Saturday, May 11, 2019


வாராத வள்ளலும் வந்தான்

ஆனந்தக் களிப்பு

வாராத வள்ளலும் வந்தான்இங்கே
வாவெனச் சொல்லித் தரிசனம் தந்தான்

புள்ளாங் குழல்பாடி வருவான் கண்ணன்
        புன்னகை காட்டி நல் நேசம் புரிவான்
கள்ளில் மயங்குவது போலே- நமைக்
        கட்டி மயக்குவான் தன் பார்வை யாலே

என்ன அழகடி கண்ணன்அவன்
        இந்தச் சிலையில் வெண் சந்தன வண்ணன்
மன்னன் அவன் ஒயில் என்னே- ஒளி
        வார்த்திடும் மேனியோ அற்புத மின்னே!

வைத்தகண் வாங்காமல் பார்த்தேன்எழில்
   வண்ணன் திருவடி என்மனம் சேர்த்தேன்
சத்தியம் வந்ததோ மண்ணில்மனச்
   சாந்தம் அளிக்குதோ இன்னிசைப் பண்ணில்

பார்க்கப் பரவசம் பாரீர்- அவன்
        பாதம் பணிந்திட யாவரும் சேரீர்
ஈர்க்கும் அழகின் இமயம்- அவன்
        என்னிடம் சிக்கினான் இந்தச் சமயம்

  18-10-2015


No comments:

Post a Comment