Saturday, May 11, 2019

வருவாயே வரலக்ஷ்மி தாயே


வருவாயே வரலக்ஷ்மி தாயே!

எண்சீர்க் கண்ணிகள்

வருவாயே வீட்டுக்குள் வரலக்ஷ்மி தாயே
       மனமார அழைக்கின்றோம்  வரவேண்டும் நீயே!
உருகாத நெஞ்சுள்ளும் உணர்வாக நிற்கும்
        உன்னதமே, தெய்வதமே வரலக்ஷ்மி  தாயே!   
                                        (வருவாயே)
பரிவாக வருபவளே, பரந்தாமன் தேவி
        பக்தருனை அழைக்கின்றோம் உன்நாமம் கூவி
தருவாயே வளமெல்லாம் வரலக்ஷ்மி தாயே
        சரணடைந்தோம் காத்திடுவாய் வரலக்ஷ்மி தாயே!
                                         (வருவாயே)
வாழைமரக் கன்றுகட்டி மண்டபம் சமைத்தோம்
       மாவிலைகள் தோரணமாய் நாற்புறம் அமைத்தோம்
தாழைமடல் மல்லிகையும் சாமந்திப் பூவும்
       தழைத்திருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்வாய் தாயே!  
                                          (வருவாயே)


பெருகிவரும் நற்செல்வம் தரவேண்டும் தாயே
        பிழைசெய்யா மனம்தரவே வரவேண்டும் நீயே
கருமையெழில் திருமாலின் மார்பிலுறைபவளே
              கமலா சனத்தில்வளர் காருண்ய தேவி!
                                          (வருவாயே)

No comments:

Post a Comment