Sunday, May 12, 2019

வாராகி காவடிச் சிந்து


வாராகி காவடிச் சிந்து
 அம்மா அருளே வாராகி – நீ
ஆனந்த அன்புப்ரவாகி- மிக
அருளே தரும் உயர்வானவள் அகமேவொளிர் அருளானவள்
அற்புத வஜ்ஜிர தேகி – நினை
அண்டினோம் அன்புள ராகி

ஓங்கும் மணித்வீப வாசி – அம்மா
உன்னத மாமக ராசி -நீ
ஒளிமிக்கவள்
, அளிமிக்கவள், உரமிக்கவள், திறல்மிக்கவள்
உத்தமத் தேகப்ர காசி- அம்மா
உன்னிடம் வேண்டினோம் ஆசி

ஓர்கையில் உள்ள துலக்கை-  அதை
ஓச்சினால் வீழ்த்து மிலக்கை- நீ
உலகேழையும் புரக்கின்றவள் உறுபோரினில் பறக்கின்றவள்
உத்தமத் தேரில் இருக்கை – உன்கை
உற்றோர்க் கருளும் அறக்கை

புத்தி துலக்கிடும் தேவி – அம்மா
போற்றினோம் உன்பெயர் கூவி -உன்னைப்
புகழாதவர் உணராதவர் அகலாதவர் புகழானவர்.
பூத்திடும் தூமலர் தூவி – உன்றன்
பொன்னடி வீழ்கிறோம் மேவி

உன்னிடம் தந்தனன் பாரம் – இனி
உன்றனின் சித்தப்ர காரம் - அம்மா
உயர்ஞானமே வரவாகவே ஒருவார்த்தை நீ உரைசெய்தருள்
ஒவ்வோர் கணமும் உன்நேரம் – இதோ
உன்றனுக் கென்றன் பா ஆரம்

No comments:

Post a Comment