Sunday, May 12, 2019

வாராகி நவரத்ன மாலை


 வாராகி நவரத்ன மாலை
காப்பு

ஒளிர் வயிரம் நல்முத்து மாணிக்கம், மரகத மோடுயர்ந்த நீலம்
பளபளக்கும் வைடூர்யம் கோமேத கம்புட்ப ராகமொடு பவளம் எல்லாம்
தெளிவுமிக வாராகி நவரத்ன மாலையெனத் தீட்டு தற்கே
களிமிகுந்த கற்பகப்பூங் கணபதியே நீவந்து காப்பா வாயே!

வைரம்
தேறும் திடம் சேரும்கதிர் வைரத்தொளிர் தேகம்
மீறும்திறல் மேலேயெழும் கால்கள்விரை வேகம்
சீறும்சினம் கொண்டேயெமைச் சீறாதருள் வாயே
கூறும்புகழ்ச் சேனாபதி வாராகியெம் தாயே!              1

முத்து
முத்தேறிய சோதிக்கிட மாகும்வளை பற்கள்
சத்தேறிய நேர்த்திக்கிட மாகுமொளிக் கற்கள்
மத்தேறிய வாழ்க்கையிதில் மேன்மையருள் வாயே
கெத்தேறிய சேனாபதி வாராகியெம் தாயே!               2

பவளம்
அம்மாயெழில் தேகந்தனில் ஆரம்திகழ் பவளம்
இம்மாநிலம் மீதுண்கிறேன் நீநல்கிடு கவளம்
எம்மாலினி ஏதுள்ளது
? யாவும்தரு வாயே
செம்மாந்திடும் சேனாபதி வாராகியெம் தாயே!            3

நீலம்
உன்மாமகு டம்தான்தொடும் வானில்விரி நீலம்
என்னேநினைந் துள்ளாய்எனைத் தாங்கியளி சீலம்
முன்னேநினைக் கின்றேன்தெளி ஞானம்தரு வாயே
பென்னம்பெரு சேனாபதி வாராகியெம் தாயே!             4

மரகதம்
அருளே மர கதமேயொளிர் திருமேனியில் உடையாய்
பொருபோரிடைப் புடைமோதிடும் பெருந்தேவியர் படையாய்
வருநாளெலாம் வளநாளென நிறையத்தரு வாயே
ஒருமாதனிச் சேனாபதி வாராகியெம் தாயே!              5

மாணிக்கம்
மாணிக்கமே  போல்செம்மையைக் காட்டும்சினக் கண்கள்
காணிக்கையாய் யான்நல்குவேன் என்பாவுள பண்கள்
நாணிச்செலும் என்வாழ்க்கையில் ஞானம்தரு வாயே
ஆணித்தரச் சேனாபதி வாராகியெம் தாயே!                6

கோமேதகம்
தேன்போலொளிர் கோமேதகம் வேய்ந்தேயொளிர் ஆரம்
தான்சூடிய வாராகியுன் ஆதாரமே சாரம்
ஏன்வந்தனை என்னாமலே நீயேயருள் வாயே
வான்போற்றிடும் சேனாபதி வாராகியெம் தாயே!           7

புட்பராகம்(பூராகம்)
பாராகமும் தேர்ந்தேனிலை பாண்டித்யமும் இல்லை
தாராளமாய் நீதந்திடில் வேறேயிலை தொல்லை
பூராகமே பூண்டோயருள் ஓங்கத்தரு வாயே
போராடிடும் சேனாபதி வாராகி யெம்தாயே!               8

வைடூரியம்
வன்மைப்புலிக் கண்போலொளிர் வைடூரியம் பூண்டோய்
புன்மைக்கெதிர் போராடவே கையாயுதம் ஆண்டோய்
அன்புக்கெதிர் அன்பைத்தரும் அம்மாவருள் வாயே
தன்னேரிலாச் சேனாபதி வாராகியெம் தாயே!               9
நூற்பயன்
வாராகியின் புகழ்பாடிடும் நவரத்தின மாலை
யாராகிலும் கவனத்துடன் மனம்கொண்டிடும் காலை
சேராதநல் வளம்யாவையும் சேர்ந்தேவரும் உண்மை

தீராப்பிணி தீர்ந்தேவிடும் தேகம்பெறும் திண்மை!

No comments:

Post a Comment