இயல், இசை, இறை.
சூரியக் குஞ்சொன்று வீரியம் தான்பெற்றுச்
சூட்டினைத் தான்குறைத்து
சுற்றுமொரு கோளென உற்றபுவி யாகவே
தொட்டநிலை தானுலாவி
பேரியக் கத்துடன் காரியம் ஆற்றிடும்
பேற்றினைப் பெற்றபின்னே
பிள்ளையாய் வந்தவன் உள்ளமுயர் மானுடன்
பிள்ளையாய் வந்தவன் உள்ளமுயர் மானுடன்
பேசாது பேசிவந்தான்
சீரியல் கண்களின் நேரியல் நோக்கிலே
செய்திகள் தான் கொடுத்தான்
சிக்கல்கள் நேரவே தக்கதோர் வண்ணமே
செப்பிட வாக்கெடுத்தான்
சாரமாய் அம்மொழி சேரவே பூத்தது
சங்கதி யாய் ‘இயல்' தான்
சால்புள வித்தினை மேல்பயிர் ஆக்கிய
சாதனை அவ்'வயல்தான்
மொழியொன்று மண்ணிலே விழிகொண்டு பார்க்கையில்
மூண்டது சங்கீதமே,
மோனத்திலும் ஒலி ஞானத்தைக் காட்டிடும்
மூலமும் சங்கீதமே
பொழிகின்ற மாமழை வழிகண்டு விழுகின்ற
போராட்டம் சங்கீதமே
பூக்கின்ற முல்லையின் வாக்கில் புறப்படும்
போதமும் சங்கீதமே!
ஒழுகிடும் கூரையில் வழிகின்ற தாரையின்
ஓசையும் சங்கீதமே
ஓயாது பாடிடும் மாயா அலைகடல்
ஓலமும் சங்கீதமே
வழிசென்று சங்கதி மொழிகின்ற எறும்புகள்
வாசிப்பு சங்கீதமே
மண்ணுல கம்தனிப் பண்ணுல கம் என்றும்
மாறாத சங்கீதமே!
அசைந்தோடும் மூச்சிங்கே இசைந்தோடும் மட்டிலும்
ஆசாமி பாடுகின்றான்
ஆலயத்தில் மணிப் பாலயத்தில் தெய்வ
ஆதுரம் தேடுகின்றான்
திசைதோறும் வீசியே இசைபாடும் காற்றோடு
தெம்மாங்கு பாடுகின்றான்
தித்திப்பு மழலையே எத்திக்கிலும் நாதத்
தேனென்றே ஆடுகின்றான்
பசிதீர்ந்த போதிலே அசைபோடும் வார்த்தையில்
பாட்டை அவன்கேட்கிறான்
பக்கத்திலே அவள் வெட்கத்திலே எழும்
பண்ணில் உளம் சேர்க்கிறான்
கசிந்தோடும் நெஞ்சத்தில் ஒசிந்தோடும் ஆட்டத்தின்
கார்வை அவன் கேட்கிறான்
கண்ணுக்குள் கேட்கின்ற பண்ணுக்குள் ளேயிறைக்
காட்சி அவன் பார்க்கிறான்.
இயலென்ன, இசையென்ன , இயல்கின்ற நடமென்ன
எல்லாம் அருளல்லவா?
எப்படி என்றுநாம் செப்பிடும் யாவையும்
ஈசன் பொருளல்லவா?
செயலென்ன, உள்ளத்தின் மயலென்ன யாவையும்
தேவன் முறையல்லவா?
தேர்ந்திடும் வார்த்தையில் ஆர்ந்திடும் உட்பொருள்
சேரும் இறையல்லவா?
பயில்கின்ற நெஞ்சுளே நயங்கொண்டு சேர்த்திடும்
பண்ணாய் அவன்நிறைகிறான்
பாதநடம் கூட்டிடும் நாத நடராசனே
பாவில் நடம்புரிகிறான்
ஒயிலுக்குள் ஒயிலாகி இயல்பாகும் நாதனின்
ஒண்பாதம் போற்றி போற்றி!
உள்ள இயல் இசையாக வெள்ளமெனப் பொழிகின்ற
உன்னதம் போற்றி போற்றி!
No comments:
Post a Comment