Friday, May 10, 2019

குரல்தா பஞ்சகம்


குரல்தா பஞ்சகம்

கவிஞரின் மனைவிக்குப் பேசமுடியாமல் குரல் தடைபட்டபொழுது சென்னை ஆண்டாள்நகர் புவனேஸ்வரி
  அம்மையைக் குரல் தர வேண்டிப்   பாடிய  பாடல்.
லிவிருத்தம்
உலகம் உருளும் உனதா ணையிலே
விலகும் துயரம் விழிபார்க் கையிலே
நிலவைச் சிரசில் நிலைகொண் டவளே
நலமாய்க் குரல்தா புவனேஸ் வரியே!

நிறையே நிதியே நிழலே நிஜமே

மறையே  மகிழ்வே  மணியே  மலரே
இறையே இதமே இசைவிப் பவளே
முறையே  குரல்தா புவனேஸ் வரியே!

அண்டை அயலோ அரிதோ
  எளிதோ
பண்டைப் புதிதோ அறியேன் அறியேன்
தண்டைச் சிலம்புக் கழலே சரணம்
தொண்டைக் குரல்தா புவனேஸ் வரியே!

இம்மா புவனம் இசைவித் துமனச்
 
சிம்மா சனமே திகழ்கின் றவளே
சும்மா எனவே எவரும் சொலவோ
அம்மா குரல்தா புவனேஸ் வரியே!

மாசக் கரமே வதியும்
  வரமே
பூசக் கரமே புதுமின் விரைவே
நேசக் கரமே நிதமே தருவாய்
பேசக் குரல்தா புவனேஸ் வரியே!

No comments:

Post a Comment