஆற்றலர்க்கும்
பணிகள் தொடர்புடை மன்னர் அவையுள பற்பலர்க்கும்
கணியன், முதலாம் கலைஞர்க்கும் ஓலை கதித்ததுவே!                    74

கண்டவர் எல்லாம் வியந்திடும் வண்ணம் கனகமணி
மண்டபம் ஒன்றை வனைந்தனன் தன்னரும் மாளிகையில்,
வண்டலர் சோலையில் வந்தவர் தங்கும் மனைகள் பல
எண்டிசை போற்ற எடுத்தான் தனதத்தன் ஏற்புடனே!                       75

நுகர்தற் கினிய மலர்நறு மாலை வரிசைகளும்
பகர்தற் கரிய பளபளப் பேறிய பந்தல்களும்
நகர்ப்புற எல்லையில் தோரண வாயில் நனிவளைவும்
திகைப்புறும் வண்ணம் திகழ்ந்திடச் செய்தான் சிறப்புடனே!                 76

காலையில் பார்த்தால் கனிவகை வண்டி கணக்கிலவாம்
மாலையில் பார்த்தால் மலர்களின் வண்டி வகைவகையாம்
வேலையில் பார்த்தால் விருந்தினர் ஓடம் மிகப்பலவாம்
சாலையில் பார்த்தால் தனதத்தன்  இல்லத்துச் சங்கதியே!                  77

வடித்திட்ட கஞ்சி வழியெலாம் சேறாய் மசிந்திருக்கும்
தொடுத்திட்ட மாலைகள் தொலைவினில் கூட சுகந்தம்தரும்
அடுப்பிட்ட தீயோ அணையா திருக்கும், அகநகரில்
எடுத்திட்ட பந்தல் குளிர்நிழல் எங்கும் இழைத்திடுமே!                      78

புனித வதியின் புகழ்சேர் மணத்தில் புதுப்புதிதாய்
இனிமை இனிமை இனிமை எனவே இசைத்தபடி
கனிவு நிறையக் கருதிக் கருதிக் கருத்துடனே
மனது நெகிழும் வகையில் புகழ்ச்சி வழங்கினரே!                          79


பாடல்கள் ஓர்புறம் , பாவையர்  கும்மி பலர்குழுமி
ஆடல்கள் ஓர்புறம், ஆடிடும் கூடத்தின் அப்புறத்தே
சாடல்கள் ஓர்புறம், தாவல்கள் ஓர்புறம், தாம்மகிழ்வாய்
ஓடுதல் ஓர்புறம் என்று குதூகலம் ஓங்கியதே!                           80

மங்கல நாணைப் புனித வதியின் மணிக்கழுத்தில்
பங்கமில் லாவகை கட்டினன் அந்தப் பரமதத்தன்
பங்கய மொத்தவள் பாவை, அழகுப் பதுமையவள்
கங்கைச் சடையனைக் கைதொழு தேத்திக்  கலங்கினளே!                 81

ஒருமகள் மட்டும் உடையன் எனவே உரிமையுடன்
மருமக னுக்கோர் வணிகத் தலமும் மகிழ்வுடனே
இருவரும் கூடி இருந்திட எல்லாம் இசைந்திருக்கும்
திருமனை ஒன்றும் சிறப்பாய்த் தனதத்தன் சேர்த்தனனே!                  82

“’நில்; அற மார்க்கம் எனத்தாய் மொழிந்ததை நெஞ்சிருத்திச்
சொல்லறம் காத்துத் துணைவருக் கேற்ற நற் தொண்டுசெய்து
நல்லறம் ஆற்றி, இறைவன் பணிகள்  நலமியற்றி
இல்லறம் தன்னைப் புனித வதியும் இயற்றினளே!                         83

சின்ன வளாக இருந்த முதலே  சிவனடியை
என்ன தடைகள் வரினும் மறவா திருந்ததனால்
அன்ன பணியினைத் தன்மனை தன்னிலும் ஆர்வமுடன்
பின்னும் சிறப்பாய்ச் செய்தனள் பக்திப் பெருக்குடனே!                     84

தனத்தைப் பெருக்கும் தளரா விழைவினில் தன்கணவன்
இனத்திற் கொப்பக் கவனம் செலுத்தி இருந்ததனால்
அனைத்தும் இறைவன் அருள்தான் எனவே அகமகிழ்ந்து
நினைத்து நினைத்து நெகிழ்ந்தாள் சிவன்பதம் நெஞ்சினிலே!          85

வீட்டுப்  பணிசெய  ஊழியர்  கூட்டம்   மிகுந்திருந்தும்
நாட்டம் முழுதும்தன்  நாயகன்  தொண்டினில் நாட்டியதால்
காட்டிய அன்பில் கணவன் மகிழ்ந்தான், கருத்துடனே
பாட்டினைக்  கட்டிப்  பரமனின்  கீர்த்திகள்  பாடினளே!                    86

அருள்வயின் நெஞ்சம் அமைந்திடும் பெண்ணின் அருங்கணவன்
பொருள்வயின்  போய்வரப்  புந்தி  நினைந்தான், புனிதவதிக்(கு)
ஒருமக வுற்றதும் ஏகுக என்றனர் உற்றவர்கள்!
இருவரும் ஒன்றாய் இசைந்திட வாழ்ந்தனர் இல்லறத்தே!                  87


மதிய உணவுக்கு வந்திடும் போது  மகிழ்வுடனே
புதிய உணவை மகிழ்வாய் இடுவாள் புனிதவதி
அதனைப் புகழ்ந்தே அவனொரு சொல்லும் அளித்ததில்லை
நிதியினைப்  பற்றி  நிறையவே  பேசுவான்  நித்தமுமே!                  88

அரனின் அடியார் எவர்வந் திடினும் அமுதளித்துப்
பரவும் புனித வதியார் கனிந்திடு பக்தியினால்
திருவும் கலையும் செழித்தன வீட்டில் சிவனடியார்
வரவெதிர் பார்த்து வழங்கி மகிழ்வுடன் வாழ்ந்தனளே!                    89

                                            மாங்கனிப் படலம்
ஒருநாள் கடையில் பரமன் இருக்க ஒருபெரியார்
இருமாங் கனிகள் எடுத்தே அவனிடம் ஈந்தனரால்
திருமாங் கனியிவை தெய்வீக மானவை தேர்ந்தெடுத்த
தருமாங் கனிகளைச் சாப்பிடு வாயெனச் சாற்றினரே!                     90

வீட்டிற்குச் சென்று மதியம் உணவில் விரும்பியசாப்
பாட்டுடன் உண்ண விழைவெனச் சொன்ன பரமதத்தன்
ஓட்டமாய்ச் சென்று கனிகளை வீட்டினில் ஒப்படைத்து
மீட்டும் வருகென ஊழியன் தன்னை விடுத்தனனே!                      91

கணவன் அனுப்பிய மாங்கனி தம்மைக் கவனமுடன்
அணியார் புனித வதியாள் அரன்பதம்  அர்ப்பணித்தே
உணவுப் பொழுதினில் ஊட்டிட எண்ணி உடனவற்றை
மணமது மாறா வகையிற் பொதிந்தங்கு  வைத்தனளே!                    92                     

அந்தப் பொழுதில் அடுபசி என்றோர் அரனடியார்
வந்து கதவினைத் தட்டப் புனித வதிவிரைந்து
சிந்தை மகிழ்ந்து சிவனடி யாரின் திருவடிக்கு
வந்தனை செய்து வரவேற்   றிருக்கை   வழங்கினளே!                   93

அன்னம் தயிரும் அலாது கறிகள் அடிசிலெதும்
இன்னும் தயாராய் இலையென அன்னம் இயம்புகையில்
அன்னம் தயிரே அமுதது போதும் அளித்திடென
அன்னம் தயிரொடு மாங்கனி ஒன்றும் அளித்தனளே!                     94

வீட்டுக்கு வந்த கணவன் பசிக்கு விருந்தளிக்கக்
கூட்டு, கறிவகை கொண்டே இலையில் குறையிலதாய்ப்
போட்டுப் பொதிந்துள  மாங்கனி தன்னையும்  போய்க்கொணர்ந்தே
நாட்டமு டனவன் உண்டிட நல்கினள் நாயகியே!                        95

நானிது  நாள்வரை  உண்டறி  யாப்புது  நற்சுவைதான்
தேனிதோ, இல்லை திருப்பாற் கடலின் திருவமுதோ
யானினும்  உண்ண அடுத்த கனியும் அளிக்கவென்றான்
ஆன சுவைக் கனி  அம்மைக் களிக்க அறிந்திலனே!                     96

தன்செயல் பற்றிக் கணவ னிடத்தினில்  சாற்றுவதா?
நன்செயல் என்று நவின்றிடில் நன்று, நகைநகைத்தே
புன்செயல் என்று  புகன்றிடில் என்செய? பொய்சொலவோ?
என்செயல் வேறினி ஏதென எண்ணியுள் ஏகினளே !                     97


படர்தரு வேணிப் பரமா , எனக்குப் பரிபவமா?
இடர்தரல் நன்றா? அவதிகள் நீங்கிட  ஏற்றதனை
உடன்தரல் வேண்டும், உதவுக, என்றாள் உடனடியாய்
அடர்தரு மாங்கனி முன்னதைப் போல்கை அடைந்ததுவே!                98

அக்கனி ஒப்பிட இக்கனி தன்னையும் அன்புடனே
இக்கணம் உண்ணுக என்றே கொடுத்தாள் எழிலரசி
அக்கணம் உண்டனன், ஆகா மிகவும் அதிகருசி
இக்கனி பெற்றதென்? செப்பெனக் கேள்வி எழுப்பினனே!                  99

இனியும் மறைத்தல் இழுக்கென ஆகும் எனவுணர்ந்தே
கனியொன் றடியார்க் களித்ததைச் சொன்னாள் கனிமொழியாள்
கனிவுடன் ஈசனை வேண்டக் கொடுத்தனன் கையகத்தே
எனதரன் மேலிது சத்தியம் என்றனள் ஏந்திழையே.                      100

நாட்டினில் எங்கணும் நானிது போலொரு நாடகத்தைக்
கேட்டது மில்லை, இறைவனைக் கேட்டால் கிடைத்திடுமா?
மீட்டும் ஒருகனி  வேண்டு, கிடைத்தால் விசித்திரம்தான்
கேட்டு வா, வாங்கிக்  கொடுவெனக் கூறினன் கேலிசெய்தே.              101

தெம்பாகக் கேட்டதை நல்கும் சிவனின் திருவருளை
நம்பாத நாயகர்க் காகத் திரும்பவும் நாடுவதா?
வம்பாகப் போயிற்று, மன்னவ,  சோதித்தல் வாடிக்கையோ?
உம்பாதம் அன்றி ஒருதுணை இல்லை உதவுகவே                       102

ஈசனே எங்கள் இறைவா, அரனே எழிற்கயிலை
வாசனே சின்ன வயது முதலே மனத்துளுறை
நேசனே கங்கை நெடுஞ்சடை நாதா நினதுபதம்
பூசனை  செய்யெனக் கின்னோர் கனியருள் புண்ணியனே'!                103

என்றதும் ஓரெழில் மாங்கனி கையில் இறங்கியதே.
ஒன்றல தேவா உனது கருணை உதவிகளே,
என்றவள் சொல்லிக் கணவனின் கையில் எடுத்துவைத்தாள்
மன்றிலில் ஆடுவான் மாங்கனி எங்கோ மறைந்ததுவே!                   104

பார்த்தான், எழுந்தான், பதைத்தான், திகைத்தான் பரமதத்தன்
வேர்த்தான், விதிர்த்தான், விழுந்தான்,புரண்டான்  மிகக்குழம்பி
ஆர்த்தான், அழுதான்,” அணங்கே,  உனைநான் அறிவிழந்து
வார்த்தைகள் சொன்னேன், மதியற் றவனெனை மன்னிக்கவே!             105  


உன்னைநான் ஐயுற்றேன்,  உன்றனைச்சோதித்தேன், உத்தமியே
என்னயான் செய்திடின்  என்பிழை தீர்ந்திடும்  என்தெய்வமே
என்னகம் தன்னில்  இறையொளி  தங்கி இருப்பதனை
முன்னம் அறியா(து) உனையே கலந்து முயங்கினனே!                    106

கையினைக் கூப்பிக் கணவன்  கதறிய காட்சியின
மெய்தவள் பார்த்தாள், விசனம் மிகவே விதிர்விதிர்த்தே
ஐயகோ, உங்கள் அடிமைநான், வீணே அழுவதுமேன்?
`ஐயனின் பாதம் பணிவோம் அதுதான் அரண்நமக்கே!                     107

என்று புனித வதியாள் இயம்பி இசைந்திருந்தாள்
அன்று முதலாய் அவள்கை தொடவும் அவன் மறுத்தான்
ஒன்றும் பெரிதிலை எம் சிவன் உள்ளே உளனதனால்
இன்றின் நிலையெனின் நாளைக்கு  மாறுமென் றெண்ணினளே!            108

சோதனை செய்வதும் ஏனோ இறைவா தொடர்ந்துவரும்
வேதனை என்றனை வீட்டுதல் நன்றா,விதியிதுவா
ஏதுநான் செய்வேன்? எனக்கும், உனதருள் ஏலுவதும்
சாதனை யென்றிவர் சாற்றுவ தா? என் தயவிதுவே?                       109

ஓடின நாள்கள், ஒடுங்கினன், தத்தன்  உறவுமில்லை
வாடிய பெண்மணி வாதையைப் பார்த்தும் வழியில்லையே
ஊடுதல் கூட ஒருவழி தீரும், கணவன்  ஒதுங்கியதால்
ஆடல்வல் லாயெனைக் காத்திடு வாயென் றரற்றினளே!                    110

                                                    பிரிவுப் படலம்

செட்டி வழக்கம் திரவியம் தேடிடச் செல்லுவதாம்
ஒட்டி அதனை உறுபொருள் தேட உடனடியாய்
எட்டி இருக்கிற சாவகம் புட்பகம் ஏகுகிறேன்
கட்டிக் கலம்பல உள்ளன செல்வேன் கடல்வழியே!                     111

என்றவன் சொல்ல, எதிர்விடை ஏதும் இயம்பிடுமுன்
சென்றனன், அந்தச் செயலவள் உள்ளத்தைத் தின்றிருக்க
நின்றனள், அந்த நிலையில் சிவனின் நினைவினிலே
ஒன்றினள், பக்தி செலுத்தி மனத்துள் ஒடுங்கினளே                     112

உணவு பிடிக்காப் பொழுதிலும் உண்டனள், ஓர்பொழுது
கணவன் திரும்பி வருகிற நாளினில் காய்ந்தபடி
பிணியில் விழுந்தவள் போலே இருந்தால் பிழையலவோ?
அணிகள் எதுவும் அணியா திருந்தாள் அவதியிலே!                     113

மற்றவர் போலப் பிறந்து வளர்ந்து மடிவதற்கா
உற்றனள் அந்த உயர்மடந் தை, இவ், வுலகினிலே
முற்றிய பக்தி முழுமைப் பிறப்பினை முன்னிறுத்தி
கற்றைச் சடையன் திருவிளை யாடலைக் காட்டினனே!                 114

மாதங்கள் செல்லப், பருவங்கள் ஓடி மறைந்தனவால்
வாதங்கள் செய்தே மகளிர் பலர்வந்து வம்பிழுக்க
ஏதங்கள் ஏதும் இலராய், இறைவனின் இன்னருளால்
காதம் கடந்து கணவன் வருவான் கருத்துடனே                          115

இப்படி எண்ணி இருந்தாள்,  இறைவன் இவள்தனையே
எப்படி மாற்றிடஎண்ணினன் என்றே எவரறிவார்
ஒப்பிட ஒண்ணா உயர்ந்த மனத்துடை உத்தமியாள்
தப்படி இன்றித் தனிமனத் தூய்மையில் தங்கினளே!                       116

பற்பல நாள்கள் பயணம் செய்து பரமதத்தன்
அற்புத மாக அரும்நவ ரத்ன அணிமணியும்
விற்பனைக் கேற்ற வியன்மிகு பொருள்களும் மேன்மையுள
சிற்பமும் பெற்றுச் சிறப்புடன் நாடு திரும்பினனே!                         117

புனித வதியைப் புனித வதியெனப் போற்றியதால்
மனித வடிவில் வதியும் தனது மனையிறையாய்
மனைதிரும் பாமல் மதுரை நகர்போய் வதிந்தனனே!                        118




மதுரை நகரில் வணிகன் மகளை மணம்புரிந்து
முதிர வணிகம் முனைந்து,  தினமும் முனம்நினைந்து
உதிரத் தொடர்பால் ஒரு மக ளீன்றே உயர்வுடைய
கதிரை விடுத்துப் பரமனும்  காலம் கழித்தனனே!                         119

இதுவறியாமல் கணவன் வருவான் என நினைந்து
நதிவர வெண்ணி நடமிடுகின்ற நனிகடலாய்
கதியை மறந்து கடமை இதுவெனக் காத்திருந்தாள்
புதிரை அவிழ்க்கப் புதிதாய்  ஒருசெய்தி போந்ததுவே                     120

பணமிகுந் தோனாய் வணிகம் புரிந்து பரமதத்தன்
குணமிக மாறிப் புதுமணம் கூடிக் குழந்தையுடன்
அணிகடல் கொற்கை அருகே வதியும்  அருமையினைப்
பணிவுடன் ஓர்பெண் புனித வதிபால் பகர்ந்தனளே                        121

துடித்தாள், துவண்டாள் துணைவனை எண்ணித் துயர்விழி நீர்
வடித்தாள், மருண்டாள், மயங்கி விழுந்தாள், வளர்குழலை
முடித்தாள், அவிழ்த்தாள், அழுதாள்  இறைவன் மொய்கழலைப்
பிடித்தாள் கிடந்தாள் அவள்நிலை எப்படிப்  பேசுவதே?                    122

வற்றாத கண்ணீரும் வற்றப் புனித வதிதனக்குப்
பற்றான சுற்றமும் சூழ மதுரைப் பழநகர்க்கே
நற்றாதை தாயொடு நண்ணி,அங் கோலை நறுக்கனுப்ப
மற்றோர் மனைவி மகளுடன் வந்து வணங்கினனே!                       123

மனைவியின் காலில் விழுந்து தொழுதல் மரபிலையே
உனது செயலின் பொருளென்ன வென்று உசாவிடவும்
மனித வடிவில் இருக்கும் புனித வதியெனது
புனிதக் குலதெய்   வமெனப்   பரமன்   புகன்றனனே!                    124

மாங்கனி பெற்ற வரலா றெடுத்து வகைதொகையாய்ப்
பாங்குடன் சொல்லிப் பரவித் தொழுதான்  பரமதத்தன்
ஈங்கினி என்வனப் பெற்றுக் கெனமொழிந்(து) ஏந்திழையும்
ஆங்கொரு பேய்வடி வாக்குக என்றாள் அரனிடத்தே!                      125

செவ்விய பேய்வடி வொன்றை அளித்தான் சிவபெருமான்
எவ்வகைத் தேகம் எடுப்பினும் என்றும் இறைநினைவே
கவ்விடு கின்ற வரமும் கொடுத்தான், கலங்கவைக்கும்
அவ்வகைத் தோற்றம் உறவினர் கண்டே அகன்றனரே!                    126

                                           கடைத்தேறு படலம்
என்பு தெரிய வயிறு மெலிவடைந்(து) உள்ளிழுத்துத்
தன்முது கைத்தொடும் சாதனை செய்திடத் தம்விழிகள்
முன்குழி வாகித் தெரிய முதுகதும் முன்வளையப்
பின்னல் முடியும் பிசிறு களாகப்  பிரிந்ததுவே!                                  127


கட்டுத் தெறித்தது, வாழும் குடும்பக் கடமையதும்
விட்டுப் பிரிந்தது, மேவிடும் தெய்வ விளிப்பதனால்
மொட்டு வெடித்தது, செந்தமிழ்ப் பாட்டு முறைமுறையே
கொட்டி முழக்கி பரவிற் றிறைவன் குளிர்கழலே!                         128

எள்ளிச் சிரிப்பதும் ஏளனம் செய்வதும், ஏனையர்கள்
தள்ளிக் கடப்பதும், அஞ்சி நடப்பதும் தானறிந்தும்
வெள்ளிப் பனிமலை வேந்தன்தனையே மிகவிரும்பி
அள்ளி அருள்தரல் எண்ணி மகிழ்ந்தாள் அகத்தினிலே!                    129

திணிவான சொற்கள் திகழ்ந்திடும் பாடல் திருவிரட்டை
மணிமாலை, அந்தாதி, மேலும் பதிகம் வகைவகையாய்ப்
பணிமாலை பூண்ட பரமனைப் போற்றிப் பரிவுடனே
தணியாத அன்பால் சமைத்துக் கொடுத்தாள் தமிழினிலே!                  130

அன்புடைத் தாயுளம் கொண்ட இனிய அருளுளத்தால்
தன்சிவன் மேனியில் பாம்பணி யாமல் தனிச்சிறப்புப்
பொன்நகை  பூண்டிட வேண்டும் எனவே புகன்றதனால்
அன்னையாய் ஆனாள் படிப்படி யாக அரன்தனக்கே!                       131

சிவனார் வதியும் திருக்கயி லாயத் திருமலைக்குத்
தவமாய் அடைந்த தனிவடி வோடு, தகவுடனே
அவமாம் பிறவி அறுத்தே அரனின் அருட்பதத்தே
நவமாம் செழுந்தமிழ்ப் பாடல்கள் பாடிட நாடினளே!                       132

புயலே அனையப் புறப்பட்  டவுடன் புகழ்க்கயிலை
அயலே அருட்பெரும் மானச ரோவர் அடைந்ததனளே
இயலும் வரையில் இனிதே குளித்தாள், இறைவனது
கயிலை மலையை அடைந்து வணங்கினள் கண்பனித்தே!                 133

காலால் நடந்து கயிலையில் ஏறும் கருத்தொதுக்கி
நாலா புறமும் வணங்கித் தலையால் நடந்துசென்றாள்
ஏலா விதுபோல் இவண்வரு கின்றவர் யாரெனவே
மேலே இருந்தெழில் பார்வதி பார்த்து வினவினளே                       134


அம்மையைப் பாரவள் அன்பினைப் பாரென்  றரன் மொழிந்தே
அம்மையே , வாவெனச் சொல்லி  எழுந்தே அருகணைந்தான்
அம்மையே என்றனை, அப்பா’, எனவே அடிபணிந்தே
எம்மனோர்க் கேற்றங்கள்இத்தனை யாவென் றியம்பினளே!                135

புத்திளம் தேகப் வனப்பினை விட்டுப் பொலிவிழந்தே
இத்தகு பேயென ஏளனம் எத்தனை ஏற்றனையோ?
இத்தனை தூரம் கடந்திங்கு  வந்தனை என்றரனும்
சித்தம் மகிழ்ந்து,, உன்  ‘தேவையைச் சொல்லெனச் செப்பினனே!          136

இத்தரை மீண்டும் பிறவாமை வேண்டும், இனிப்பிறந்தால்
அத்தனே உன்னை மறவாமை வேண்டும், அடியமர்ந்தே
முத்தமிழ் மூலம்நீ, என்தமிழ் கேட்டு முறையுடனே
வித்தக மாய் நட மாடுதல்   என்றைக்கும் நாடுவனே!                    137

தந்தனன் என்றனன் சங்கரன் , அம்மையே, தக்கபடி
சந்ததம் ஆடும் திருவாலங் காட்டினைச் சாரெனவே
வந்தனம் வந்தனம் என்றே அடிகள் வணங்கிடவும்
அந்தப் பொழுதே திருவாலங் காட்டை அடைந்தனளே!                    138

திரிசூலம் தூக்கிச் சிவனா டுகின்ற திருக்களமாய்
எரியாடு கின்ற சுடலைத் தளத்தில் இடங்கொண்டவன்
ஒருமாதும் கூடி உடனாடும் ஆட்டத்தின் உந்துதலால்
திருவாலங் காட்டுத் திருப்பதி கங்களைத் தீட்டினளே!                     139

ஐயன் அடிமலர்க் கீழே அமர்ந்தே அருந்தமிழால்
தையத் தகத்திமித் தாமென அம்மையும் தாமிசைக்க
கையும் சிரமும் கடுவிசைக் கால்களும் கச்சிதமாய் 
வையகம் ஆள்பவன் ஆடுதல் காணுதல் ஆனந்தமே!                      140

பிறவாமை பெற்றாள் பிரானடிக் கீழமர் பேறுடையாள்
மறவாமை என்கின்ற வார்த்தை  அவளின் மடியமர
உறவாக ஆலங்காட் டையன் உளதோர் உயர்வதனால்
இறவாமை பெற்றாள் , இறைவன்  அடியே இருப்பிடமே!                  141
                      

நூற்பயன்

பேயென மாறிப் பெரும்புகழ் பெற்றுப் பிரானவர்க்குத்
தாயென வாகித் தமிழ்க்கவி பாடித் தலமிசையே
தூயநல் வாழ்வு துலங்கிடப் பெற்றவர் தொல்கதையை
ஆயநல்  அன்பால் படிப்பவர்க் கென்றென்றும் ஆனந்தமே!




No comments:

Post a Comment