Friday, May 10, 2019

அபிராமி விருத்தம்

அபிராமி விருத்தம்

பதினான்கு சீர் விருத்தம்

அன்னையே அபிராமி ஆனந்த அருள்வாமி
        அமிர்த கட ஈசர் தேவீ
        அன்றாடம் வாழ்விலே திண்டாடும் எங்களை
        ஆதரிக்கும் அம்மையே
உன்னையே பரமென்றே ஓடோடி வந்த எம்
        உள்ளத்திலே ஆடுவாய்
        ஒப்பற்ற இவ்வாழ்க்கை சப்பென்று போகாமல்       உன்னருள் தாலாட்டுவாய்மின்னையே குளிர்வித்து  விழிகளால் காட்டிடும்
        வேதமே வேத முதலே
        வேருக்குள் வேராகி வித்துக்குள் மரமாகும்
        விந்தையே சித்தாந்தமே
தன்னையே நெய்திடும் என்னையே நீவந்து
        சமயத்திலே காத்தனை
        சங்கரி பயங்கரி சாமளை கோமளை
        சாம்பவி தேவி உமையே!

வாக்கிலே உன்னருள் பூக்குமே சொற்பொருள்
        வண்ணமே மாதங்கியே
        வந்துவிழும் வார்த்தைகள் தந்துவிடும் அம்மையே
        மாதா பரமேஸ்வரி
நோக்கிலே தெளிவினைத் தேக்குவாய் ஆக்குவாய்
        நோகாமல்தான் ஊக்குவாய்
        நுண்ணிய நொடிக்குள்ளும் எண்ணிட உன்பதம்
        நூதன மாய்க் காட்டுவாய்
தூக்கமும் சோம்பலும் சோர்வுமே ஆள்கின்ற
        தொல்லைகள் நீ போக்குவாய்
        சூழ்கின்ற கணமெலாம் வாழ்கின்ற கணமாக்கும்
        சூக்குமம் நீகாட்டுவாய்
தாக்கங்கள் ஏக்கங்கள் இனியில்லை துயரில்லை
        சஞ்சலம் ஏதுமில்லை
        சங்கரி பயங்கரி சாமளை கோமளை
        சாம்பவி தேவி உமையே!


No comments:

Post a Comment