Saturday, May 11, 2019

எனக்கு வேண்டும் வரம்


எனக்கு வேண்டும் வரம்

இந்தக் கணமே என்கையில்
                இருப்பதாக நான் எண்ணி
வந்து கேட்கும் இக்கணத்தை
                வாழவைக்கும் வரம் தருவாய்
எந்தக் கணமும் பயனின்றி
                இராமல் அம்மா என்றனது
சிந்தை தெளிவாய் இருந்திடவே
                செய்தல் வேண்டும், அதுபோதும்!

வந்து கேட்கும் கணத்தினையே
                வாழ வைத்தல் எவ்வாறு?
அந்தப் போதில் என்செயலால்
                யாருக் கேனும் ஓர்நன்மை
முந்தி வாய்க்கக் கூடுமெனில்
                மூலப் பொருளே, அதுவேண்டும்
சொந்தம், சொந்தம் இவ்வுலகம்
                சொர்க்கம் அதுதான், அருள்வாயே!

எல்லா இடமும் என் இடமே
                எல்லா உயிரும் என்னுயிரே
பொல்லாங் கேதும் இல்லாமல்
                பொய்மை இருளே, தோன்றாமல்
எல்லைக் கோட்டுத் தடையேதும்
                இல்லா வண்ணம் இவ்வுலகம்
நல்லா றாக வாழ்கவென
                நான்சொல் லும்சொல் பலிக்கட்டும்!
என்னொரு சொல்லால் இன்னொரு மனிதன் இன்னல் தீர்க்கக் கூடுமேல்
என்னொரு சொல்லால் இன்னொரு படியில் ஏற ஒருவர்க் கேலுமேல்
என்னுடை எண்ணம் இன்னொரு மனத்தில் எழுச்சி யூட்டக் கூடுமேல்
என்வரம் அதுதான் எனக்கவ் வெல்லாம்  இறைவா, தரநீ கடவாயே!

என்னொரு சொல்லால் வஞ்சகப் பேயை எரித்துக் காட்ட வேண்டுமே
என்னொரு செயலால் பொறிபடு பொட்டல் எழிலாய் மாற வேண்டுமே
என்னுடை எண்ணம் மண்பயனுறவே எதுவும் படைக்க வேண்டுமே
என்வரம் அதுதான் இறைவா எனக்கவ் வெல்லாம் தரநீ கடவாயே!


No comments:

Post a Comment