Sunday, May 12, 2019

மகாவாராகி ஊஞ்சல் பதிகம்


மகாவாராகி ஊஞ்சல் பதிகம்
ஆடுகிற ஊஞ்சலிது , அழகான ஊஞ்சல்
       அம்மைமகா வாராகி ஆடுகிற ஊஞ்சல்
தேடிவந்து தேவரெலாம் தெரிசிக்கும் ஊஞ்சல்
       சிறப்பாகச் சூலினிகள் பிடிசுற்றும் ஊஞ்சல்
பாடிவரும் கின்னரர்கள் கிம்புருடர் தாமும்
       பக்கத்தில் நின்றரிய பண்பாடும் ஊஞ்சல்
காடுமலை தாம்கடந்தே ஏகிவரும் ஊஞ்சல்
       கன்னியர்கள் மற்றறுவர் களித்தாட்டும் ஊஞ்சல்1
(வாராகி ஏழு கன்னியர்களில் ஒருத்தி. எனவே மற்றறுவர் எனப் போட்டேன். சப்தகன்னியர் எனப்படுவோர்  பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, 

அன்னை லலிதாம்பிகையாள் யாருமறியாமல்
      அழகாகப் பின்நின்றே ஆட்டுகின்ற ஊஞ்சல்
மின்னலிடப் போரிட்ட களைப்பெல்லாம் தீர
     வேண்டிவந்தே யோகினிகள் விரைந்தாட்டும் ஊஞ்சல்
கன்னலெனும் குரலெடுத்து மகாஷ்யாமளாவும்
     கையெடுத்த வீணையுடன் பாப்பாடும் ஊஞ்சல்
சின்னவள் நான் எனச்சொல்லி வாராகி பக்கம்”
       ஸ்ரீபாலாதேவி வந்தே அமர்ந்துகொளும் ஊஞ்சல்2

(போரிட்டுக் களைத்து வந்தவளை அன்னை லலிதாவின் ஏற்பாட்டில் ஊஞ்சலிலேற்றி ஆட்டுகிறார்கள்.  குழந்தைகள் ஊஞ்சலில் ஏறிக்கொள்வது வழக்கம்.  பாலா திரிபுரசுந்தரி, 9 வயதுக்கன்னி. ஊஞ்சலில் ஏறியமர்ந்து கொள்கிறாள். மஹாசியாமளா கையில் வீணையுடன் திகழ்பவள். அவள் தான் மீனாக்ஷி அவள் தான் மாதங்கி. மந்த்ரிணி)


எப்பொழுதும் தயாராக இருக்கின்ற மகிஷம்
     எதிர் நின்றே வாராகி முகம்பார்க்கும் ஊஞ்சல்
அப்பொழுதங் கோபாங்கப் பிரத்யங்க ரெல்லாம்
     அம்மைக்குக் கைங்கர்யம் ஆற்றுகின்ற ஊஞ்சல்
ஒப்பரிய ளாம்தண்ட நாதாவின் தேராம்
      ஓங்குபுகழ் கிரிசக்ரம் உலவுகிற ஊஞ்சல்
முப்புரங்கள் எரித்தவனும் முன்வந்து நின்றே
     முறையாக ஆசிகளை வழங்குகின்ற ஊஞ்சல் 3
(வாராகியின் வாகனங்களில் ஒன்று மகிஷம்.  வாராகியின் அங்க உபாங்க ப்ரத்யங்க  தேவதைகள் கைங்கர்யம் செய்கிறார்கள். . கிரிசக்ரம் – வாராகியின் தேரின் பெயர்)
தன்னுடைய அம்சமெனத் திருமாலும் பூமி
     தாங்கியதைச் சொல்லிமனம் மகிழுகின்ற ஊஞ்சல்
பொன்னவிரும் ஸ்ரீ புரத்தில் ஆடுகிற ஊஞ்சல்
     புரவியிலே ஏறுபவள் போற்றுகிற ஊஞ்சல்
கொன்றிடுவேன் என வந்த விசுக்கிரனை மாய்த்தே
     குவலயத்தைக் காத்திட்ட வாராகி ஊஞ்சல்
மன்னுபுகழ் வாக்தேவி எண்மரங்கே வந்து
      வளர் வரிசை பாடுகிற வாகான ஊஞ்சல்     4
புரவியிலே ஏறுபவள்- அஸ்வாரூடா.  ஸ்ரீ லலிதாவின் ஏற்பாடாகையில் ஸ்ரீ புரத்தில் நடக்கிறது. லலிதோ பாக்யானத்தில் வாராகியால் கொல்லப்பட்டவன் விஷங்கன் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் தேவி மகாத்மியம் அவன் பேர் விசுக்கிரன் என்கிறது. வாக்தேவிகள்.  வஸினி, காமேஸ்வரி, மோதினி ,விமலா, அருணா, , ஜயினி சர்வேஸ்வரி, கௌலினி. )
கேசாதிபாதம்
 கரண்டகமாம் கிரீடமுளோய் ஆடாயோ ஊஞ்சல்
     கருமேகக் குழலுடையோய் ஆடாயோ ஊஞ்சல்
கருணை விழிகொண்டவளே ஆடாயோ ஊஞ்சல
       கலையேன முகமுடையோய் ஆடாயோ ஊஞ்சல்
உருண்ட திருத் தோளுடையோய் ஆடாயோ ஊஞ்சல்
     ஒளியணிகள் பூண்டவளே ஆடாயோ ஊஞ்சல்
பெருந்தனங்கள் கொண்டவளே ஆடாயோ ஊஞ்சல்
,
     பேருலக வயிறுடையாய் ஆடாயோ ஊஞ்சல்  5
(கரண்டகம்- பூக்கூடை போல கவிழ்க்கப்பட் அமைப்பு
ஏனமுகம் -  வராகமுகம்)
ஆயுதங்கள்
சக்கரத்தைத் தரித்தவளே ஆடாயோ ஊஞ்சல்
     தளர்வறியாக் கதையுடையாய் ஆடாயோ ஊஞ்சல்
மிக்கவரும் வாளுடையாய் ஆடாயோ ஊஞ்சல்
      வில்லம்பு கொண்டவளே ஆடாயோ ஊஞ்சல்
தக்கநெடும் உலக்கையினாய் ஆடாயோ ஊஞ்சல்
     தனிக்கலப்பை கொண்டவளே ஆடாயோ ஊஞ்சல்
பக்கமதில் சூலமுளோய் ஆடாயோ ஊஞ்சல்
      பங்கயம்சங் குடையவளே ஆடாயோ ஊஞ்சல்     6
வாராகியின் ஆயுதங்கள்-சங்கு
,  சக்கரம், தாமரை, கதைவில் அம்பு, உலக்கை, கலப்பை, வாள், திரிசூலம்

சுழியியக்க நாபியினாய் ஆடாயோ ஊஞ்சல்
     சுந்தரமாய் இடையுடையோய் ஆடாயோ ஊஞ்சல்
கழிதிறல் கொள் தொடையழகே ஆடாயோ ஊஞ்சல்
     கால்களிலே வேகமுளோய் ஆடாயோ ஊஞ்சல்
பழிதவிர்க்கும் திருவடியாய் ஆடாயோ ஊஞ்சல்
      படைநடத்தும் பாதமுளாய் ஆடாயோ ஊஞ்சல்
வழி கொடுக்கும் வாராகி ஆடாயோ ஊஞ்சல்
      வணங்குகிறோம் திருவடியே ஆடாயோ ஊஞ்சல்
7                 

வார்த்தாளி வாராகி ஆடாயோ ஊஞ்சல்
      வராகமுகி வராகமுகி ஆடாயோ ஊஞ்சல்
நேர்த்தியந்தே அந்தினியே ஆடாயோ ஊஞ்சல்
      நெறிருந்தே ருந்தினியே ஆடாயோ ஊஞ்சல்
சீர்ஜம்பே ஜம்பினியே ஆடாயோ ஊஞ்சல்
      திகழ்மோஹே மோஹினியே ஆடாயோ ஊஞ்சல்
நேர்ஸ்தம்பே ஸ்தம்பினியே ஆடாயோ ஊஞ்சல்
      நெறிகாட்டி ஈர்ப்பவளே ஆடாயோ ஊஞ்சல்.   8

பன்னிருபெயர்கள்
பஞ்சமியே தண்டநாதா ஆடாயோ ஊஞ்சல்
     பரிவுசிவா சங்க்யேதா ஆடாயோ ஊஞ்சல்
மஞ்சுசம யேஸ்வரியே ஆடாயோ ஊஞ்சல்
      மனமுறையும் அரிக்கினியே ஆடாயோ ஊஞ்சல்
அஞ்சொல்மகா சேனாவே ஆடாயோ ஊஞ்சல்
      ஆக்ஞாசக் ரேஸ்வரியே ஆடாயோ ஊஞ்சல்
பஞ்சியொளிர் போத்ரினியே ஆடாயோ ஊஞ்சல்
      பல்சமய சங்யேதா ஆடாயோ ஊஞ்சல்       9

வழக்குகளை வெல்லவைப்பாய் ஆடாயோ ஊஞ்சல்
      வாராகி வார்த்தாளி ஆடாயோ ஊஞ்சல்
சழக்குகளை வேரறுப்பாய் ஆடாயோ ஊஞ்சல்
      தனிக்கனவில் வந்திடுவாய் ஆடாயோ ஊஞ்சல்
அழைப்புகட்குச் செவிசாய்ப்பாய் ஆடாயோ ஊஞ்சல்
     ஆக்கங்கள் நல்கிடுவாய் ஆடாயோ ஊஞ்சல்
இழைத்துநலம் அருளிடுவாய் ஆடாயோ ஊஞ்சல

     எங்கள்மகா வாராகி ஆடாயோ ஊஞ்சல்
              10
Add caption



No comments:

Post a Comment