மதுரை மீனாக்ஷி
பதினான்கு சீர் விருத்தம்
கொங்குதிகழ் பூமலர் தங்கிவளர்
கூடலின்
கோமகள் தேவி உமையே
கோலாகலத் தமிழே நாலாபுறம் திகழக்
கொண்டாடும் கூடல் இறையே
திங்கள்முடி எம்பிரான் பங்கில்வளர்
அம்மையே
தேனாட்சி மீனாட்சியே
செந்தமிழ் பேசிடும் பைந்தமிழ்ச் செல்வியே
சித்திரச் சீமாட்டியே
சங்கமுயர் மதுரையில் பொங்குதமிழ்
ஆய்ந்திடத்
தான்விருந்தேற்கு மணியே
சத்தியத் தடாதகை இத்தரை உலாவிய
சக்தியே தேவதேவி
தொங்குமெழில் உச்சியில்
தங்குமுகில் கோபுரச்
சோதியே ஞான வடிவே
சொக்கன்மனம் சொக்கியே சொக்கவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே!
வண்டாடும் தென்பாண்டி மண்டலம்
குண்டலம்
மாவண்டம் முகமண்டலம்
வால்விழிப் பார்வையில் கால்கொளும் செந்தமிழ்
மாதாநின் தாள்மந்திரம்
பண்பாண்ட கூடலின் மண்பூண்ட
பேறுநின்
பாதம் பதிந்ததன்றோ
பாராளும் வேந்தெனத் தாராள மாகவே
பரமன் வதிந்ததன்றோ?
திண்டாடும் நெஞ்சங்கள் கொண்டாட
எத்தனை
சீர்விளை யாடல்களே
தேன்மழை சிந்திடும் வான்பரஞ் சோதியின்
தீந்தமிழ்ப் பாடல்களே
தொண்டாளும் உள்ளங்கள் சூழாது
கள்ளங்கள்
ஜோதியே ஞானவடிவே
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே!
ஓடுகிற இப்புவி கூடுகிற
யாவையும்
ஓடிடச் செய்பவள்நீ
ஓங்குதிரை நீர்ப்புனல் வாங்கிமுகி லாகவே
ஊற்றிடப் பெய்பவள்நீ
பாடுகிற என்மொழி போடுகிற
வார்த்தையில்
பாவமாய் நிற்பவள்நீ
பாவனை யாகவே பாருளோர் கண்முனே
பாசமாய்க் கற்பவள்நீ
தேடுகிற மெய்ப்பொருள் வீடுபெறச்
செய்பொருள்
ஜீவன் உருப்பொருள்நீ
சித்தாந்தம் யாவையும் கொத்தாக வேபதம்
சேர்க்கும் கருப்பொருள்நீ
சூடுபெறு தீயினை நீடுபெறு
கையிலே
சூறையிடு வான்தேவிநீ
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே!
வந்துவிழும் செந்தமிழ் சந்தமியல்
நாடகம்
வளர்கொங்கை மூன்றாக்கினாய்
வந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்
மற்றதை நீபோக்கினாய்
சந்தமுயர் குருபரன் தந்ததமிழ்
கேட்டுநீ
தத்தியே வந்த தத்தை
சன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்
தந்தனை கொத்து முத்தை
சிந்தனையிலே பொருள் வந்தணையச்
செய்தனை
செந்தமிழிலே பெய்தனை
சேல்விழிப் பெண்மையே கோல்நெறி வழுவாத
தெய்வமே மீனாக்ஷியே!
சொந்தமென உன்னையே வந்தனைகள்
செய்பவர்
தோல்வியே காணமாட்டார்
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே!
பெண்மையும் ஆள்வதாய் மண்ணில்
விதைத்ததோர்
பேற்றினைக் கண்டவள்நீ
பித்தனும் உன்மனச் சித்திலே பித்தனாய்ப்
பீடுறக் கொண்டவள்நீ
உண்மையே, தண்ணளி வண்மையே, சிறுமியாய்
ஓர்வேள்வி பூத்தவள்நீ
உலகாளும் நாயகி, நிலபாரம் தாங்கியே
ஓர்குடை காத்தவள்நீ
கண்விழிப் பார்வையில் எண்ணிலா
உயிர்களைக்
காத்துப் பிடித்தவள்நீ
கண்முதல் தேவர்க்கும் பெண்முதல் கௌரவம்
கற்றுக் கொடுத்தவள்நீ
தொண்டர் மனக்குறை கண்டு
பொறுத்திடாச்
ஜோதியே மீனாக்ஷியே
சொக்கனும் சொக்கியே சுற்றிடும் சொக்கியே
சுந்தரி போற்றி போற்றி!
No comments:
Post a Comment